Primary tabs
-
1.0. பாட முன்னுரை
தான் வழிபடும் கடவுளையும் தமிழன் கலை வடிவில் கண்டான். குழலூதும் நிலையில் கண்ணனும், முழவுகொட்டும் நிலையில் நந்தியும் திகழ்வது போல் ஆடற்கலை வடிவில் ஆடல்வல்லான்(சிவன்) திகழ்கிறார். தமிழகத்தின் தனிச்சிறப்பு வடிவமாக இவர் விளங்குகிறார். தமிழர்கள் ஆடற்கலை வல்லமை பெற்றவர்களாக விளங்கினர் என்பதனை இதன் மூலம் அறியலாம்.
· பயிற்சி முறை
தமிழரின் ஆடற்கலையை உலகத்தார் வியந்து போற்றுகின்றனர். தங்களுடைய குழந்தைகளுக்கு இக்கலையைக் கற்றுத் தரப் பலரும் விரும்புகின்றனர். இதற்குரிய தொடக்கப் பயிற்சிப் பாடங்களை அடவுகள் என்பர்.
· ஆடற் கோலங்கள்
அடவுகளின் அடுத்த பரிணாம நிலையாகக் கரணங்கள் விளங்குகின்றன. ஆடலில் எழிற் கோலங்களை இவைகள் காட்டுகின்றன. இவ்வகையில் 108 கரணங்கள் உள. தமிழகத்துக் கோயிற் சிற்பங்களில் இக்கரண நிலைகளைச் சிற்ப வடிவில் நம் முன்னோர்கள் தந்துள்ளனர். கற்கள் எல்லாம் கலை வடிவம் பெற்றுத் திகழ்கின்றன. நாம் கற்று உணர வாய்ப்பளிக்கின்றன.
· ஆண், பெண் ஆடல்நிலைகள்
பெருமையும் உரனும் ஆடுஉ மேன - (பொருள். 95) என்று ஆண் தன்மையின் இலக்கணத்தைத் தொல்காப்பியர் எடுத்துரைத்துள்ளார். ஆண், பெண் தன்மைகள் முறையே கம்பீரமும் நளினமும் கொண்டனவாக அமையும். ஆடல் நிலைகளில் இவைகளைத் தாண்டவம், இலாசியம் என்று குறிப்பிடுவர்.
மொழியின் பங்கு எழுத்து, சொற்களால் மட்டுமே நிறைவு பெறுவதில்லை. பொருளைத் தெளிவுபடுத்த உடலில் உள்ள உறுப்பு அசைவுகளும் முக்கியப் பங்கு பெறுகின்றன. உடலில் கைகளும், கண்களும், கழுத்தும், தலையும், அடிகளும் முக்கியப் பங்கு பெறுவனவாக உள்ளன.
மேற்குறிப்பிட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இப்பாடம் அமைகிறது.