Primary tabs
-
5.8 தொகுப்புரை
சங்க காலத்தின் இறுதியிலிருந்து கோயில்களில் வண்ண ஓவியங்களை வரைந்து வைக்கும் வழக்கம் வந்துள்ளது. இவற்றின் தொழில் நுட்பமும் பொருளும் காலந்தோறும் மாறுபட்டுள்ளன. பல்லவர், பாண்டியர், சோழர் காலத்து ஓவியங்கள் இந்திய நாட்டின் பழமையான மரபில், அடித்தளமும் வண்ணங்களும் அதிக நாட்கள் இருக்கும் முறையில் உருவாக்கப் பட்டுள்ளன. வெண்சுதையின் மீது தீட்டப் பட்டுள்ள ஓவியங்கள் ஓவியக் கலைஞர்களின் திறமையையும் உயர் கலைத் தரத்தையும் உணர்த்துகின்றவையாய் உள்ளன. விசய நகர நாயக்கர் காலத்து ஓவியங்கள் அளவு குறைந்த, மெல்லியதான அடித்தளத்தில் மிகப் பரந்து பட்ட முறையில் தொழில் நுட்பம் குறைந்தவையாய்க் காணப் படுகின்றன. இதனால் இவ்வோவியங்கள் காலப் போக்கில் மங்கியும் அழிவுக்கு ஆளாகியும் உள்ளன.
தமிழ்நாட்டில் காலம் தோறும் ஓவியத்தில் இடம் பெறும் காட்சிகளின் பொருளும் காலத்திற்கு ஏற்றவாறு மாறுபட்டுள்ளது. இராமாயணம் போன்ற இதிகாசங்கள் மிகப் பழங்காலத்திலிருந்து இடம் பெற்றுள்ளன. பல்லவர், பாண்டியர், சோழர் காலங்களில் சைவத்தின் எழுச்சியைக் காட்டுகின்ற முறையில் சிவனது திருக்கோலங்களும் சைவ அடியார்களது வரலாறும் கோயில்களில் இடம் பெற்றுள்ளன. இக்காலத்தில் மறுமலர்ச்சி அடைந்த சமண சமயப் புராணக் காட்சிகளும் ஆங்காங்கே உள்ள கோயில்களில் இடம் பெற்றுள்ளன. இதனையடுத்து இறைவனது திருவிளையாடல் காட்சிகளும், கோயில் தலபுராணங்களும் சைவ நாயன்மார், வைணவ ஆச்சாரியர் வரலாறுகளும் கோயில் ஓவியங்களில் காணப்படுகின்றன. நாயக்கர், மராட்டியர் காலத்தில் இவ்வகை ஓவியங்கள் இடம் பெற்றன. எல்லாக் காலத்து ஓவியங்களும் அக்கால மக்களின் ஆடை, ஆபரணங்கள், பழக்க வழக்கங்கள், தொழில்கள், சமூக மரபுகள், சமய மரபுகள், அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றைத் தெரிவிக்கும் காலக் கண்ணாடியாக விளங்குகின்றன.
1.தஞ்சைக் கோயில் ஓவியம் எந்தச் சைவ அடியாரின் வரலாற்றைக் கூறுகிறது?2.ஸ்ரீரங்கத்திலுள்ள வேணு கோபால சுவாமி கோயில் விதானத்தில் எத்தகைய ஓவியம் காணப்படுகிறது?3.விசய நகர வேந்தர் கால ஓவியங்கள் தமிழ் நாட்டில் எவ்விடங்களில் உள்ளன?4.சிதம்பரம் சிவகாமியம்மன் கோயில் முன் மண்டப விதானத்தில் எத்தகைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன?