தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விசயநகர வேந்தர் காலக் கோயில் ஓவியங்கள்

  • 5.6 விசய நகர வேந்தர் காலக் கோயில் ஓவியங்கள்

        தமிழ்நாட்டில் கி.பி.15-16 ஆம் நூற்றாண்டில் விசய நகர வேந்தர்களின் ஆட்சி நடைபெற்ற போது கோயில்களில் வரையப் பட்ட ஓவியங்கள் பல ஊர்களில் காணப் படுகின்றன.     திருவண்ணாமலை,     திருவரங்கம், திருவெள்ளறை, அதமன் கோட்டை, காஞ்சிபுரம், திருமலை, திருவலஞ்சுழி, திருப்புடை மருதூர் முதலிய இடங்களிலுள்ள கோயில்களில் விசய நகர வேந்தர் காலத்து ஓவியங்கள் காணப் படுகின்றன.

  • திருவண்ணாமலைக் கோயில் கோபுர ஓவியம்
  • திருவண்ணாமலை பதினொரு நிலைக் கோபுரத்தின் உட்புறத்தில் விசய நகர வேந்தர் தமது மெய்க்கீர்த்தியில் சிறப்பித்துக் கூறும் கஜ வேட்டைக் காட்சி சித்திரிக்கப் பட்டுள்ளது.     இவ்வோவியத்தின்     ஒரு     பகுதியில் இக்கோபுரத்தினைக் கட்டிய கிருஷ்ண தேவ ராயரின் அதிகாரி செல்லப்ப நாயக்கர் உருவமும் உள்ளது. திருவண்ணாமலைக்     கோயிலில் யானை கட்டும் மண்டபத்தில் சிவ பெருமான் உமையை மணந்த வரலாறும் பாற்கடல் கடையும் காட்சியும் வண்ண ஓவியமாக உள்ளன.

  • காஞ்சி வரதராசப் பெருமாள் கோயில் ஓவியம்
  • திருவெள்ளறை புண்டரிகாட்சப் பெருமாள் கோயில் சித்திர மண்ட பத்தில் இராமாயணத்தில் கிட்கிந்தா காண்டம் தொடங்கி இலங்கைக்கு வானர வீரர்கள் சென்று சீதையைக் சந்திக்கும் வரையிலான காட்சிகள் ஓவியமாகத் தீட்டப் பட்டுள்ளன. வாலியும் சுக்கிரீவனும் போரிடுதல், இராமன் மறைந்திருந்து வாலியின் மீது அம்பு தொடுத்தல், இராமன் மரா மரத்தினை வீழ்த்தல், அனுமன் இலங்கை அரக்கியின் வாய் வழியாக நுழைந்து காது வழியாக வெளியேறுதல், அனுமன் சீதையை அசோக வனத்தில் சந்தித்தல் போன்ற காட்சிகள் மிகப் பெரிய ஓவியமாகத் தீட்டப் பட்டுள்ளன. இவ்வோவியங்கள் தற்போது அக்கோயிலில் இல்லை. திருப்பணியின்போது     அழிவுக்கு     உள்ளாகிவிட்டன. திருவரங்கத்தில் கொடிக் கம்பத்திற்கு அருகிலுள்ள மண்டப விதானத்தில் இராமாயணத்தின் தொடக்கக் காட்சிகள் ஓவியமாக உள்ளன. காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயில் கருவறையைச் சுற்றி நூற்றெட்டுத் திவ்வியத் தேசங்களை விளக்கும் வண்ண ஓவியங்கள் உள்ளன.     

  • அதமன் கோட்டை, திருவலஞ்சுழி ஓவியங்கள்
  • தருமபுரி மாவட்டம், அதமன் கோட்டைப் பெருமாள் கோயில் முன் மண்டபத்தில் இராமாயண ஓவியங்கள் காணப் படுகின்றன. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவலஞ்சுழி கோயிலில் சிவ பெருமான் நடனக் காட்சியும் திருமால், நான்முகன், பிட்சாடனர், இரதி மன்மதன் ஆகியோரது உருவங்களும் ஓவியமாக உள்ளன.

        

  • திருப்புடை மருதூர் ஓவியம்
  • திருநெல்வேலி மாவட்டம் திருப்புடை மருதூரில் சிவன் கோயில் கோபுர     நிலைகளில் அறுபத்து நான்கு திருவிளையாடல் புராணக் காட்சிகளும், விசய நகர வேந்தர் படையெடுப்பின் அணிவகுப்பும் அழகுற ஓவியமாகத் தீட்டப் பட்டுள்ளன. இவற்றில் அரபியரின் குதிரை வணிகமும் ஓவியமாக இடம் பெற்றுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:22:18(இந்திய நேரம்)