7. செந்தமிழ்க் காஞ்சி

செந்தமிழ்க் காஞ்சி

ஆசிரியர் அறிமுகம்
Introduction to Author


தேவநேயப் பாவாணர்

தேவநேயப் பாவாணர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சங்கரநயினார் கோயில் என்ற ஊரில் 07.02.1902 இல் பிறந்தார். பெற்றோர் திரு. ஞானமுத்து. திருமதி. பரிபூரணம் ஆவர். வேலூருக்கு அருகில் உள்ள ஆம்பூரில் தொடக்கக் கல்வி கற்றார். நடுநிலைப்பள்ளி ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கினார். மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார். திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்விலும் இவர் ஒருவரே வெற்றி பெற்றார். சேலம் நகராண்மைக் கல்லூரியில் தமிழ்த் துறைவராகப் பணியாற்றினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் பாவாணருக்குச் “செந்தமிழ் ஞாயிறு” என்று பட்டம் சூட்டிப் பாராட்டினார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் தென்மொழி இதழில் அறிவித்த 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக’ அன்றைய தமிழ்நாட்டரசால் அமர்த்தப் பெற்றார்.

தனித்தமிழ் இயக்க வானில் ஒளிவீசும் மொழி ஞாயிறாக விளங்கியவர் பாவாணர். தமிழ்மொழியின் தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை ஆகிய பதினாறு பண்புகளையும் உலகத்தவர் அனைவருக்கும் ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிவித்த நிறைநூற் பெரும்புலவர் இவர்.

மறைக்கப்பெற்ற தமிழின வரலாற்றையும், சிதைக்கப்பெற்ற ஒப்புயர்வற்ற மொழியையும், தமிழின், தொன்மையையும், அதன் செம்மாப்பினையும், தமிழர்களின் பெருமையையும் உலகறியச் செய்தவர்.

பாவாணர் தமிழ் மொழி ஆய்விலேயே ஐம்பது ஆண்டுகள் மூழ்கித் திளைத்தவர். இத்தகைய பேரறிஞர் ஒருவரைத் தமிழகம் இதுநாள்வரை கண்டதில்லை எனலாம். இவர் இலக்கண இலக்கியப் புலமையும், மொழிநூல் புலமையும், வரலாற்று அறிவும், நிலநூல், உயிர்நூல், மாந்தனூல் தேர்ச்சியும் ஒருங்கே பெற்ற உயர்ந்த நுண்ணறிவாளர். தமிழின்பால் எல்லையற்ற அன்பும், தமிழைப் பண்டுபோல் புதுமொழியாக ஆக்கிக் காட்ட வேண்டும் என்ற உணர்வும் உடையவர். தமிழர்கள் தங்கள் வாழ்வு நலன்களைத் தேடி முன்னேறுவதற்குத் தம் வாழ்நாள் முழுவதும் மொழிவழி உழைத்தவர்.

இவர் சொல்வளம், பழந்தமிழர் அரசியல் கோட்பாடு, திராவிடத்தாய், திருக்குறள் தமிழ் மரபுரை, தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு, தமிழிலக்கிய வரலாறு, முதற்றாய்மொழி, ஒப்பியன்மொழி நூல், வேர்ச்சொற் கட்டுரைகள், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், கட்டுரை வரைவியல், உயர்தரக் கட்டுரை இலக்கணம், இயற்றமிழ் இலக்கணம், பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும், தமிழர்மதம், மண்ணில்விண் (அ) வள்ளுவர் கூட்டுடைமை, வண்ணனை, மொழிநூலின் வழுவியல், தமிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் திருமணம், செந்தமிழ்க் காஞ்சி, இசைத்தமிழ்க் கலம்பகம் ஆகிய பல நூற்களின் ஆசிரியர். இவர் 15.01.1981 இல் இயற்கை எய்தினார்.