7. செந்தமிழ்க் காஞ்சி

செந்தமிழ்க் காஞ்சி

பாடம்
Lesson


தமிழ்மொழி இனிமையான மொழி. தமிழ் என்ற சொல்லைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது அமிழ்து என வழங்கும். அமிழ்தம் எவ்வாறு இனிமை பொருந்தியதோ அதுபோலத் தமிழ் மொழியும் இனிமை பொருந்திய மொழியாகும். அதனால்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழைப் பற்றிப் பாடும் பொழுது “தமிழுக்கும் அமுது (அமிழ்து) என்று பேர்” எனப் பாராட்டினார். அமிழ்தைப் போன்ற சிறப்புடைய தமிழ்மொழி தமிழரின் தாய்மொழி. தாய்மொழியான தமிழைத் தாயாகவே கருதித் தமிழர் வணங்கி வாழ்கின்றனர். தாயின் மாண்பிற்கு ஈடு இணை சொல்ல முடியாததைப் போலத் தமிழின் மாண்பிற்கும், ஈடு இணை கூற இயலாது. தாயில்லாமல் குழந்தை இல்லை என்பதைப்போலத் தமிழில்லாமல் தமிழர்கள் வாழ இயலாது. இந்த அளவிற்குத் தமிழரின் உணர்விலும், உயிரிலும் அறிவிலும் தமிழ்மொழி கலந்துள்ளது.

ஒருவரின் உயிரிலும், உணர்விலும், அறிவிலும் கலந்து நிற்கும் மொழியே தாய்மொழி எனப்பெறும். இத்தகுதியைத் தமிழ் தமிழரிடம் பெற்றுள்ளது. தமிழர்க்குத் தாய்மொழியான தமிழைப் பாவாணர் தாய்க்கும் மேலாக எண்ணிப் போற்றுகின்றார்.

தாயினும் சிறந்தது தமிழே தரணியில் உயர்ந்தது தமிழே

வாயுடன் பிறந்தது தமிழேவாழ்வெல்லாம் தொடர்வது தமிழே

என்ற அவரது கவிதை அடிகள் தாயைவிட அவர் தமிழைப் போற்றியமைக்கு எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. தமிழ்மொழி தாயைவிடப் பண்புகளால் சிறந்தது. தாய் எவ்வாறு குழந்தைகளின் தேவை அறிந்து பணியாற்றுவாளோ அது போலத் தமிழ் மொழி தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து பணியாற்றுகிறது. தாய் எவ்வாறு குழந்தையைப் பாதுகாப்பாளோ அதுபோலத் தமிழ்மொழி பாதுகாக்கிறது. தாயின் அரவணைப்பு சில நேரங்களில் குழந்தைகளிடம் குறைவுபடலாம். குழந்தையின் வளர்ந்த நிலையில், தாய் அந்தக் குழந்தையை இளவயதில் அரவணைத்ததைப் போல அரவணைக்க முடியாது. ஆனால், எந்த வயது ஆனாலும் தமிழ்மொழி தன் குழந்தைகளை அரவணைப்பதில் வேறுபாடு கொள்வது இல்லை. எனவே, தமிழ் தாயினும் சிறந்தது என்று பாவாணர் கருதுகிறார்.

உலக மொழிகளில் தனித்த இடம் பெறுவது தமிழ் மொழி. உயர்ந்து நிற்பது தமிழ்மொழி. தமிழர் ஒவ்வொருவரின் பிறப்பின்போதும் அது உதட்டோடு ஒட்டிக் கொண்டே பிறக்கிறது. தமிழரின் வாழ்வெல்லாம் தொடர்வது தமிழ்மொழி. இவ்வாறு தமிழ்த்தாய் என்ற கவிதையில் தமிழ்த்தாயின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகின்றார் பாவாணர்.

தமிழ்த்தாயுடன் தமிழ்நாட்டையும் இணைத்தே அவர் வாழ்த்துகின்றார். நாடு என்று சொன்னால் அது தமிழ்நாடுதான்.அந்த நாட்டில்தான் வளமும், நலமும், வாழ்வும், அறமும் செழித்து ஓங்கி வருகின்றன என்பதால் நாடென்றால் தமிழ்நாடுதான் எனப் பாவாணர் சிறப்பித்துப் பாடுகிறார். மேலும், தமிழ்நாட்டில் வாழும் அனைவருக்கும் ஒரேகுலம் தமிழ்க்குலம்தான். அனைவருக்கும் அரசன் தமிழ்தான். அரசும் குலமும் தமிழ் என்று ஆனபோது நலம்தான் விளையும் என்ற சிந்தனையின்படி அவர் கவிதை வரைந்துள்ளார்.

குலமெனப் படுவதும் தமிழே கோவெனப் படுவதும் தமிழே

நலமெனப் படுவதும் தமிழே நாடெனப் படுவதும் தமிழே

இந்தக் கவிதை அடிகள் தமிழ்நாட்டின் வளமைக்கும் நலத்திற்கும் வழிகாட்டுவன. இந்தச் செம்மாந்த வழியில் தமிழ்நாடு தொடர்ந்து சென்றால் தமிழும் உயரும்; தமிழ்நாடும் உயரும்; தமிழ்மக்கள் தாமும் உயர்வர்.

தமிழின் சிறப்பைப் பற்றிச் “செந்தமிழ்ச் சிறப்பு” என்ற தலைப்பில் - மற்றொரு கவிதையைப் பாடியுள்ளார் பாவாணர். அக்கவிதையின் ஒரு பகுதி பின்வருமாறு:

தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்து தரைமீது

தனியே விரிந்து கவையே பிரிந்து கிளையே திரிந்து பலவாக

முனிவோர் மொழிந்து முனமே திருந்தி முதனூல் எழுந்த மொழியாகி

முருகால் நடந்த சவைமீது அமர்ந்து முகைவாய் மலர்ந்த தமிழாயே

என்று செந்தமிழின் சிறப்பை விரித்துரைக்கின்றார் பாவாணர். தமிழ்மொழி எம்மொழிகளும் தோன்றுவதற்கு முன்பே தனியாகப் பிறந்தது; எம்மொழியின் உதவியின்றியும் தனியே வளர்ந்து வருவது; தன் சீரிய பண்பால் மற்ற மொழிகளில் இருந்து வேறுபடுவது; உலகில் தனித்து நிற்பது; தனியே பரவி உலகு முழுவதும் அறியப் படுவது; இம்மொழி பல கிளைகள் விரித்துப் பரவி வருகிறது.

மேலும், அகத்தியர் முதலான முனிவர்கள் இத்தமிழை மொழிந்தனர். எல்லா மொழிக்கும் முன்னரே தமிழ் மொழி திருந்திய எழுத்து வடிவம் பெற்றுவிட்டது. திருந்திய மொழி ஆகிவிட்டது. தமிழில்தான் முதன் முதல் நூல் எழுந்தது. தமிழ் மொழி தன் கருத்துகளை முதன் முதலில் நூல் வடிவமாகப் பதிய வைத்தது. மேலும் முருகன், சிவன் ஆகியோர் வளர்த்த சங்கங்களில் இருந்து நல்ல தமிழ்ப்பாக்களை உலகிற்குத் தந்தது. இவை எல்லாம் தமிழ் மொழியின் சிறப்புகள் ஆகும்.

தமிழின் பெருமைகளைப் பிறிதொரு பாட்டில் பாவாணர் விரித்துக் காட்டுகின்றார்.

தோற்றம் அறிவராத் தொல்பெரும் தமிழே

துணை ஒன்றும் வேண்டாத தூயசெந் தமிழே

மாற்றம் எளியவாய் மன்னிய தமிழே

மறைந்த லெமூரியா நிறைந்தசெந் தமிழே

போற்று முதல் நூல்கள் பொருந்திய தமிழே

பூமி எங்கும் புடை போகிய தமிழே

கூற்றம் எனக்கடல் குணிப்ப அருங் கலைகள்

கொள்ளை கொண்டும்வளம் கொண்டது ஓர் தமிழே

என்பது அப்பாடல் ஆகும். தமிழ் மொழியின் தோற்றம் அறிஞர்களால் கணக்கிடப்பட முடியாத அளவிற்குப் பழமை வாய்ந்ததாக உள்ளது. அதனால் அது தொல் பெருந்தமிழ் என்ற சிறப்பிற்கு உரியதாகின்றது. அது தனக்குத் துணை ஒன்றும் வேண்டாமல் தானே தனித்து இயங்கக் கூடியது. தூய்மையானது. தக்க மாற்றங்கள் வந்தால்அதனை ஏற்றுக் கொள்ளக் கூடியது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் அதன் மாறாத இளமைக்கும், நிலைப்புக்கும் காரணங்கள் ஆகும். அதாவது, பழைய கழிய வேண்டிய செய்திகளைத் தமிழ்மொழி தன்னில் இருந்து விடுவித்துவிடும். அதே நேரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய புதிய செய்திகளைச் சேர்த்துக் கொள்ளும். பூமியில் தன் வளமையால் தன் மக்களால் பரவி வருகிற மொழி தமிழ் மொழியாகும். லெமூரியா கண்டம் என்ற மனிதன் முதன் முதல் தோன்றிய கண்டத்தில் நிறைந்திருந்த மொழி தமிழ் மொழியாகும். கால மாற்றத்தால் கடலின் சீற்றத்தால் அந்த நிலப்பகுதி அழிந்து போனாலும், தமிழ் அழியாமல் நிலைத்து நிற்கிறது. கடல் தமிழ் நூல்களையும், கலைகளையும் தன்னுள் கொள்ளை கொண்டுபோய் மறைத்துவிட்டாலும்கூட மறையாமல் வளர்ந்தது தமிழ். இதனுள் இன்னும் பல கலை, வளங்கள் உள்ளன. தமிழ்மொழி எத்தகைய அழிவு வந்தாலும் அவற்றை எல்லாம் கடந்து வளரும், வாழும் செம்மை பெற்றது.

அத்தமிழ்மொழி வாழ்வாங்கு வாழ இடம் தருவது தமிழ்நாடு. அதனை வாழ்த்துமாறும் ஒரு கவிதையைப் பாவாணர் பாடியுள்ளார்.

காவியம் மிகுந்த கலைநாடு பண்டே கடல் வாணிகம் புரிந்த நாடு

ஓவியம் மிகுந்த திருநாடு மிக உன்னத கோபுர முள்ள நாடு.

நாகரிகமே மிகுந்த நாடு மிக நடுநிலை யான தமிழ்நாடு

ஏகமனமா யிருந்த நாடு மிக ஏதிலரை ஆதரித்த நாடு

வள்ளுவன் பிறந்த திருநாடு பெரு வள்ளல்கள் திகழ்ந்த பெருநாடு

மள்ளர் நடுகல்லி லுள்ளநாடு ஒரு மாத மூன்றுமழை பெய்தநாடு

கம்பனும் பிறந்த தமிழ்நாடு கடுங் காளமேகமும் பிறந்தநாடு

நம்பன் அடியார்க்கு விளையாடித் திரு நடனமைந்து மன்று புரிநாடு

பாவினில் சிறந்த தமிழ்நாடு நெடும் பாபிலோன் உறவு கொண்டநாடு

காவலர் உயர்ந்த திருநாடு பெரும் கற்பு அரசிகள் திகழ்ந்தநாடு

இந்தப் பாடலில் பல வரலாற்றுச் செய்திகளைப் பாவாணர் பதிய வைத்துள்ளார். பழங்காலந்தொட்டே கடல் வாணிகம் செய்த நாடு தமிழ்நாடு. பாபிலோன் என்ற எகிப்திய நகரத்துடன் தமிழ்நாடு வணிகத் தொடர்பு கொண்டு இருந்ததற்குப் பல சான்றுகள் உள்ளன.

இயற்கை ஓவியங்கள், கோயில் ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் எனப் பல ஓவியக் கலைகள் வளர்த்த நாடு தமிழ்நாடு. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம், சீவக சிந்தாமணி, தேம்பாவணி போன்ற பல காவியங்கள் கொண்ட நாடு தமிழ்நாடு. வள்ளுவர், கம்பர், காளமேகம் எனக் கவிஞர்கள் பலர் வாழ்ந்த நாடு தமிழ்நாடு. சிவபெருமான் அடியார்களுக்காகத் திருவிளையாடல்கள் புரிந்தது தென்நாடான தமிழ்நாட்டில்தான். மன்னர்கள் வாழ்ந்த நாடு. வள்ளல்கள் வாழ்ந்த நாடு. வீரர்கள் பலர் வாழ்ந்த நாடு. அவர்கள் போரில் இறந்த போது அவர்களுக்காக நடுகல் என்ற நினைவுச் சின்னம் ஏற்படுத்தி வணங்கிய நாடு தமிழ்நாடு. நல்ல நாகரிகம் உடைய நாடு தமிழ்நாடு. நடுநிலைமையில் நிற்கும் நாடு தமிழ்நாடு. பிழைப்புத் தேடித் தன்னை நாடிவந்த பலரையும் காக்கும் நாடு தமிழ்நாடு. மக்கள் பலராயினும் மொழியால் உணர்வால் ஒன்றுபடும் நாடு தமிழ்நாடு. இவ்வாறு தமிழ்நாட்டின் பெருமைகளைப் பாவாணர் அடுக்கி உரைக்கின்றார்.

ஒரு மனிதன் விடுதலையாய் வாழ அவனுக்கு நல்ல நாடு வேண்டும். அந்த நல்ல நாட்டை நல்ல அரசன் ஆள வேண்டும். நல்ல அரசன் ஆள நல்ல மக்கள் வேண்டும். அந்த மக்களுடன் உறவாட நல்ல மொழி வேண்டும். அந்த மொழியில் நல்ல படைப்புகள் இருக்க வேண்டும். அந்த நல்ல மொழியின் நல்ல படைப்புகளை உலகம் ஏற்க வேண்டும். உலகம் ஏற்று வாழும் அருமையான நல்ல நிலையே உயர்நிலையாகும். அந்த உயர்நிலையைத் தமிழ்நாடு பெற்றள்ளது.தமிழ் மக்கள் பெற்றள்ளனர். இதனைப் பாவாணர் உணர்ந்து தம் கவிதைகளில் பதிவு செய்துள்ளார். இக்கவிதைகள் தமிழர்க்கும் தமிழ்மொழிக்கும் வலிமை சேர்ப்பன; வளம் ஊட்டுவன ஆகும்..