தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

 ராஜராஜேஸ்வரமுடையார், ஐராவதேஸ்வரர்

ஊர் :

தாராசுரம்

வட்டம் :

கும்பகோணம்

மாவட்டம் :

தஞ்சாவூர்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

ஐராவதேஸ்வரர்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

வேதநாயகி

தலமரம் :

வில்வமரம்

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

திருவிழாக்கள் :

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பிரதோஷம், பௌர்ணமி

தலவரலாறு :

இரண்டாம் இராஜராஜனின் காலத்தில் இராஜராஜேச்சுரம் என்று பெயரிடப்பட்டு, இன்று தராசுரமென மருவி வழங்கப்படுகிறது. ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கிற யானை துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று என்றும் தல புராணம் தெரிவிக்கிறது. இந்திரனின் வெள்ளை யானையான ஐராவதம் வந்து இங்கு வழிபாடு செய்ததால் இறைவனின் பெயர் ஐராவதேஸ்வரர். எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் "எமதீர்த்தம்" என அழைக்கப்படுகிறது. இத்திருத்தலம் தொடர்பான மற்றொரு புராணமும் உள்ளது. மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து, தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுகிறது.

பாதுகாக்கும் நிறுவனம் :

ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகம் (UNESCO) மரபுச் சின்னமாக விளங்குகிறது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, இந்துசமய அறநிலையத்துறை ஆகியவற்றின் கீழ் வழிபாட்டில் உள்ளது

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

சுவாமி மலை முருகன் கோயில், பட்டீஸ்வரம் துர்க்கை கோயில், சக்கராயி கோயில்

சுருக்கம் :

சென்னையிலிருந்து சுமார் 380 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரத்தின், தொன்மையான பெயர் ராஜராஜபுரம். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் பிற்காலச் சோழர் கலைப்பாணி கொண்டு சிறந்த கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இக்கோயில் விமானம் 85 அடி உயரம் கொண்டது. தமிழ்நாட்டில் யுனஸ்கோ நிறுவனத்தினால் பாதுகாப்பட வேண்டிய உலக மரபுச் சின்னம் என்று அறிவிக்கப்பட்ட பெருமையுடைய கோயில்களுள் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளமை இந்தியாவில் வேறெங்கும் பார்க்க இயலாத ஒன்று. விரல்நுனி அளவிலிருந்து விரல், கை, முழங்கை, எட்டுவகையிலான எட்டு தாளம், ஒன்பது வகை நவதாளம், பத்துமடங்கு தசதாளம் என்றெல்லாம் விதவிதமான அளவில் விசித்திரமான சிற்பங்கள் நிறைந்த சிற்பச் சரணாலயமாக இக்கோயில் திகழ்கிறது. 800 ஆண்டுகளுக்கு முன் மாமன்னன் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்ட இக்கோயில் சிற்பம், ஆடல், கட்டுமானம், கட்டடம், வானவியல், கோயில் ஐதீகம், புராணங்கள், சிவதத்துவம் போன்ற பல்வேறு துறைசார்ந்த நுட்பமாண வேலைபாடுகளை உடைய கோயிலாகத் திகழ்கிறது. இக்கோயில் பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும். சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். மூவருலாவில் இக்கோயிலைக் கட்டிய இரண்டாம் இராஜராஜன் சிறப்பிக்கப்படுகிறான். ஒட்டக்கூத்தர் எழுதிய மூவருலா விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜசோழன் ஆகிய மூவருடைய புகழைப் பாடுவதாக அமைந்த இலக்கியமாகும். கட்டிடக் கலை, சிற்பக்கலை, கலை நுணுக்கம் ஆகிய அனைத்து சிறப்புக்களும் கொண்ட ஒரு கோயில் தாராசுரம். தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் கண்டது. 63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2004-ல் ஐராவதேஸ்வரர் கோயில் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.12-ஆம் நூற்றாண்டு / இரண்டாம் இராஜராஜன்

கல்வெட்டு / செப்பேடு :

சுவரோவியங்கள் :

கோட்டச் சிற்பங்கள் மற்றும் கண்டப் படை சிற்பங்கள் அனைத்தும் வண்ணந் தீட்டப்பட்டிருந்த எச்சங்கள் காணப்படுகின்றன

சிற்பங்கள் :

கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் பொதுவாக சிவபுராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி, கண்ணப்பர் போன்ற சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர், மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், மழுவும், கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவன், சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிற்பம் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார். மண்டபத்தின் மேல் பிரகாரத்தில் நாயன்மார்கள், 108 சிவனடியார்களின் உருவங்கள் ஆகியவை ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனப்படும் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது . குதிரைகள், யானைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்தது. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நடன முத்திரைகள் காட்டும் ஆடல் மகளிர் சிற்பங்களும், இசைக் கலைஞர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன. கருவறை, மற்றும் மண்டபங்களின் புறச்சுவர்ப் பகுதியில் உள்ள வேதிகை கண்டப்படையில் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் புடைப்பு வடிவங்களாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் அட்ட திக்கு பாலகர்களின் புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன.

கோயிலின் அமைப்பு :

சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜனால் (1146-1173பொ.ஆ) கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயில். நான்கு தளங்களைக் கொண்ட இக்கோயில் மூன்று மண்டபங்களையும் ஒரு கருவறையையும் கொண்டுள்ளது. கருவறை துணை தாங்குதளம், தாங்குதளம், சுவர் உள்ளிட்ட விமான உறுப்புக்களைப் பெற்றுள்ளது. திராவிட பாணியில் இக்கோயில் கருவறை விமானம் அமைந்துள்ளது. இதில், குதிரைகளால் இழுக்கப்படும் கல் தேராக, ராஜ கம்பீரன் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இது முன்மண்டபமாக, கோவிலின் தெற்குப் புறத்தில் அமைந்துள்ளது. மேலும் அர்த்த மண்டபம், மற்றும் மகா மண்டபம் தூண்களுடன் காணப்படுகின்றன. கருவறை விமானம் மற்றும் மண்டபங்களின் துணைத் தாங்குதளங்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும் சுவர்ப்பகுதியில் உள்ள வேதிகை கண்டப்படையில் 63 நாயன்மார்களின் பெரியபுராண வரலாறு சிற்ப வடிவங்களாக்கப் பட்டுள்ளன. இங்கு அம்மன் கோவில் தனித் திருச்சுற்று மதிலுடன் கோயிலுக்கு வடக்கே உள்ளது. இக்கோயிலின் முன்பகுதியில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்து பல கட்டடப் பகுதிகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

அமைவிடம் :

ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம், கும்பகோணம்

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை

செல்லும் வழி :

கும்பகோணத்திலிருந்து மேற்கே 5 கி.மீ. தொலைவில் தாராசும் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்துகள், சிற்றுந்துகள் செல்கின்றன.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

கும்பகோணம், சுவாமி மலை

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

கும்பகோணம், தாராசும்

அருகிலுள்ள விமான நிலையம் :

திருச்சி

தங்கும் வசதி :

கும்பகோணம், தஞ்சாவூர் விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:54(இந்திய நேரம்)