இதுகாறும் இப்பாடத்தில் உதாத்த அணி, அவநுதி அணி,
சிலேடை அணி, விசேட அணி, ஒப்புமைக் கூட்ட அணி,
விரோத அணி ஆகிய ஆறு அணிகளைப் பற்றி விளக்கமாகப்
பார்த்தோம். செல்வத்தினது உயர்ச்சியையும், உள்ளத்தினது
உயர்ச்சியையும் அழகுபடுத்திக் கூறுவது
உதாத்த அணிஆகும். ஏதேனும் ஒரு பொருளில் உள்ள உண்மைத்
தன்மையை மறுத்துப் பிறிது ஒரு தன்மையை அதன்கண் ஏற்றி
உரைப்பதன் வாயிலாக அப்பொருளுக்குச் சிறப்புச் சேர்ப்பது
அவநுதி அணி ஆகும். ஒரே சொல்தொடரை ஒன்றற்கு
மேற்பட்ட பல பொருள்களைத் தருமாறு அமைப்பது
சிலேடை அணி ஆகும். சிலேடை அணி செம்மொழிச்
சிலேடை என்றும் பிரிமொழிச் சிலேடை என்றும்
இருவகைப்படும். சொல்தொடரில் உள்ள சொற்களைப்
பிரிக்காமல் வைத்துப் பல பொருள் காண்பது செம்மொழிச்
சிலேடை. சொற்களைப் பிரித்துப் பல பொருள் காண்பது
பிரிமொழிச் சிலேடை. குணம், தொழில், சாதி முதலியன
குறைபடுதல் காரணமாக ஒரு பொருளுக்குச் சிறப்புத் தோன்றக்
கூறுவது
விசேட அணி ஆகும். பாடலில் புகழ் பற்றியோ
பழி பற்றியோ அமையும் ஒரு கருத்தை வலியுறுத்திக் காட்ட
சம தன்மை உடைய பல பொருள்களை ஒருங்குக் கூட்டி
உரைத்தல் ஒப்புமைக் கூட்ட அணி ஆகும். பாடலில்
சொற்களையும் பொருள்களையும் மாறுபாடு தோன்ற உரைப்பது
விரோத அணி ஆகும். இவை யாவும் இப்பாடத்தின்
வாயிலாக விளக்கப்பட்டன.