தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium




- 265 -

காட்சியுடையான்,  இறைவனென வுணரற் பாற்று‘ என்றுஅருங்கலச் செப்பில் கூறியது ஈண்டு அறிதற்பாலது. விரதம் மேற்கொள்வார் செற்றம் முதலியன நீக்குதல்முறை ஆதலின், ‘செற்றமும் சினமும் நீக்கி‘ என்றார். ஆசை முதலிய குற்றங்களும் இங்கு அடங்கும். செற்றம் -வைரங்கொண்டுள்ள பகைமை: சினம் - புதிதாக ஏற்படும் கோபம்.  முன்னம் பகர்ந்தன என்றது 235, 236 ஆங்கவிகளில் கூறியவற்றை.  விரதம் முதலியன ஆசார்யரிடமே கைக்கொள்ளுதலியல்பு.  பெரும்பயன் - வீடுபேறு. (27)

247. 
கேட்டலு மடிகள் வாயிற் கெழுமிய மொழிக டம்மைக்
 
கூட்டினு ளிருந்த மற்றக் கோழிகள் பிறப்பு ணர்ந்திட்
 
டோட்டிய சினத்த வாகி யுறுவத முய்ந்து1 கொண்ட
 
பாட்டருந் தன்மைக் தன்றே2 பான்மையின் பரிசு தானும்.

(இ-ள்) அடிகள் வாயில் கெழுமிய மொழிகள்தம்மை - அகம்பன முனிவரரின் அருள்நிறைந்த அறவுரைகளை, கூட்டினுள் இருந்த -(சண்டகருமனுடைய)  கூட்டில்தங்கியிருந்த, அக்கோழிகள் கேட்டலும் - (முன் யசோதரனும் தாயுமாயிருந்த)  அந்தக் கோழிகள் கேட்டபொழுதே,பிறப்பு உணர்ந்திட்டு - (தமக்கு ஏற்பட்ட பழம் பிறப்பு அறிதற்கு ஏற்ற உணர்வினால்) தங்கள் முற்பிறவிகளை யுணர்ந்து, ஒட்டிய சினத்த ஆகி - (அமிர்தமதியிடமிருந்த)  கோபத்தைவிட்டனவாகி, உறு வதம் - (தமக்குப்) பொருந்திய (அணு)விரதத்தினை, உய்ந்துகொண்ட - (தாங்கள்) உஜ்ஜீவித்தற்காக ஏற்றுக்கொண்டன:  பான்மையின் பரிசு தானும்  -  நல்லூழின் தன்மைதானும்,  பாடுஅருந்   தன்மைத்துஅன்றே - சொல்லுதற்கரிய பெருமையோடு  கூடிய தன்மையதன்றோ?

கோழிகள் பான்மையால் விரதம் மேற்கொண்டன வென்க.

‘அடிகள் வாயிற் கெழுமிய மொழி‘ என்றது, மொழி மட்டும் அன்றி அம்மொழியை மொழிந்த முனிவரது பெருமையும் தோன்றுதற் பொருட்டு,

 

1 உயர்ந்து.

2 தன்மேற்

 




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:27:35(இந்திய நேரம்)