தவத்திறம்பூண்டு தருமம் கேட்ட காத

29 தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை

 
   

[ மணிமேகலை, காஞ்சிமாநகர்க்கண் சென்ற
பின்னர் அறவண அடிகளும் தாயரும் செல்ல
அவரைக்கண்டு இறைஞ்சித் தருமம்கேட்ட பாட்டு ]

 

இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி

அறம்திகழ் நாவின் அறவணன் உரைப்போன்:

வென்வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன்

தன்மகள் பீலி வளைதான் பயந்த

5

புனிற்றுஇளங் குழவியைத் தீவகம் பொருந்தித

தனிக்கலக் கம்பளச் செட்டிகைத் தரலும்

வணங்கிக் கொண்டுஅவன் வங்கம் ஏற்றிக்

கொணர்ந்திடும் அந்நாள் கூர்இருள் யாமத்து

அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும

10

மரக்கலம் கெடுத்தோன் மைந்தனைக் காணாது

அரைசற்கு உணர்த்தலும் அவன்அயர் வுற்று

விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத்

தன்விழாத் தவிர்தலின் வானவர் தலைவன்

நின்உயிர்த் தந்தை நெடுங்குலத்து உதித்த

15

மன்உயிர் முதல்வன் மகர வேலையுள்

முன்னிய வங்கம் முங்கிக் கேடுறப்

பொன்னின் ஊசி பசுங்கம் பளத்துத்

துன்னியது என்னத் தொடுகடல் உழந்துழி

எழுநாள் எல்லை இடுக்கண்வந்து எய்தா

20

வழுவாச் சீலம் வாய்மையில் கொண்ட

பான்மையில் தனாது பாண்டு கம்பளம்

தான்நடுக்கு உற்ற தன்மை நோக்கி

ஆதி முதல்வன் போதி மூலத்து

நாதன் ஆவோன் நளிநீர்ப் பரப்பின்

25

எவ்வம்உற் றான்தனது எவ்வம் தீர்எனப்

பவ்வத்து எடுத்துப் பாரமிதை முற்றவும்

அறஅரசு ஆளவும் அறவாழி உருட்டவும்

பிறவிதோறு உதவும் பெற்றியள் என்றே

சாரணர் அறிந்தோர் காரணம் கூற

30

அந்த உதவிக்கு ஆங்குஅவள் பெயரைத்

தந்தைஇட் டனன்நினைத் தையல்நின் துறவியும்

அன்றே கனவின் நனவுஎன அறைந்த

என்பவட்கு ஒப்ப அவன்இடு சாபத்து

35

நகர்கடல் கொள்ளநின் தாயரும் யானும்

பகரும்நின் பொருட்டால் இப்பதிப் படர்ந்தனம்

என்றலும் அறவணன் தாள்இணை இறைஞ்சிப்

பொன்திகழ் புத்த பீடிகை போற்றும்

தீவ திலகையும் இத்திறம் செப்பினள்

40

ஆதலின் அன்ன அணிநகர் மருங்கே

வேற்றுஉருக் கொண்டு வெவ்வேறு உரைக்கும்

நூல்துறைச் சமய நுண்பொருள் கேட்டே

அவ்வுரு என்ன ஐவகைச் சமயமும்

செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன்

45

அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன,

 

நொடிகுவென் நங்காய் நுண்ணிதின் கேள்நீ:

ஆதி சினேந்திரன் அளவை இரண்டே

ஏதம்இல் பிரத்தியம் கருத்துஅளவு என்னச்

சுட்டுணர் வைப்பிரத் தியக்கம் எனச்சொலி

50

விட்டனர் நாம சாதிகுணக் கிரியைகள்

மற்றவை அனுமா னத்தும்அடை யும்எனக

காரிய காரண சாமா னியக்கருத்து

ஓரின் பிழைக்கையும் உண்டுபிழை யாதது

கனலில் புகைபோல் காரியக் கருத்தே

55

ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில்

ஆன முறைமையின் அனுமான மாம்பிற

பக்கம் ஏதுத் திட்டாந்தம் உபநயம்

நிகமனம் என்ன ஐந்துஉள அவற்றில்

பக்கம் இம்மலை நெருப்புஉடைத்து என்றல்

60

புகைஉடைத் தாதலால் எனல்பொருந்து ஏது

வகைஅமை அடுக்களை போல்திட் டாந்தம

உபநயம் மலையும் புகைஉடைத்து என்றல்

நிகமனம் புகைஉடைத் தேநெருப்பு உடைத்துஎனல்

நெருப்புடைத் தல்லாது யாதொன்று அதுபுகைப

65

பொருத்தம் இன்று புனல்போல் என்றல்

மேய விபக்கத்து மீட்சி மொழியாய்

வைதன் மியதிட் டாந்தம் ஆகும்

தூய காரிய ஏதுச் சுபாவம்

ஆயின் சத்தம் அநித்தம் என்றல

70

பக்கம் பண்ணப் படுத லால்எனல்

பக்க தன்ம வசனம் ஆகும்

யாதொன்று யாதொன்று பண்ணப் படுவது

அநித்தம் கடம்போல் என்றல் சபக்கத்

தொடர்ச்சி யாதொன்று அநித்தம்அல் லாதது

75

பண்ணப் படாதது ஆகாசம் போல்எனல

 

விபக்கத் தொடர்ச்சி மீட்சிமொழி என்க

அநன்னு வயத்தில் பிரமாணம் ஆவது

இவ்வெள் ளிடைக்கண் குடம்இலை என்றல்

செவ்விய பக்கம் தோன்றாமை யில்எனல்

80

பக்க தன்ம வசனம் ஆகும்

இன்மையின் கண்டிலம் முயல்கோடு என்றல

அந்நெறிச் சபக்கம் யாதொன்று உண்டுஅது

தோற்றரவு அடுக்கும் கைந்நெல்லி போல்எனல்

ஏற்ற விபக்கத்து உரைஎனல் ஆகும்

85

இவ்வகை ஏதுப் பொருள்சா திப்பன

என்னைகா ரியம்புகை சாதித்தது என்னின்

புகைஉள இடத்து நெருப்புஉண்டு என்னும்

அன்னுவயத் தாலும், நெருப்புஇலா இடத்துப்

புகையில்லை என்னும் வெதிரேகத் தாலும்

90

புகைஇ நெருப்பைச் சாதித்தது என்னின்

நேரிய புகையில் நிகழ்ந்துஉண் டான

ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம்

வாய்த்த நெருப்பின்வரு காரியம் ஆதலின்

மேல்நோக் கிக்கறுத்து இருப்பபகைத்து இருப்ப

95

தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்

அன்னு வயம்சா திக்கின் முன்னும்

கழுதை யையும் கணிகை யையும்

தம்மில் ஒருகா லத்துஓர் இடத்தே

அன்னு வயம்கண் டான்பிற் காலத்துக்

100

கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை

 

அனுமிக்க வேண்டும் அதுகூ டாநெருப்பு

இலாஇடத் துப்புகை இலைஎன நேர்அத்

திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின

நாய்வால் இல்லாக் கழுதையின் பிடரின்

105

நரிவாலும் இலையாகக் காணப் பட்ட

 

அதனையே கொண்டு பிறிதுஓர் இடத்து

நரிவாலி னால்நாய் வாலைஅனு மித்தல

அரிதாம் அதனால் அதுவும்ஆ காது.

ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும்

110

திட்டாந் தத்தி லேசென்று அடங்கும்

 

பக்கம் ஏதுத் திட்டாந் தங்கள்

ஒக்க நல்லவும் தீயவும் உளஅதில

வெளிப்பட் டுள்ள தன்மி யினையும்

வெளிப்பட் டுளசாத் தியதன் மத்திறம்

115

பிறிதின் வேறாம் வேறுபாட் டினையும்

தன்கண் சார்த்திய நயம்தருதல் உடையது

நன்குஎன் பக்கம்என நாட்டுக அதுதான்

சத்தம் அநித்தம் நித்தம்என்று ஒன்றைப்

பற்றி நாட்டப் படுவது அதில்தன்மி

120

சத்தம் சாத்திய தன்ம மாவது

 

நித்தா நித்தம் நிகழும்நல் ஏது

மூன்றாய்த் தோன்றும் ஒழிந்த பக்கத்து

ஊன்றி நிற்றலும் சபக்கத்துஉண் டாதலும்

விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம்

125

சாதிக் கின்பொருள் தன்னால் பக்கத்து

ஓதிய பொதுவகை ஒன்றி இருத்தல

சத்த அநித்தம் சாத்தியம் ஆயின

ஒத்த அநித்தம் கடாதி போல்எனல

விபக்கம் விளம்பில் யாதொன்று யாதொன்று

130

அநித்தம்அல் லாதது பண்ணப் படாதது

ஆஅ காசம் போல்என்று ஆகும்.

பண்ணப் படுதலும் செயலிடைத் தோன்றலும்

நண்ணிய பக்கம் சபக்கத் திலுமாய்

விபக்கத்து இன்றி அநித்தத் தினுக்கு

135

மிகத்தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க.

ஏதம்இல் திட்டாந் தம்இரு வகைய

சாதன் மியம்வை தன்மி யம்எனச்

சாதன் மியம்எனப் படுவது தானே

அநித்தம் கடாதி அன்னுவயத்து என்கை

140

வைதன் மியதிட் டாந்தம் சாத்தியம்

 

எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை

இத்திறம் நல்ல சாதனத்து ஒத்தன

தீய பக்கமும் தீய ஏதுவும்

தீய எடுத்துக் காட்டும் ஆவன

145

பக்கப் போலியும் ஏதுப் போலியும

 

திட்டாந்தப் போலியும் ஆஅம் இவற்றுள்

பக்கப் போலி ஒன்பது வகைப்படும்

பிரத்தி யக்க விருத்தம் அனுமான

விருத்தம் சுவசன விருத்தம் உலோக

150

விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர

 

சித்த விசேடணம் அப்பிர சித்த

விசேடியம் அப்பிர சித்த உபயம்

அப்பிர சித்த சம்பந் தம்என

எண்ணிய இவற்றுள், பிரத்தியக்க விருத்தம்

155

கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும்

 

சத்தம் செவிக்குப் புலன்அன்று என்றல

மற்றுஅனு மான விருத்தம் ஆவது

கருத்தள வையைமா றாகக் கூறல்

அநித்தியக் கடத்தை நித்தியம் என்றல்

160

சுவசன விருத்தம்தன் சொல்மாறி இயம்பல்

 

என்தாய் மலடி என்றே இயம்பல்

உலக விருத்தம் உலகின்மாறு ஆம்உரை

இலகுமதி சந்திரன் அல்ல என்றல்,

ஆகம விருத்தம்தன் நூல்மாறு அறைதல்

165

அநித்த வாதியாய் உள்ளவை சேடிகன

அநித்தி யத்தைநித் தியம்என நுவறல

அப்பிர சித்த விசேடணம் ஆவது

தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை

பௌத்தன் மாறாய் நின்றசாங் கியனைக்

170

குறித்துச் சத்தம் விநாசி என்றால்

 

அவன்அவி நாச வாதி ஆதலின்

சாத்திய விநாசம்அப் பிரசித்தம் ஆகும்.

அப்பிர சித்த விசேடியம் ஆவது

எதிரிக்குத் தன்மி பிரசித்தம் இன்றி

175

இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற

 

பௌத்தனைக் குறித்துஆன் மாச்சை தனியவான்

என்றால் அவன்அ நான்ம வாதி

ஆதலில் தன்மி அப்பிர சித்தம்

அப்பிர சித்த உபயம் ஆவது

180

மாறுஆ னோற்குத் தன்மி சாத்தியம்

ஏறாது அப்பிர சித்தமாய் இருத்தல்

பகர்வை சேடிகன் பௌத்தனைக் குறித்துச்

சுகம்முத லியதொகைப் பொருட்குக் காரணம்

ஆன்மா என்றால் சுகமும்ஆன் மாவும்

185

தாம்இசை யாமையில் அப்பிரசித் தோபயம்

அப்பிர சித்த சம்பந்தம் ஆவது

எதிரிக்கு இசைந்த பொருள்சா தித்தல

மாறாம் பௌத்தற்குச் சத்த அநித்தம்

கூறில் அவன்ன் கொள்கைஅஃது ஆகலில்

190

வேறுசா திக்க வேண்டா தாகும்.

ஏதுப் போலி ஓதின்மூன்று ஆகும்

அசித்தம் அநைகாந் திகம்விருத் தம்என

உபயா சித்தம் அன்னியதரா சித்தம்

சித்தா சித்தம் ஆசிரயா சித்தம்

195

எனநான்கு அசித்தம் உபயா சித்தம்

 

சாதன ஏது இருவர்க்கும் இன்றிச்

சத்தம் அநித்தம் கண்புலத்து என்றல

அன்னியதரா சித்தம் மாறாய் நின்றாற்கு

உன்னிய ஏது அன்றாய் ஒழிதல

200

சத்தம் செயல்உறல் அநித்தம் என்னின

சித்த வெளிப்பாடு அல்லது செயல்உறல

உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும்

சித்தா சித்தம் ஆவது

ஏதுச் சங்கய மாய்ச்சா தித்தல

205

ஆவி பனிஎன ஐயுறா நின்றே

தூய புகைநெருப்பு உண்டுஎனத் துணிதல்

ஆசிரயா சித்தம் மாறா னவனுக்கு

ஏற்ற தன்மி இன்மை காட்டுதல்

ஆகாசம், சத்த குணத்தால் பொருளாம் என்னின்

210

ஆகா சம்பொருள் அல்லஎன் பாற்குத்

தன்மி அசித்தம் அநைகாந் திகமும்

சாதா ரணம்அசா தாரணம் சபக்கைக

தேச விருத்தி விபக்க வியாபி

விபக்கைக தேச விருத்தி சபக்க

215

வியாபி உபயைக தேச விருத்தி

விருத்த வியபி சாரிஎன்று ஆறு

சாதாரணம் சபக்க விபக்கத் துக்கும்

ஏதுப் பொதுவாய் இருத்தல் சத்தம்

அநித்தம் அறியப் படுதலின் என்றால்

220

அறியப் படுதல்நித் தாநித்தம் இரண்டுக்கும்

செறியும் கடம்போல் அநித்தத்து அறிவோ

ஆகா சம்போல நித்தத்து அறிவோ

என்னல் அசாதா ரணமா வதுதான்

உன்னிய பக்கத்து உண்டாம் ஏதுச்

225

சபக்க விபக்கம் தம்மில்இன் றாதல்

சத்தம் நித்தம் கேட்கப் படுதலின்

என்னில் கேட்கப் படல்எனும் ஏதுப்

பக்கத் துள்ள தாயி அல்லது

சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின்

230

சங்கயம் எய்தி அநேகாந் திகமாம்

சபக்கைக தேச விருத்தி விபக்க

வியாபி யாவது ஏதுச் சபக்கத்து

ஓரிடத்து எய்தி விபக்கத்து எங்கும்

உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடைத்

235

தோன்றா தாகும் அநித்தம் ஆகலின்

என்றால் அநித்தம் என்ற ஏதுச்

செயலிடைத் தோன்றா மைக்குச் சபக்கம்

மின்னினும் ஆகா சத்தினும் மின்னின்

நிகழ்ந்துஆ காசத்தில் காணாது ஆகலின்

240

அநித்தம் கடாதியின் ஒத்தலில் கடம்போல்

அழிந்து செயலில் தோன்றுமோ மின்போல்

அழிந்து செயலில் தோன்றா தோஎனல்

விபக்கைக தேச விருத்தி சபக்க

வியாபி யாவது ஏது விபக்கத்து

245

ஓரிடத்து உற்றுச் சபக்கத்துஒத்து இயறல்

சத்தம் செயலிடைத் தோன்றும் அநித்தம்ஆ தலின்எனின்

அநித்த ஏதுச் செயலிடைத் தோன்றற்கு

விபக்க ஆகா யத்தினும் மின்னினும்

மின்னின் நிகழ்ந்துஆ காசத்துக் காணாது

250

சபக்கக் கடாதிகள் தம்மில்

   

எங்குமாய் ஏகாந்தம் அல்ல மின்போல்

அநித்தமாய்ச் செயலிடைத் தோன்றாதோ கடம்போல்

அநித்தமாய்ச் செயலிடைத் தோன்று மோஎனல்

உபயைக தேச விருத்தி ஏதுச்

255

சபக்கத் தினும்விபக் கத்தினும் ஆகி

ஓர்தே சத்து வர்த்தித்தல் சத்தம்

நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின்

அமூர்த்த ஏது நித்தத் தினுக்குச்

சபக்கஆ காச பரமா ணுக்களின்

260

ஆகா சத்து நிகழ்ந்து மூர்த்தமாம்

பரமா ணுவின்நிக ழாமை யானும்

 

விபக்க மான கடசுகா திகளில்

சுகத்து நிகழ்ந்து கடத்துஒழிந் தமையினும்

ஏகதே சத்து நிகழ்வதுஏ காந்தம்அன்று

265

அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ

அமூர்த்த சுகம்போல் அநித்த மோஎனல்

விருத்த வியபிசாரி திருந்தா ஏதுவாய்

விருத்த ஏதுவிற் கும்இடம் கொடுத்தல்

சத்தம் அநித்தம் செயல்இடைத் தோன்றலின்

270

ஒத்த தெனினச் செயலிடைத் தோன்றற்குச்

சபக்கமாய் உள்ள கடாதி நிற்கச்

சத்தம் நித்தம் கேட்கப் படுதலில்

சத்தத் துவம்போல் எனச்சாற் றிடுதல்

இரண்டினும் சங்கயமாய் ஏகாந்தம் அல்ல

275

விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பில்

தன்மச் சொரூப விபரீத சாதனம்

தன்ம விசேட விபரீத சாதனம்

தன்மிச் சொரூப விபரீத சாதனம்

தன்மி விசேட விபரீத சாதனம்

280

என்ன நான்கு வகையது ஆகும்அத்

தன்மச் சொரூப விபரீத சாதனம்

சொன்ன ஏதுவில் சாத்திய தன்மத்து

உருவம் கெடுதல் சத்தம் நித்தம்

பண்ணப் படுதலின் என்றால் பண்ணப்

285

படுவது அநித்தமா தலில்பண்ணப் பட்ட

ஏதுச் சாத்திய தன்மநித் தத்தைவிட்டு

அநித்தம் சாதித்த லான்விப ரீதம்

தன்ம விசேட விபரீத சாதனம்

சொன்ன ஏதுச் சாத்திய தன்மம்

290

தன்னிடை விசேடம் கெடச்சா தித்தல்

கண்முதல் ஓர்க்கும் இந்திரி யங்கள்

எண்ணில் பரார்த்தம் தொக்குநிற் றலினால்

சயனா சனங்கள் போல என்றால்

தொக்கு நிற்றலின் என்கின்ற ஏதுச்

295

சயனா சனத்தின் பரார்த்தம்போல் கண்முதல்

 

இந்தியங் களையும் பரார்த்தத்தில் சாதித்துச்

சயனா சனவா னைப்போல் ஆகிக்

கண்முதல் இந்தியத் துக்கும் பரனாய்ச்

சாதிக் கிறநிர அவயவமாய் உள்ள

300

ஆன்மா வைச்சா வயவ மாகச்

சாதித் துச்சாத் தியதன் மத்தின்

விசேடம் கெடுத்த லின்விப ரீதம்

தன்மிச் சொரூப விபரீத சாதனம்

தன்மி உடைய சொருபமாத் திரத்தினை

305

ஏதுத் தானே விபரீதப் படுத்தல்

பாவம் திரவியம் கன்மம் அன்று

குணமும் அன்றுஎத் திரவியம் ஆம்எக்

குணகன் மத்துஉண் மையின்வே றாதலால்

சாமா னியவிசே டம்போல் என்றால்

310

பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய்

நின்றவற் றின்இடை உண்மைவே றாதலால் என்று

காட்டப் பட்ட ஏது மூன்றினுடை

உண்மை வேறு படுத்தும் பொதுவாம்

உண்மை சாத்தியத்து இல்லா மையினும்

315

திட்டாந் தத்தில் சாமானியம் விசேடம்

போக்கிப் பிறிதுஒன்று இல்லாமை யானும்

பாவம் என்று பகர்ந்ததன் மியினை

அபாவம் ஆக்குத லான்விப ரீதம்

தன்மி விசேட விபரீத சாதனம்

320

தன்மி விசேட அபாவம் சாதித்தல்

முன்னம் காட்டப் பட்ட ஏதுவே

பாவமா கின்றது கருத்தா வுடைய

கிரியையும் குணமும்ஆம் அதனை விபரீதம்

ஆக்கியது ஆதலால் தன்மி விசேடம்

325

கெடுத்தது, தீய எடுத்துக்காட்டு ஆவன

தாமே திட்டாந்த ஆபா சங்கள்

திட்டாந் தம்இரு வகைப்படும் என்றுமுன்

கூறப் பட்டன இங்கண் அவற்றுள்

சாதன் மியதிட் டாந்தஆ பாசம்

330

ஓதில் ஐந்து வகைஉள தாகும்

சாதன தன்ம விகலமும் சாத்திய

தன்ம விகலமும் உபய தன்ம

விகலமும் அநன்னு வயவிப ரீதான்

னுவயம் என்ன, வைதன் மியதிட்

335

டாந்த ஆபா சமும்ஐ வகைய

சாத்தி யாவி யாவி ருத்தி

சாத னாவி யாவி ருத்தி

உபயாவி யாவி ருத்திஅவ் வெதிரேகம்

விபரீத வெதிரேகம் என்ன, இவற்றுள்

340

சாதன தன்ம விகலம் ஆவது

திட்டாந் தத்தில் சாதனம் குறைவது

சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்

யாதொன்று யாதொன்று அமூர்த்தம்அது நித்தம்

ஆதலால் காண்புற்றது பரமாணு வில்எனில்

345

திட்டாந்த தப்பர மாணு

நித்தத் தோடு அமூர்த்தம் ஆதலால்

சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பிச்

சாதன தன்மஅமூர்த் தத்துவம் குறையும்

சாத்திய தன்மம் விகலம் ஆவது

350

காட்டப் பட்ட திட்டாந் தத்தில்

சாத்திய தன்மம் குறைவு படுதல்

சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால்

யாதொன்று யாதொன்று அமூர்த்தம்அது நித்தம்

புத்தி போஒல் என்றால்

355

திட்டாந்த மாகக் காட்டப் பட்ட

புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே

அநித்தம் ஆதலால் சாதன அமூர்த்தத்துவம்

நிரம்பிச் சாத்தியம் நித்தத்துவம் குறையும்

உபய தன்ம விகலம் ஆவது

360

காட்டப் பட்ட திட்டாந் தத்திலே

சாத்திய சாதனம் இரண்டும் குறைதல்

அன்றியும் அதுதான் சன்னும் அசன்னும்

என்றுஇரு வகையாம் இவற்றுள்சன் னாஉள

உபய தன்ம விகலம் ஆவது

365

உள்ள பொருள்கள் சாத்திய சாதனம்

கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல்

சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்

யாதொன்று யாதொன்று அமூர்த்தம்அது நித்தம்

கடம்போல் எனில்திட் டாந்த மாகக்

370

காட்டப் பட்டகடம் தான்உண் டாகிச்

சாத்திய மாயுள நித்தம் துவமும்

சாதன மாயுள அமூர்த்தத்து வமும்குறையும்

அசன்னா உள்ள உபயதன்ம விகலம்

இல்லாப் பொருள்கண் சாத்திய சாதனம்

375

என்னும் இரண்டும் குறையக் காட்டுதல்

சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்

யாதொன்று யாதொன்று மூர்த்தம்அது அநித்தம்

ஆகாசம் போல்எனும் திட்டாந் தத்துச்

சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும்

380

சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும்

இரண்டும் ஆகாசம் அசத்துஎன் பானுக்கு

அதன்கண் இன்மை யானே குறையும்

உண்டுஎன் பானுக்கு ஆகாசம் நித்தம்

அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும்

385

அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம்

தம்மின் கூட்ட மாத்திரம் சொல்லாதே

இரண்ட னுடைய உண்மையைக் காட்டுதல்

சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின்

யாதொன்று யாதொன்று கிருத்தம்அது அநித்தம்எனும்

390

அன்னுவயம் சொல்லாது குடத்தின் கண்ணே

 

கிருத்த அநித்தம் காணப் பட்ட

என்றால் அன்னுவயம் தெரியா தாகும்

விபரீதான் னுவயம் வியாபகத் துடைய

அன்னுவயத் தாலே வியாப்பியம் விதித்தல்

395

சத்தம் அநித்தம் கிருத்தத் தால்எனின்

யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம்என

வியாபகத் தால்வியா பகத்தைக் கருதாது

யாதொன்று யாதொன்று அநித்தம்அது கிருத்தம்என

வியாபகத் தால்வியாப் பியத்தைக் கருதுதல்

400

அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை

இன்றியும் நிகழ்த லின்விப ரீதமாம்.

வைதன்மிய திட்டாந் தத்துச்

சாத்தி யாவியா விருத்தி யாவது

சாதன தன்மம் மீண்டு

405

சாத்திய தன்மம் மீளாது ஒழிதல்

சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்

யாதொன்று யாதொன்று நித்தமும் அன்றுஅது

அமூர்த்தமும் அன்று பரமாணுப் போல்எனின்

அப்படித், திட்டாந்த மாகக் காட்டப் பட்ட

410

பரமாணு நித்தமாய் மூர்த்தம் ஆதலின்

சாதன அமூர்த்தம் மீண்டு

சாத்திய நித்தம் மீளாது ஒழிதல்

சாதனாவியா விருத்தி யாவது

சாத்திய தன்மம் மீண்டு

415

சாதன தன்மம் மீளாது ஒழிதல்

சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்

யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது

அமூர்த்தமும் அன்று கன்மம்போல் என்றால்

வைதன் மியதிட் டாந்த மாகக்

420

காட்டப் பட்ட கன்மம்

அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின்

சாத்திய மான நித்தியம் மீண்டு

சாதன மான அமூர்த்தம் மீளாது

உபயாவி யாவிருத்தி காட்டப் பட்ட

425

வைதன் மியதிட் டாந்தத்தி னின்று

சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும்

உண்மையின் உபயா வியாவி ருத்தி

இன்மையின் உபயா வியாவி ருத்தி

எனஇரு வகை உண்மையின்

430

உபயாவி யாவிருத்தி உள்ள பொருள்கண்

சாத்திய சாதனம் மீளா தபடி

வைதன் மியதிட் டாந்தம் காட்டல்

சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின்

என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம்அன்று

435

அமூர்த்தமும் அன்றுஆ காசம்போல் என்றால்

வைதன்மிய திட்டாந்த மாகக் காட்டப்பட்ட

ஆகா சம்பொருள் என்பாற்கு

ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான்

சாத்திய நித்தமும் சாதனமா உள்ள

440

அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின்

உபயாவி யாவிருத்தி யாவது

சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்

என்றஇடத்து யாதொன்று யாதொன்று அநித்தம்

மூர்த்தமும் அன்றுஆ காசம் போல்என

445

வைதன் மியதிட் டாந்தம் காட்டில்

ஆகா சம்பொருள் அல்லஎன் பானுக்கு

ஆகாசந் தானே உண்மையின் மையினால்

சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும்

மீட்சியும் மீளா மையும்இலை யாகும்

450

அவ்வெதி ரேகம் ஆவது சாத்தியம்

இல்லா விடத்துச் சாதனம் இன்மை

சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம்

நித்தம் பண்ணப் படாமையால் என்றால்

யாதொன்று யாதொன்று நித்தம் அன்று

455

பண்ணப் படுவது அல்லா ததுவும்

அன்றுஎனும் இவ்வெதி ரேகம் தெரியச்

சொல்லாது குடத்தின் கண்ணே பண்ணப்

படுதலும் அநித்தமும் கண்டேம் ஆதலான்

என்னின் வெதிரே கம்தெரி யாது

460

விபரீத வெதிரேகம் ஆவது

பிரிவைத் தலைதடு மாறாச் சொல்லுதல்

சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின்

என்றால் என்று நின்ற இடத்து

யாதோர் இடத்து நித்தமும் இல்லைஅவ்

465

விடத்து மூர்த்தமும் இல்லை எனாதே

யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லைஅவ்

விடத்து நித்தமும் இல்லை என்றால்

வெதிரேகம் மாறு கொள்ளும் எனக்கொள்க

நாட்டிய இப்படித் தீயசா தனத்தால்

470

காட்டும் அனுமான ஆபா சத்தின்

மெய்யும் பொய்யும் இத்திற விதியால்

ஐயம் இன்றி அறிந்துகொள் ஆய்ந்துஎன்.

 

தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை முற்றிற்று.