Primary tabs
-
1.4 அவிநயம் (அபிநயம்)
இதனை மெய்ப்பாடு என்பர். ஆடலின் உயிரோட்டமான பகுதி அவிநயமாகும். இது சிற்பக் கலையிலும், ஆடற்கலையிலும் சிறப்பாகப் போற்றப்படுகிறது. இதனை விளக்கி உரைக்கும் நூற்கள் பல உள்ளன. ஆசான் பாடுவதற்கு ஏற்ப தாளக் கூறின்படி கால்களால் தாளப்படி அடைவுபிடித்து ஆடுதலைக் குறிக்கும். அடைவு பிடித்து ஆடுதலும், பாடுவதற்கு ஏற்பத்தான் பாடுவதும், பாடும் பண்ணின் பொருளுக்கேற்ப தலை, கை, கண் போன்ற உறுப்புக்களால் பொருளைத் தெளிவுபடுத்திக் காட்டுவதும் அவிநயம் ஆகும்.
இவ்வகையில் அமையும் அவிநயங்கள் நான்காகும். இவற்றுள் ஒன்றினை, ஆன்மீக அவிநயத்தில் கை, தலை, கண், கழுத்து, கால் நிலைகளால் உணர்த்தப்படும் அவிநய நிலைகளைக் காண்போம்.
கையால் செய்து காட்டப்படும் அவிநயத்தை முத்திரை என்பர். இது ஆடற்கலையிலும், சிற்பக் கலையிலும் முக்கியத்துவம் பெறும். இதனை வடநூலார் வித்தம் என்பர்.
ஆடற்கலையில் கை அமைதியை இருவகையில் கையாள்வர். பொருள் தரும் நிலையில் அமைவதை தொழிற்கை என்றும், பொருள் தாராமல் (நிலை) அழகிற்காக அமைவதை எழிற்கை என்றும் குறிப்பர்.
மேலும் கைகள் பயன்படுத்தும் நிலையை இரண்டு வகைகளாகப் பிரிப்பர். ஒற்றைக் கை பயன்படுத்தப்படுவதனைப் பிண்டி என்றும், இரண்டு கைகளும் பயன்படுத்துவதனைப் பிணையல் என்றும் குறிப்பிடுவர். வடநூலார் பிண்டியை அசம்யுத அத்தம் என்றும், பிணையலைச் சம்யுத அத்தம் என்றும் குறிப்பிடுவர்.
· எழிற்கை
எழிற்கை நிருத்த அத்தம் என்று அழைக்கப்படும். இவ்வகையில் அமையும் கைகள் 16 வகைப்படும் என்பதாக, பரதார்ணவம் என்ற நாட்டிய இலக்கண நூல் குறிப்பிடுகின்றது. உத்விருத்தம் முதலிய பதினாறு வகைகளையும் பரதார்ணவம் குறிப்பிடுகின்றது.
உத்விருத்தம் என்ற எழிற்கை அன்னப்பறவை முத்திரையாக இருகைகளையும் ஒன்றுக்கொன்று எதிராகப் பிரிப்பர். இது அன்னப்பறவைகளின் இணையைக் குறிக்கும். இது எழிற்கையாகப் பயன்படுத்துவதால் கையில் அழகை மட்டும் குறிக்கும்.
· தொழிற்கை
தொழிற்கையைப் பிண்டி, பிணையல் என்று இரு வகையாகப் பிரிக்கப்படுவதைக் கண்டோம்.
· பிண்டி
ஒற்றைக் கை முத்திரையைப் பிண்டி என்பர்.
பிண்டியாக ஒற்றைக் கை முத்திரையில் பதாகை, திரிபதாகை, கத்தரிகை, தூபம், அராளம், இளம்பிறை, சுக துண்டம், முட்டி, கடகம் போன்ற முத்திரைகள் உள.
· பிணையல்
இரட்டைக் கை முத்திரையைப் பிணையல் என்கின்றனர். இதனை அடியார்க்கு நல்லார் இணைக்கை என்கிறார்.
சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் அஞ்சலி, புட்பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோதம் கற்கடகம், சுவத்திகம், கடகாவிருத்தம், நிடதம், தோரம், உற்சங்கம், புட்பபுடம், மகரம், சயந்தம், அபயம், வர்த்தமானம் என்று இவற்றைக் குறிப்பிடுவர்.
தமிழில் உள்ள அபிநய தர்ப்பணம் என்ற ஆடல் இலக்கண நூலும் இதனைக் குறிப்பிடுகின்றது.
· பதாகை
பதாகை என்பது கொடியைக் குறிக்கும். “நான்கு விரலும் தம்முள் ஒட்டி, நிமிதப் பெருவிரல் குஞ்சித்து நிற்பது பதாகை” என்று சிலம்பின் உரை குறிப்பிடுகின்றது. இது குறித்து மகாபரத சூடாமணி,
அங்குலி நாலும் நீட்டி யங்குப் பந்தனை வளைத்த செங்கையைப் பதாக மென்று செப்பினர் (மகாபரத சூடாமணி-164)
எனக் கூறுகிறது.
· அஞ்சலி
அஞ்சலி முத்திரையை மேற்கொள்ளும் பொழுது இரண்டு கைகளையும் கோர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை வணக்கம் செலுத்தப் பயன்படுத்துவர். தலையின் மேல் 12 அங்குலம் உயர்த்தி இறைவனுக்கும், தலை மீது நிற்கத் தேவருக்கும், நெற்றிக்கு நேரே வணக்கம் ஆசானுக்கும், வாயின் நேரில் வைக்கத் தந்தைக்கும், மார்பிற்கு எதிரே வைக்க அந்தணர்க்கும், இடை உந்தியில் வைக்கத் தாய்க்கும் வணக்கம் செலுத்துதலாக அமையும். இது வணக்கத்தையும் குறிக்கும்; விபூதி குழைத்தலையும் குறிக்கப் பயன்படுத்தப்படும். ஆடற்கலையில் இம்முத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆடலில் தலை அசைவு முக்கியமான பங்குபெறும். இவ்வகையில் அமையும் அசைவு நிலைகள் குறித்தும் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.
சமம், உத்வாகிதம், அதோமுகம், ஆலோளிதம், கம்பிதம் போன்ற 19 தலை அசைவுகளை மகாபரத சூடாமணி என்ற நூல் குறிப்பிடுகின்றது.
அசையாது நிற்றலைச் சமசிரசு என்றும், தலையை மேல் நோக்கிப் பார்த்தலை உத்வாகிதம் என்றும், கீழே பார்ப்பதனை அதோ முகம் என்றும், வட்டமாகச் சுற்றலை ஆலோளிதம் என்றும், மேலும் கீழும் ஆட்டுதலைக் கம்பிதம் என்றும் குறிப்பிடுவர். இவை போல ஏனையவையும் அசைவு நிலைகளால் பெயர் பெறுகின்றன.
தொழில் ஆரம்ப நிலையை சமம் என்ற அசைவு உணர்த்தும்; உயரே பார்த்தலை உத்வாகிதம் குறிப்பிடும். மிகுந்த மோகம் துக்கம், நீராடல், வணங்குதல் ஆகியவற்றை அதோமுகம் குறிப்பிடும்.
கண்கள் உடல் உறுப்புகளுள் மிக முக்கியமான உறுப்பாகும். மன நிலைகளை உணர்த்தும் தலை சிறந்த உறுப்பாகவும் அமையும். ஆடலில் கண் அசைவு நோக்கமற்ற பார்வை, ஒளியற்ற பார்வை, களைத்த பார்வை, நாணப் பார்வை, ஐயப் பார்வை, மூடிய பார்வை, பாதி மூடிய பார்வை, சோர்ந்த பார்வை போன்றவைகளை வெளிப்படுத்தும். மகாபரத சூடாமணி என்ற நூல் 36 விதமான கண் அசைவுகளைக் குறிப்பிடுகின்றது.
சமம், ஆலோகிதம், சாசி, பிரலோகிதம், நிமீலிதம் போன்ற 36 கண் அபிநயங்களை நூல்கள் குறிப்பிடுகின்றன.
தேவர்களைப் போல் கண்கள் இரண்டையும் மூட முடியாமல் பார்த்தல் சமம் என்ற கண்ணசைவாகும். இது, தராசு நாட்டிய ஆரம்பம், ஆகாயம், தேவ உருவங்கள், பிறர் காரியங்களை நினைக்கும் சிந்தனை போன்றவற்றைக் குறிக்கும். இமையவர் போலே கண்க ளிரண்டுமூ டாமற் பார்த்தல் சமதிட்டி விநியோ கங்கேள் தராசுதன் னாட்டியாரம்பம் அமலவிண் டேவ ரூப மாச்சரி யங்க ளுக்கும் விமலியே வேறோர் காரிய மேவு சிந்தைக்கு மாமே (மகாபரத சூடாமணி)
கண்ணைச் சுழற்றிப் பார்த்தலை ஆலோகிதம் என்பார். எல்லாவற்றையும் பார்த்தல் குயவனின் சக்கரத்தை இவ்வசைவு குறிக்கும். பக்கங்களில் குறுக்கே பார்ப்பதனைச் சாசி என்பர். இப்பார்வை, கிளி, மீசையை முறுக்கல், அம்பினால் குறி பார்த்தலைக் குறிக்கும். தரையைப் பார்ப்பதனை அவலோகிதம் என்பர். இது நடத்தல், நிழல் பார்த்தல், புராணங்களைப் படித்தல். இவை போல ஏனைய அசைவுகள். பல்வேறு நிலைகளைக் குறிப்பிடுவதாக அமைக்கப்பட்டுள்ளன.
தலை, கண் அசைவுகளைப் போல, கழுத்தின் அசைவுகள் பற்றியும் நூல்கள் குறிப்பிடுகின்றன. பரதார்ணவம் என்ற நாட்டிய இலக்கண நூலில் இவ்வகையான கழுத்தசைவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கூரணம், கம்பிதம், குஞ்சிதம், சமம் என்ற நிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மலர்ந்த நிலையைப் புல்லமும், அசையும் நிலையைக் கூரணமும், துடிக்கும் நிலையைக் கம்பிதமும், சுருங்கிய நிலையைக் குஞ்சிதமும், இயற்கை நிலையைச் சமமும் குறிப்பிடுகின்றன.
பாத நிலை ஆடலில் முக்கியமானதாகும். அடவுகள் நின்ற நிலையிலும். பாதி அமர்ந்த நிலையிலும், முழுமையாக அமர்ந்த நிலையிலும் ஆடப்படுகின்றன. இவற்றை வடநூலார் ஸ்தானம் என்பர். நின்றநிலை, அமர்ந்த நிலை, கிடந்த நிலை என்ற மூன்று வகையான நிலைகளை, பரதர் குறிப்பிடுகிறார்.
மகாபரத சூடாமணி என்ற நூல் பத்துப் பாத நிலைகளைக் குறிப்பிடுகின்றது. சமபாதம், மண்டல பாதம், குஞ்சித பாதம், அஞ்சித பாதம், வடிவம்பு பாதம், தாடித பாதம், நாக பந்தம், சாட்கதி பாதம், கருட நிலைப் பாதம், கிருத்த நிலைப் பாதம் எனப் பத்து வகைப்படும்.
பாதங்கள் இரண்டும் சமமாய் நிற்றல் சமபாதமாகும். ஆசிரியர், மன்னர், பெரியோர், நாட்டிய ஆரம்பம் ஆகியவற்றை இப்பாத நிலை குறிக்கும்.
இரண்டு குதிகால்களை எதிர்த்து வைத்து இடைவெளியாக நிற்றல் மண்டல பாதமாகும். கரி, பரி, கருடன் இவற்றின் மீது ஏறல், கடும்புலிப் பாய்ச்சல், நடன ஆரம்பம் ஆகியவற்றை இது குறிக்கும்.
இரு பாதங்களையும் நிலையாய் ஊன்றி, இரு குதி கால்களையும் உயரத் தூக்கல் குஞ்சித பாதமாகும். கயிற்றின் மீது நடத்தல், புலிப் பாய்ச்சல், மந்திப் பாய்ச்சல் போன்றவற்றை இது குறிக்கும். இவை போன்று ஏனையவையும் அமையும்.
இவ்வாறு பாத அமைதிகளும், அவற்றிற்கான பொருள் நிலைகளும் நூல்கள் வாயிலாகவும், நடைமுறை வழக்காறு முறைகள் மூலமும் கண்டறியப்பட்டு ஆடல் நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.