Primary tabs
திருந்தான் என்று கொள்ளப்படும். மிசை - மேல். கடாவுதல் - செலுத்தல். வரிசை - முறை கிராமம். (35)
(இ-ள்.) நூல் படு வலைப் பொறி முதல் - (உயிர்கள் படுதற்குக் காரணமான) நூலால் சமைத்த வலையாகிய யந்திரங்கள் முதலாகவுள்ள, கருவி நூற்றோடு - படைக்கருவிகள் பலவற்றுடன். ஏற்று - கைக்கொண்டு, இடை எயிற்று ஞமலிக்குலம் இரைப்ப - இடையே (கூரிய) பற்களையுடைய வேட்டை நாய்களின் கூட்டம் குரைக்க, நாற் படைகடல்நடு - நால்வகைச் சேனைப்படைகளாகிய கடலின் நடுவே, நடுச்செய் நமனேபோல் - ( பிராணிகள் திறத்தில்) நடுவு நிலையுடனே தன் தொழிலைச் செய்கின்ற யமனைப்போல, அரசன் - வேந்தனாகிய யசோமதி, வேல் படை பிடித்து - வேலாயுதத்தைக் கையில் ஏந்தி, வேட்டையின் விரைந்தான் - வேட்டையாடுதற்கு விரைந்து சென்றான். (எ-று.)
அரசன், சேனையுடன் வேட்டைக்குச் சென்றானென்க
பொறி - பிராணிகளை அகப்படுத்தும் பொறி : யந்திரம். கருவி, வேட்டைக்கு வேண்டிய கருவிகள்: குந்தம் ஈட்டி முதலியன. நூறு - ஈண்டு பலவென்னும் பொருளது.ஏற்றிடை யென்பதை இடை ஏற்று என மாற்றி, பிராணிகளை இடையில் எதிர்த்து எனினுமாம். நாற்படை: யானை, தேர், குதிரை, காலாள் என்பன. சேனைகளைக் கடலாகக் கூறுதல் மரபு. ஞமலி: திசைச்சொல். யமனுடைய பெயர் நடுவன்: சமவர்த்தி எனவும் கூறப்படும். (36)
1