Primary tabs
-
2.0 பாட முன்னுரை
மக்கள் தம்மைச் சூழ்ந்துள்ளனவாகவும், தமக்குத்
தேவையானவையாகவும் அமைந்த இயற்கைப் பொருள்களைத்
தொன்மைக் காலத்தில் வணங்கி வந்தனர். அந்த வணக்கம்
பொதுவாக அச்சத்தின் காரணமாக ஏற்பட்டது என்பது முடிந்த
முடிவாகும். தொன்மைச் சமயமான சைவ சமயத்தின்
தொடக்கமும் இந்த அடிப்படையிலேயே அமைந்தது எனலாம்.
எனவே தமிழ் மக்கள் அச்சத்திலிருந்து மீள்வதற்காக நெருப்பு,
காற்று, மழை, சூரியன் ஆகிய இயற்கைப் பொருள்களை
வணங்கினர். இந்த வணக்கமே பக்தியாக மாறியது. பின்னர்
இந்தப் பக்தி வளர வளர, மனிதனிடத்தில் அறிவு வளர வளர,
எல்லாவற்றிற்கும் மலோன ஒரு பெரிய ஆற்றல் ஒன்று உண்டு
என்பதைத் தெளிந்து, அப்பெரிய ஆற்றலை வழிபட்டனர்.
அவ்வழிபாட்டின் தொடக்கமே சைவ சமயம் என்ற ஒரு
இயக்கம் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது. அந்தப்
பேராற்றலுக்குச் சிவன் என்று பெயர் கொடுக்கப் பெற்றது.
அப்பேராற்றலின் மறுவடிவங்களாகச் சிறு தெய்வ வழிபாடுகள்,
பின்னர்த் தோன்றின. அச்சிறு தெய்வ வழிபாடுகளில்
சடங்குகள் பெருகின. அச்சடங்குகளே பக்தி இயக்கங்களாக
மாறின. எனவே பக்தி இயக்கம் என்பது தெய்வ உணர்வால்
மக்கள் மேற்கொண்ட வழிபாட்டு முறைகளை வகுப்பதாகக்
கொள்ளலாம். இயக்கம் என்பது செயல்முறைகள் எனப்
பொருள்படும்.
அந்தப் பக்தி இயக்கங்களாம் வழிபாட்டுச் செயல்
முறைகள் தமிழர்களின் வாழ்வில் ஒரு பகுதியாக அமைந்தன.
அத்தகைய பக்தி இயக்கத்தைப் பற்றியுள்ள குறிப்புகளை
இப்பாடத்தில் அறிய உள்ளோம்.