பின்மொழி ஆகு பெயராய்ப் பிறத்தலும்,
முன்மொழி ஆகு பெயராய் முடிதலும்,
இருமொழி ஆகு பெயராய் இருத்தலும்,
ஒருபொருட்கு இருபெயர் ஆகி ஒட்டலும்,
முற்பதம் தமிழ்மொழி முற்பதம் வடமொழி
இருபதம் தமிழ்மொழி இருபதம் வடமொழி
ஆகி வருதலும் ஆதியாப் பலவே.
99.
சிலபெய ரெச்சமும் சிலவினைத் தொகையும்
இருவகை உவமையும் வண்ணச் சினைச்சொலும்
பண்புத் தொகைஎனப் பகரும் வடநூல்.
இன்மை பற்றி வரும் உபசர்க்கம்
100.
அ. அந். ந. நி. கு. வி. வருமொழி பொருளை
இன்மை பிறிதுமறை யினுள் ஒன்று ஆக்கும்.
101.
அவற்றுள் இன்மை ஐவகை ஆகும்.
102.
எழுத்து சொல்பொருள் ஆற்றல் மொழிப்பொருட்
காரணம் இவற்றுள் கருதுவ கருதுக.
103.
முப்பது எழுத்தும் முறையே ஒற்றுமை
அன்றியும், கசவும் சயவும் வயவும்
மனவும் லளவும் வலவும் அன்றியும்
பின்னும் பலவாம் ஒற்றுமை என்ப.
104.
ஓரெழுத் திற்கே ஒருசா ரியையும்,
ஓரெழுத் திற்கே பலசா ரியையும்,
பலஎழுத் திற்கே ஒருசா ரியையும்,
தொடந்தபல் லெழுத்திற்கு ஒருசா ரியையும்,
சாரியை இன்றித் தனித்தும் தொடர்ந்தும்,
தொடர்பினுள் சாரியை கலந்து தோன்றியும்,
வரும்என மொழிப வழக்கறிந் தோரே.
தொடர்மொழியின் புணர்நிலை வகை
105.
தகுதி அவாய்நிலை அண்மைநிலை மூன்றும்
புணரப் புணர்வது புணர்ப்பெனப் புகல்வர்.
106.
பொருத்தப் புணர்ச்சி பொருத்தமில் புணர்ச்சி
அவ்விரு வகையும் ஒருங்கியல் புணர்ச்சி
எனமூன்று என்பர் புணர்ச்சி இயல்பே;
வழுவுடைப் புணர்ச்சியை மறாவழி நான்கே.
107.
பொருத்தப் புணர்ச்சியை விரிக்கின் பெருகும்
அன்றியும் யாவரும் அறைந்தனர் என்க.
108.
ஆற்றொழுக்கு அடிமறி மாற்றுஇரண்டு அல்லா
எழுவகைப் பொருள்கோள், மரூஉமொழி பொய்யுரை
சிலஇடைப் பிறவரல், பண்பு அதிகாரம்,
ஆதியாம் பதங்கள் அவையும் அன்றி
விகுதியுருபு உம்மை முதலினுள சிலவும்