Primary tabs
உறவின் முறையாரை உடன்படச் செய்துகொண்டுதுறவுக்குச் செல்லுதல் மரபாதலின், ‘அரசினை விடுப்ப வெண்ணித் தாயமர் கோயிலெய்தி... இறைஞ்ச‘ என்றார்.
ஏறு, சிங்கம் என்னுஞ் சொற்கள் சிறந்தவன் என்றுகுறிக்கும்.
சந்திரமதி ஐயுறல்.
(இ-ள்.) அணி முடி அரசர் ஏறே -அழகிய முடியை யுடைய அரசர்களுள் சிறந்தவனே, ஐய-ஐயனே, தோன்றல் - மைந்தனே, மணிமருள் உருவம் வாடி - மாணிக்கம் போன்ற நிறத்தையுடைய சரீரத்தினது ஒளி குறைந்து, வதன பங்கயமும் மாறா - தாமரைமலர் போன்ற முகமும் மாறி, அழகு அழிந்து உளது - (உனது)அழகுகெட்டிருக்கின்றது, இது என் கொல் - இதற்குக்காரணம் யாது? எனது நெஞ்சில் - எனது மனத்தே,(நின்வாட்டம்), பிணி என - ஏதோ பிணிபோலும் என்று, பெருநவை உறுக்கும் - பெரியதோர் துன்பத்தைத்தருகின்றது. துணியலென் - தெளிய முடியாதவளாய் இருக்கின்றேன். நீ --, உணரச் சொல்வாய் - அவ்வாட்டத்தின் காரணத்தை யான் உணரும்படி உரைப்பாயாக,என்று சொன்னாள் --, (எ-று.)
சந்திரமதி யசோதரனைப் பார்த்து, ‘நின் உருவம்வாடி, வதனம் மாறி, அழகு அழிந்து உளது; அதன் காரணம் யாது? என்றாளென்க.
இனி, பிணியென எனது நெஞ்சிற் பெருநவையுறுக்கும் என்பதற்கு, நோயைப்போல எனது நெஞ்சிற்பெரிய துன்பத்தை யுண்டாக்கு மென்றும் உரைக்கலாம்.