Primary tabs
போலித் துறவு அன்மையின், ‘மெய்க் குணதரன்‘ என்றார். அரசன் ஒருவன் துறந்தான் என்னின் அத்துறவைக் கண்ட ஏனைய அரசரும் துறவுமேற் கொள்ளுதல் இயல்பாதலின், அசோகன் துறவைக்கண்டு அரசர்நூற்றுவர் துறந்தனர் என்க. ஐம்பதின் இரட்டி நூறு இதனை,
வாதிராஜர் கூறியதாலு முணரலாம். தவத்துருவு-திகம்பர வடிவு; (யதா ஜாதருபம்) அரசர்க்குரிய ஆடை அணிகலன் முதலியவற்றை நீக்கி, திக்கை ஆடையாக உடையனாதல். இதனை யத்யாசாரம் என்னும் நூலில் பரக்கக் கூறுவதனாலறிக. வரை-மூங்கில் எனினுமாம்.அரோ, அசை. (11)
யசோதரன் அரசியல்
(இ-ள்.) எரிமணி-ஒளியுள்ள இரத்தினங்கள், இமைக்கும்-இடைவிட்டொளிருகின்ற, பூணான்-ஆபரண மணிந்தவனும்; இருநிலத்துக்கு-பெரிய இஞ்ஞாலத்திற்கு, ஒருமணி திலதம் போலும்-ஒப்பற்றதொரு அழகிய திலதம் போன்ற - உஞ்சயினிக்கு உஜ்ஜயினிமா நகரத்திற்கு, நாதன்-தலைவனும் (ஆகிய), இசோதரன்-யசோதரனென்பான், அருமணி முடிகொள் சென்னி அரசு-சிறந்த மணிகள் பதிக்கப்பட்ட முடியணிந்த சிரசுடைய அரசர்களை, அடிப்படுத்தி-(தனக்குக்) கீழ்படியச் செய்து, உயர்ந்த-சிறந்த, குருமணிக் குடையின் நீழல்-நிறமமைந்த மணிகள் பதிக்கக்பெற்ற வெண்கொற்றக் குடையின் நீழலின் கண்(இருந்து), குவலயம் காவல் கொண்டான்-உலகங்காத்தலாகிய தொழிலை மேற்கொண்டான். (எ-று.)