Primary tabs
-
1.1 அடவு
எந்த ஒரு கலையின் செயற்பாட்டிற்கும் தொடக்க நிலையில் அமையும் சிறப்பான பயிற்சி முறைகளே அடிப்படையாக அமையும். இவ்வகையில் ஆடற்கலையின் செயற்பாட்டிற்குரிய பயிற்சிப் பாடமாக அடவுப் பயிற்சிகள் அமைந்துள்ளன. தஞ்சை நால்வராகிய சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு என்பவர்கள் வழக்கத்திலிருந்த பயிற்சி முறைகளை நிரல்பட அமைத்துத் தந்தனர்.
அடிப்படைப் பயிற்சியை அடவு என்பர். நாட்டியத்தில் இராகம் ஏதும் இல்லாமல் சொற்கட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் உடலசைவு என்று தமிழ் அகராதி இதனைக் குறிப்பிடுகின்றது. அடைவு என்பது முறை என்று பொருள் தரும். ஆடற் பயிற்சியின் ஆரம்ப நடைமுறை அடவு அல்லது அடைவு என்று அழைக்கப்படுகிறது. அடைவு மருவி அடவு ஆயிற்று. இச்சொல் கல்வெட்டில் நிருத்தம் என்று கூறப்படுகிறது.
அடவு என்ற சொல் ஆடலின் ஓர் அளவு என்ற பொருளிலும் வரும். அடவு என்ற சொல் தெலுங்கில் அடுகு என்று வழங்கப்படுகிறது. அடுகு என்ற சொல் ஓர் அடி என்ற பொருளில் வழங்கப்படுகிறது. இது குறித்து ஆடல் இலக்கண நூலான கூத்த நூல்
அடவு அடிதட்ட
உடல் இடக்கையில்
அடிக்கடி அலைந்து
மிடுக்கு இடல் அடவே.
எனக் குறிப்பிடுகிறது.
கைகளின் அசைவுடன் கால்களால் நிலத்தில் தட்டியிடல் அடவு என்கிறது. இதனை முதல் இரண்டு மூன்று காலங்களில் (விளம்பிதம், மத்தியம், துரிதம் எனும் தாள அமைப்புக்கு ஏற்பக்) கை கால்களை அசைத்து, வலப்புறத்திலும், இடப் புறத்திலும் செய்ய வேண்டும் என்று கூத்த நூல் கூறுகிறது. கால் வைப்பு, கை வீச்சு, முக வெட்டு இவைகளை ஒழுங்குபடுத்த அடவுப் பயிற்சி அவசியமாகின்றது. கம்பீரம், நளினம் போன்றவற்றை ஏற்படுத்த இப்பயிற்சி அவசியமாகும்.
· அடவுக்குரிய சொற்கட்டு
அடவுகளை ஆடுவதற்கு ஏற்றாற்போல் சொற்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆடல் ஆசிரியர் இச்சொற்கட்டுகளைக் கூற, ஆடல் பயிற்சி பெறும் பெண் ஆடுவாள். இதற்குரிய பயிற்சிச் சொற்களாக,
தைய்யா தைய்
தைய்யும் தத்த தைய்யும் தாஹ
தத்தெய் தாஹா தித்தெய் தாஹா
என்பவை அமைந்துள்ளன.
· அடவுப்பயிற்சி மேற்கொள்ளும் முறை
அடவுப்பயிற்சி நிலையை மேற்கொள்ளும் பொழுது முழங்கால்களைப் பக்கவாட்டில் திருப்பி, பாதி அமர்ந்த நிலையில், இடுப்புப் பகுதியை நேராக வைத்துக் கொண்டு இருக்க வேண்டும். இதனை அரை மண்டி என்பர். அரைமண்டிப் பயிற்சி, ஆடலுக்குரிய உடல் ஆயத்தப் பயிற்சியாக அமையும். அடவுப் பயிற்சிகள் அனைத்தும் அரை மண்டி நிலையிலிருந்து செய்ய வேண்டும். அடவுப் பயிற்சிகள் தாள அமைதியோடு ஆட வேண்டும். படைவீரர்களுக்குத் தரப்படும் உடற்பயிற்சி முறைபோல ஆடலுக்குரிய பயிற்சிகளாக இவை அமையும்.
ஆடற்பயிற்சியின் தொடக்கப் பயிற்சியான அடவுகள் பன்னிரண்டு வகைப்படும்.
· தட்டடவு
அரை மண்டி நிலையில் அமர்ந்து பாதத்தை நன்கு தரையில் பதியுமாறு மாறி மாறித் தட்டி ஆடுவது தட்டடவு எனப்படும். இத்தட்டடவு மேற்கொள்ளும் பொழுது இரு கைகளையும் தோளிற்கு நேராக நீட்ட வேண்டும். கைகளில் உள்ள கட்டை விரலைச் சற்று மடக்கிக் கொண்டு நான்கு விரல்களையும் வானத்தை நோக்கி நீட்டிக் கொண்டு ஆட வேண்டும். தைய்யா தைய்யா சொற்கள் இப்பயிற்சிக்கு உரியனவாக அமையும்.
· தட்டி மெட்டடவு
தட்டி மெட்டடவு என்பதும் காரணப் பெயராகும். ஒரு பாதத்தைத் தட்டியும் மற்றொரு பாதத்தின் விரல்கள் மட்டும் தரையில் பதியுமாறு பாதத்தைச் சற்று உயர்த்தி, அமையுமாறும் அமைத்து ஆடுவது தட்டி மெட்டடவு ஆகும்.