Primary tabs
வாழ்த்தி - தவவேந்தராகிய சுதத்தமுனிவரைத் துதித்து, துணிவினர் - துணிவுடையவராய், துறந்து -அகப்பற்று புறப்பற்றுக்களை நீக்கி, மூவார் தொழுது எழும் - தேவரும் வணங்கி யெழும், உருவம் கொண்டார். (திகம்பர) வடிவத்தை மேற்கொண்டார். (எ-று.)
யசோமதியும் மற்றும் பலரும் தீக்ஷைகொண்டாரென்க.
உறுதி சூழ்ந்தவனாதலின் உயிர்த்தோழனென்றார். மூவார்: மூப்பு அடையாதவர்: தேவர் ‘மூவார் தொழு தெழும் வடிவங்கொண்டார்’ என்று (மேரு. 874) வாமன முனிவரும், ‘மூவா வமரர’ என்று (சீவக 3036) திருத்தக்க தேவரும் கூறியனவறிக. துணிவினர் - குறிப்புமுற்றெச்சம்.
(இ-ள்.) தாதைதன் துறவு முற்றத் தான் உடன்பட்டது அல்லால் - தன் தந்தையின் துறவு நிறை வேறுவதற்காகத் தான் அரசியலை ஏற்க உடன்பட்டதே யன்றி, ஓதம் நீர் வட்டந்தன்னை - கடல் சூழ்ந்த பூமி முழுவதையும், உள்ளத்து ஒருதுகள்போல ஆதரம் பண்ணல் செல்லா அபயனும் - மனத்தில் ஒரு தூளுக்குச் சம மென்றெண்ணி அதில் பற்றிலனாகிய அபயருசியும், அரசு தன்னை - அரசியலை, காதலன் குமரன் தம்பி கைப்படுத்தனன் விடுத்தான் - காதல் மிக்க இளையோனாகிய தம்பியினிடம் ஒப்புவித்துத் தன் பொறையை நீக்கினான். (எ-று.)
அயயருசி, தம்பிக்கு அரசளித்துத் துறவு மேற்கொண்டானென்க.
ஒதம் - குளிர்ச்சி: ஓத நீர் - கடல். கைப்படுத்தல், உலக வழக்கு. துறவு முந்த என்றும் பாடம். (86)