Primary tabs
-
1.5 தொகுப்புரை
ஆடல் நிலைகள் இப்பாடத்தில் நான்கு நிலைகளாக அமைக்கப் பட்டுள்ளன.
ஆடலின் பயிற்சிப் பாடங்களான அடவு நிலைகளையும், வகைகளையும் முதற்பகுதி உரைக்கின்றது. இப்பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இப்பயிற்சியில் உடற்பயிற்சி செம்மையுறும்; உடலசைவுகளின் மூலம் ஆடல் அழகு பெறும்.
இரண்டாவது பகுதியில் கரணங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஆடலசைவுகள் பொருள் தரும் அவிநயங்களாகின்றன. இக்கரண அமைதியைச் சிற்பங்களில் காணலாம்.
ஆண் பெண் இன நிலையில் ஆடல் நிலையைத் தாண்டவம், இலாசியம் என்று வகைப்படுத்தினர். ஆண் தன்மையும், பெண் தன்மையுமாக ஆடல் நிலைகளை அமைத்த திறன் நமது கலை நுட்பத்தை வெளிப்படுத்தும் நிலையில் அமைந்துள்ளது.
ஆடலின் உயிர்ப்பகுதி அவிநயமாகும். இதனைத் தமிழ் நூலார் மெய்ப்பாடு என்பர். கண், கழுத்து, தலை, கால் அமைதிகள் மெய்ப்பாட்டுக் குறிகளாக அமைந்துள்ளன.
ஆடல் நிலைகள் என்ற இப்பாடப் பகுதி ஆடற்கலை நுட்பங்கள் உணர்த்தும் பகுதியாக அமைந்துள்ளது.