xvi
வண்ணனை மொழிநூலின் வழுவியல்
பாவாணர் எதிர்பார்த்தபடி தமிழர்கள்
தெளிவடைந்து விட்டார்களா? திருந்திவிட்டார்களா? தமிழ்நாடே மாறிப் போயிவிட்டதா?
அனைவரும் தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்றே சிந்திக்கவும் செயற்படவும் தொடங்கிவிட்டார்களா?
தமிழில் கையொப்பமிடுங்கள் என்று
‘ஆணை‘ பிறப்பித்தும் இன்றுவரை அரசு ஊழியர்களில் 50%-க்கு மேல் தமிழில் கையொப்பம்
இடுவதில்லையே‘
பாவாணர் நூல்களின் தாக்கம் எங்கே? இன்றும்
அவருடைய ஏக்கம் அப்படியே நிற்கிறது.
பாவாணர்க்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. மறைமலையடிகளார் காலத்தில்
‘தனித்தமிழ் இயக்கம்‘ தொடங்கப்பட்டுப் பல நண்பர்கள் தங்கள் பெயர்களை
மாற்றிக்கொண்டனர். ‘க.ப.சந்தோஷம்‘ மகிழ்நன் ஆனார். நெடுஞ்செழியன், செழியன்,
அன்பழகன், அரங்கண்ணல், புலமைப்பித்தன், தமிழ்க்குடிமகன் என்று பல பெயர்கள்
மாற்றம் பெற்றதால் ஏற்றம் பெற்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட எல்லைவரைதான் தாக்கத்தை
உண்டாக்க முடிந்தது. ஆனால், பாவாணர் காலத்தில் அப்படியில்லை. ‘உலகத் தமிழ்க்
கழகம்‘ எனும் அமைப்புத் தொடங்கப்பட்டபோது உறுப்பினர் அனைவரும் தனித்தமிழ்ப்
பெயர் தாங்கத் தொடங்கினர்.
தமிழ்நாடு முழுவதும் பல குடும்பங்களில்
நல்ல தமிழ்ப் பெயர்கள் வைக்கப்பட்டன. (‘தேவி‘ இதழில் சிலகாலமாகத் தொடர்ந்து
வந்த பட்டியல்களிலிருந்து உணரமுடியும்),
திராவிட இயக்க அரசியல் தலைவர்களும்
பலருக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டினர். இது பெருவழக்காகி ஒரு பெரிய மறுமலர்ச்சியே
ஏற்பட்டது.
அந்த வகையில் ‘இயக்கம்‘ என்று பார்த்தால்
மறை மலையடிகள் காலத்தைவிடப் பாவாணர் காலம் பெரிய வளர்ச்சியைக் கொணர்ந்தது
என்பதை மறுக்கமுடியாது.
எனினும் பாவாணர் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படும் நேரத்தில்
ஒரு வினாவை எழுப்பலாம்.
இன்றும் அதே தனித்தமிழ் இயக்கம் வலிமையோடு செயற்படுகிறதா?
பாவாணர் காலத்தின் தாக்கத்தினும் பெரிய தாக்கம் ஏற்பட்டுவிட்டதா? நண்பர்கள்
ஆழ்ந்து சிந்திக்கட்டும்.
எனக்குத் தெரிந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர்;
அவர் துணைவியாரும் ஒரு கல்லூரிப் பேராசிரியை. இருவரும் தங்கள் பெண்குழந்தைக்குச்
"சுஜாதா" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை;
அதில் 15 பேர் பணிபுரிகின்றனர். தமிழால் பெருமை பெற்ற, தமிழால் பெருமை பெற்ற,
தமிழால் வாழும் அந்தப் பேராசிரியர்களின் சம்பளப் பதிவேட்டில் மூன்று பேர் மட்டுமே
தமிழில் கையொப்பமிடுகின்றனர். பிறர் அனைவரும் ஆங்கிலத்தில்தான் கையொப்பம்
இடுகின்றனர். இந்தக் கொடுமையை யாரிடம் போய்ச் சொல்வது?