தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU

 

முகவுரை

தென்மலை யிருந்த சீர்சால் முனிவராகிய அகத்தியரின் முதன் மாணாக்கராகிய ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனாரியற்றிய தொல்காப்பியத்துக்கு உரைசெய்தார், இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடனார் எனப் பலராவர். அவருள் சேனாவரையர், தெய்வச்சிலையார்,கல்லாடனார் எனும் மூவருஞ் செய்தவுரைகள் சொல்லதிகாரம் ஒன்றற்கேயுள்ளன. நச்சினார்க்கினிய ருரை எழுத்ததிகாரத்திற்கும், சொல்லதிகாரத்திற்கும், பொருளதிகாரத்தின் மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் நீங்கலாக ஏனை ஆறியல்களுக்கும் இப்போது காணப்படுகின்றது. பேராசிரியருரை பொருளதிகாரத்தின் பின் நான்கியல்களுக்குமே இப்போது காணப்படுகின்றது. நூல் முழுவதற்குங் காணப்படும் உரை இளம்பூரணருரையே. அவ்வுரைகளுள், நச்சினார்க்கினியர் செய்த எழுத்ததிகாரவுரையும் சேனாவரையர் செய்த சொல்லதிகாரவுரையும் சில திருத்தங்களோடும் உரைவிளக்கக் குறிப்புக்களோடும் முன் எம்மால் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டன. அடுத்த பொருளதிகாரத்துப் பின் நான்கியல்களுக்குமுள்ள பேராசிரியருரையே பல திருத்தங்களோடும் உரைவிளக்கக் குறிப்புக்களோடும் இப்போது எம்மால் அச்சிட்டு வெளிப்படுத்தப்படுகின்றது. பொருளதிகாரத்து முன் ஐந்தியல்களுக்குமுள்ள உரையே இப்பொழுது அச்சிட்டு வெளிப்படுத்தப்படவேண்டியது முறையாமாயினும், பின் நான்கியல்களுக்குமுள்ள பேராசிரியருரை, மதுரைச் தமிழ்ச் சங்கத்தாராலும் இந்நாட்டு ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தாராலும் நடாத்தப்படும் பண்டித பரீக்ஷைப் பாடநூல்களுளொன்றாக இப்பொழுது நியமிக்கப்பட்டிருக்கின்றமையானும், அவ்வியல்களினுரையே படிப்போர் எளிதில் விளங்கிக்கொள்ளமுடியாதிருத்தலானும், அதனையே முன் அச்சிட்டு வெளிப்படுத்துவது நலமென்று பலரும் வேண்டிக்கொண்டமையானே அதனை முன்னர் வெளிப்படுத்த எண்ணினேம். முன்னியல்களி னுரையும் பின்னர் அச்சிட்டு வெளிப்படுத்தப்படும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 19:04:44(இந்திய நேரம்)