Primary tabs
-
சம்பந்தரும் அப்பரும் சமகாலத்தவர். இவர்கள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தனர். சம்பந்தர் சிறு பிள்ளையாகவும் அப்பர் வயது முதிர்ந்தவராகவும் இருந்ததால் இருவரும் சந்தித்தபோது பாலகனான சம்பந்தர், "அப்பரே" என்று நாவுக்கரசரை அழைத்து மகிழ்ந்தார்.
தேவார மூவருக்கும் முன்னோடியாக விளங்கினார் காரைக்கால் அம்மையார் பதிகம் என்னும் பாடல் வகையில் இவர் தெய்வத்தைப் பண்ணிசையில் பாடி வழிகாட்டினார். இவர் பாடிய பதிகங்கள் "மூத்த திருப்பதிகங்கள்" என்று அழைக்கப்படும். அம்மையார் வாழ்ந்த காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டாகும்.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். அதனால் இவர்கள் முறையே ஆளுடைய பிள்ளை, ஆளுடைய அரசு, ஆளுடைய நம்பி என அழைக்கப்பட்டார்கள். (ஆளுடையான் = அடிமை கொண்டவன், பிள்ளையாகிய ஞானசம்பந்தரை இறைவன் அடிமை கொண்டதால் ஆளுடைய பிள்ளை என அழைக்கப்பட்டார் திருநாவுக்கரசர் பெயரின் பிற்பகுதியை இணைத்து ஆளுடையவரசு. நம்பி = ஆடவர்களில் சிறந்தவனைக் குறிக்கும். அதனால் ஆளுடைய நம்பி எனச் சுந்தரர் வழங்கப்பட்டார்)
இவர்கள் பாடிய தேவாரங்கள் "தமிழ் வேதம்" என்று போற்றப்படுகின்றன.
இனி இம் மூவரது வாழ்க்கைப் பின்னணியைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.