தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Vannai


xvii

பாவாணரைப் போற்றும் பார்

இப்படி எண்ணற்ற சிதறல்கள், சிதைவுகள், சின்னபின்னமான நிலைகள். இவற்றை எப்படிச் சரிப்படுத்தப் போகிறோம்?
மற்றொன்று, பாவாணரின் வாழ்நாள் குறிக்கோளாகிய ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி‘.
8.5.1974-ல் ‘செ.சொ.பி. அகரமுதலித் திட்ட இயக்ககம்‘ தொடங்கப்பட்டது. பாவாணர் அதன் இயக்குநரானார். ஆனால் 16.1.1981-ல் அவர் மறைவு நிகழ்ந்தது. இந்தக் காலகட்டத்துக்குள் அகரம் தொடங்கி ‘ஆசைமொழி‘ வரை மட்டுமே அவரால் எழுத முடிந்தது. அந்த நூலும் 1985-ல் தான் வந்தது.
1992இல் அடுத்த தொகுதி. எனினும் 2001-க்குள் மேலும் இரண்டு மூன்று தொகுதிகள் வந்துவிட்டன. விரைவில் ‘த‘ வரையிலான தொகுதிகள் வெளியிடப்படக்கூடிய ஏற்பாடுகள் முடிந்திருக்கின்றன.
இதில் எனக்கு இரண்டு மனக்குறைகள் உண்டு. பாவாணர் தம் முதுமையை உணர்ந்து 1974 முதல் 1980-க்குள் தாம் கருதும் அனைத்துச் சொற்களுக்குமுள்ள தம் ஆராய்ச்சிக் குறிப்பினைச் சுருக்கெழுத்தாளர் வாயிலாகப் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்; அல்லது நாடாப்பதிவில் தம் வேர்ச்சொல் லாராய்ச்சியை அப்படியே பதிவு செய்திருக்க வேண்டும்.
அப்படிச் செய்யாமையால், பாவாணரது அரிய உழைப்பு, வாழ்நாள் முழுவதும் அவர் செய்த ஆராய்ச்சி, எந்தச் சொல்லுக்கு எந்த வேர், என்ன வளர்ச்சி, என்ன வரலாறு என்றுள்ள பல குறிப்புகளையும் நாம் உணரமுடியாமல் போய்விட்டது.
இன்று வெளிவரும் ‘செ.சொ.பி அகரமுதலித் தொகுப்புகள்‘ பாவாணரின் அகரமுதலிகள் அல்ல. பாவாணவர் வழியில் வெளிவரும் தொகுப்புகளே. இன்றுள்ள ஆய்வாளர்கள் கடுமையாக உழைத்தாலும் பாவாணரின் ஆராய்ச்சிச் செல்வம் தாங்கிய தொகுப்புகளாக அவை இல்லை என்ற மனக்குறை எனக்குண்டு.
இந்தப் படைப்புகள் இவ்வளவு நேர்த்தியாகவும், சிறப்பாகவும், செம்மையாகவும் வருவதற்குத் துணைநின்ற பெருந்தகை, பெரும்புலவர் அ.நக்கீரன் அவர்களைப் போற்றுகிறேன்.
இலக்கிய இலக்கண அறிவும், தனித்தமிழ்ப் பற்றும், பிழையின்றி நூல் பதிப்பிக்கும் ஆற்றலும், அகரமுதலித் தொகுப்பில் முன்பின் மாட்டேறுகளைத் தவறவிடாத நுட்பமும், உழைப்புத் திறமுங் கொண்ட இப் பெருந்தகையின் உழைப்பு நூல் முழுதும் மிளிர்வதை என்னால் உணர முடிகிறது.
எனினும் அந்த வழியில் பணிகளை வேகமாக முடிக்கும் - முடுக்கிவிடும்-வாய்ப்பு எனக்குக் கிட்டியது என்பதொன்றே மனநிறைவளிப்பதாகும்.
இன்னும் சில ஆண்டுகளில் ‘செ.சொ.பி.அகரமுதலித் திட்டம்‘ நிறைவுபெறும். அதற்கு முன்னோ, பின்னோ வரும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆராய்ந்து வளம் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-10-2019 13:12:14(இந்திய நேரம்)