Primary tabs
-
5.4 சோழர் கோயில் ஓவியங்கள்
தமிழ் நாட்டில் சங்க காலத்தில் தோன்றிய ஓவியக் கலை இந்திய நாட்டில் அஜந்தா, பாக் போன்ற இடங்களில் காணப்படும் ஓவியங்களின் கலைத் தன்மைக்கும் தொழில் நுட்பத்திற்கும் இணையாய் இருந்தது. பல்லவர், முற்காலப் பாண்டியர் காலங்களில் வளர்ந்தது. இக்கலை நுட்பம் சோழர் காலத்தில் உச்சக் கட்டத்தை எட்டியது என்பதற்குச் சான்றாய் முதலாம் இராசராசன் எடுப்பித்த தஞ்சைக் கோயில் ஓவியங்கள் உள்ளன.
5.4.1 தஞ்சைக் கோயில் ஓவியங்கள்
முதலாம் இராசராசனின் (கி.பி.985-1014) பெரு வெற்றிகளின் முடிவில் ஆன்மீகத்தின் சிகரமாய்த் தோன்றியது தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில். இதனை இராசராசன் கி.பி.பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டி முடித்தான். இக்கோயில் கருவறையின் உட்புறச் சுவர்களில் இலிங்கத்தினை உட்புறமாய்ச் சுற்றி வருவோர் கண்டு களிக்கும் வகையில் அற்புதமான ஓவியங்களைத் தீட்டச் செய்தான். இவ்வோவியங்களில் சிவபெருமானின் பல்வேறு வடிவங்களையும் தஞ்சையில் பணி புரிந்த ஆடல் மகளிர் நடனங்களையும், சுந்தர மூர்த்தி நாயனாரைச் சிவ பெருமான் ஆட்கொண்ட வரலாற்றையும் வண்ண ஓவியமாக வரையச் செய்தான். இவ்வோவியங்களின் மீதும் கி.பி.17ஆம் நூற்றாண்டில் வரையப் பெற்ற நாயக்கர் கால ஓவியங்கள் தீட்டப் பெற்று இருந்தன. இதனை முதன் முதலில் கண்டறிந்தவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், கோவிந்தசாமி ஆவார். அந்த நாயக்கர் கால ஓவியங்களை அகற்றி, சோழர் கால ஓவியங்களைத் தொல்லியல் துறையினர் வெளிப்படுத்தினர்.
தஞ்சைக் கோயில் ஓவியங்கள்
- தட்சிணா மூர்த்தி ஓவியம்
கருவறையின் தென்புறச் சுவரில் தட்சிணா மூர்த்தியின் மிகப் பெரிய வடிவம் வரையப் பட்டுள்ளது. குரங்குகள், பறவைகள் நிறைந்து விளங்கும் ஆலமரத்தின் அடியில் தென்திசைச் செல்வனாய்ச் சிவ பெருமான் காட்சியளிக்கின்றார். அறமுரைக்கும் அண்ணலின் அடியில், அவர் உரைக்கும் அறத்தைக் கேட்கும் முறையில் தீவிரக் கவனத்துடன் பக்தியுடன் விளங்கும் முனிவர்கள் காணப் படுகின்றனர். சிவ பெருமானுக்கு இடப்புறத்தில் ஆலமரத்திற்கு மேலே நாயுடன் கூடிய பைரவரின் உருவம் காணப்படுகிறது.
- சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு
மேற்புறச் சுவரில், சிவ பெருமான் திருமணப் பந்தலுக்கு வந்து சுந்தர மூர்த்தி நாயனாரைத் தம் அடிமை என்று கூறித் திருவெண்ணெய் நல்லூர்ச் சபையாரிடம் வழக்குரைத்தது, தம் வாழ்வின் முடிவில் சுந்தரர் கயிலை மலையை அடைந்தது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாகத் தீட்டப் பட்டுள்ளன. முதல் காட்சியில் திருமணப் பந்தலில் நடைபெறும் சமையல் காட்டப் பட்டுள்ளது. மேலும் திருமணக் கோலத்தில் நிற்கும் சுந்தரர், அவருக்கு எதிரில் கிழ வேதியராய்த் தாழைக் குடையுடன் தண்டூன்றி அடிமை ஓலையுடன் நிற்கும் சிவ பெருமான் ஆகியோர் காணப் படுகின்றனர். பின்னர் திருவெண்ணெய் நல்லூரில் நடைபெற்ற வழக்கும் அதன் பின்னர் திருவெண்ணெய் நல்லூர்க் கோயிலும் காட்டப் பட்டுள்ளன. அடுத்து வரும் காட்சியில் தில்லையம் பதியை வணங்கும் காட்சி வருகிறது. இறுதியில் சுந்தர மூர்த்தி நாயனார் வெள்ளை யானை மீது கயிலையங் கிரிக்குச் செல்லும் பயணம் சித்திரிக்கப் பட்டுள்ளது. அதன் பின்னர் சுந்தரரின் பயணத்தைக் கேள்விப் பட்டுச் சேரமான் பெருமாள் நாயனார் கடல் வழியாகக் குதிரையின் மீது புறப்பட்டுச் செல்லும் காட்சி உள்ளது.
- ஆடல் மகளிர்
சுந்தர மூர்த்தி நாயனார் வரலாற்றை விளக்கும் ஓவியக் காட்சிக்கு அருகில் ஆடல் மகளிரின் அழகிய நடனக் காட்சிகள் காணப் படுகின்றன. ஆடல் மகளிரின் தொழில் நுட்பமிக்க ஆடல் காட்சியும், எண்ணத்திற்கு அடங்கா அவர்களது உடல் வனப்பும் அழகிய முறையில் தஞ்சைக் கோயில் ஓவியத்தில் காட்டப் பட்டுள்ளன.
- சிற்றம்பலக் காட்சி
தஞ்சை ஓவியத்தில் சிவ பெருமான் அம்மையுடன் நடனமாடும் தில்லை நடனக் காட்சி உள்ளது. ஓடுகள் வேய்ந்த பொன்னம்பலம் இன்றிருப்பது போன்று காணப்படுகிறது. தாடியுடன் விளங்கும் ஓர் அரசன் தன் தேவியர் மூவருடன் பொன்னம்பலத்தை வழிபடுகின்றான். இவ்வுருவத்தை இராசராசன் மற்றும் அவனது தேவியர் என்று கருதுகின்றனர். இவ்வோவியத்திற்கு அருகில் தில்லைக் காளியின் உருவமும் வரையப் பட்டுள்ளது. ஓவியத்தில் தாடியுடன் விளங்கும் ஒரு துறவியின் அருகில் மன்னனின் உருவம் ஒன்று உள்ளது. இவனை இராசராசன் என்றும், இவனுக்கு அருகில் இருக்கும் துறவியினைக் கருவூர்த் தேவர் என்றும் கருதுகின்றனர். கருவூர்த் தேவர் தஞ்சைக் கோயிலைப் பாடிய சைவப் புலவர் ஆவார். தஞ்சை ஓவியத்தில் சட்டையணிந்து ஆயுதங்களுடன் நிற்கும் சோழர் காலத்து வீரர்களும் காணப் படுகின்றனர்.
- திரிபுராந்தகர், இராவண அனுக்கிரக மூர்த்தி
இறுதியாக முப்புரம் எரித்த விரிசடைக் கடவுளான திரிபுராந்தகரின் உருவம் மிகப் பெரியதாக ஓவியத்தில் தீட்டப் பட்டுள்ளது. நான்முகன் தேர்ப்பாகனாக அமர்ந்து சிவபெருமானின் தேரினை ஒட்டிச் செல்கின்றார். அவரோடு விநாயகர் மூஞ்சூறு வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் செல்கின்றனர். தஞ்சைக் கோயில் ஓவியத்தில் கயிலையங் கிரியைப் பெயர்த் தெடுக்க முனைந்த இராவணன் முயற்சியையும், அவன் தோல்வியை ஏற்று அவனுக்கு அனுக்கிரகம் செய்த சிவ பெருமானையும் (இராவண அனுக்கிரமூர்த்தி) காண முடிகிறது. தமிழ்நாட்டில் காஞ்சி, சித்தன்ன வாசல் போன்ற இடங்களில் காணப்படும் தலைசிறந்த ஓவியக் கலையின் தொடர்ச்சி தஞ்சைக் கோயிலோடு உச்ச நிலையை அடைந்து நின்று விடுகிறது. அதன் பின்னர், தமிழ்நாட்டில் கோயில்களில் காணப்படும் ஓவியங்கள் எண்ணிக்கையிலும் அளவிலும் அதிகமாய் இருந்தாலும் உயர்தரமுடைய ஓவியங்களாக இல்லை என்றே கூறலாம்.