அருள்மிகு திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்
- கோவில் விவரங்கள்
- சிறப்புகள்
- செல்லும் வழி மற்றும் வரைபடம்
- காட்சிக்கூடம்
வேறு பெயர்கள் :
தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டு நாதர்
சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :
பூசைக்காலம் :
காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
தலவரலாறு :
சும்பன், நிசும்பர் என்ற இரு அரக்கர்கள் ஆலமரங்கள் நிறைந்த இந்த காட்டில் இருந்து கொண்டு தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் தீங்கு விளைவித்தனர். இதனால் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிடவே, பார்வதி தேவி தன்மற்றொரு வடிவான காளி தேவியை இத்தலத்திற்கு அனுப்பினாள். இவ்வாலங்காட்டிற்கு வந்த காளியும் அரக்கர்களை அழித்து அவர்கள் இரத்தத்தை உண்ட காளி பல கோரச் செயல்களைப் புரிந்தவாறு இக்காட்டிற்கு தலைவியாக விளங்கினாள். முஞ்சிகேச கார்க்கோடக முனிவர் சிவனிடம் முறையிடவே, சிவன் கோரவடிவங் கொண்டு ஆலங்காட்டையடைந்தார். காளி சிவனிடம், நீ என்னுடன் நடனமாடி வென்றால் இக்காட்டை ஆளலாம் என்றாள். போட்டி நடனம் தொடங்கியது. சிவபெருமான் ஒற்றைக்காலை மேலேத்தூக்கி ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார். அதனை ஒரு பெண்ணாகவிருந்து செய்யவியலாத காளி தான் தோற்றதை ஒப்புக்கொள்கிறாள். இறைவனும் முன் தோன்றி உன்னை வணங்கி பின் என்னை அடைவார்கள் என அருள்பாலிக்கிறார். எனவே இங்கு காளி கோயில் தனித்து விளங்குகிறது. முஞ்சிகேச கார்க்கோடகனும், சுனந்தமுனிவரும் இங்கு சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.
பாதுகாக்கும் நிறுவனம் :
இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :
கைலாசநாதர் கோயில், பழையனூர் நீலி கோயில்
சுருக்கம் :
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் கி.பி.11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜேந்திர சோழனால் திருப்பணி செய்யப்பட்டது. முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இங்குள்ள தாய்த்தெய்வத்திற்கு நிலக்கொடையளித்த செய்தியைக் குறிப்பிடுகிறது. வடஆரண்யம் என்றால் ஆலமரக்காடு என்று பொருள்படும். பண்டையக் காலத்தில் இத்தலம் ஆலமரங்கள் நிறைந்திருந்த காடாக காட்சியளித்ததால் இப்பெயர் பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இது 248-வது தலமாகும். தொண்டைமண்டல பாடல் பெற்ற தலங்களுள் இது 15-வது திருத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர், காரைக்கால் அம்மையார் ஆகியோர் இத்தலத்தைப் பாடியுள்ளனர். காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த திருத்தலமாகும். சிவபெருமான் நடனமாடிய பஞ்சசபைகளுள் இச்சபை இரத்தின சபையாகும். இங்குள்ள ஊர்த்துவதாண்ட சிவபெருமானின் செப்புத்திருமேனி சோழர்காலத்தியது ஆகும். சிவபெருமான் காளியுடன் போட்டி நடனம் ஆடியவிடமாக இத்தலத்தை தலவரலாறு குறிப்பிடுகிறது. இங்கு காளிக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது. காரைக்கால் அம்மையார் தன்னுடைய மூத்த திருவாலாங்காட்டுப் பதிகத்தில் இத்தலத்தையே பாடியுள்ளார். இக்கோயிலில் உள்ள கமலத்தேர் அதாவது தாமரை மலர் போன்ற வடிவிலான தேர் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
காலம் / ஆட்சியாளர் :
கி.பி.11-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜேந்திர சோழன்
கல்வெட்டு / செப்பேடு :
முதலாம் இராஜேந்திர சோழனால் தானமளிக்கப்பட்ட செய்தியைக் கூறும் திருவாலங்காட்டு செப்பேடுகள் இத்தலத்திற்கு உரியதாகும். சோழர் செப்பேடுகளில் பெண் தெய்வத்திற்கு கொடுத்த நிலக்கொடையை எல்லைகளைக் கூறி ஆவணப்படுத்தப்பட்ட செப்பேடு இதுவாகும். நடராசப் பெருமான் திருவரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பெருமானுக்கு வத்ஸ்ராசன் என்பவன் விளக்கெரிக்க நிலம் அளித்துள்ளான். இங்குள்ள மண்டபம் ஒன்று, மூன்றாம் குலோத்துங்கன் காலத்து அம்மை அப்பன் பழி அஞ்சிய பல்லவராயன் என்பவனால் கட்டப்பட்டது. இவ்வூரில் உள்ள தென்னையும், பனையும் சான்றார்களால் கள் இறக்கப்படாதவை என்னும் குறிப்புக் காணப்படுகிறது. இது கொண்டே மதுவிலக்குக் குறிப்பு அக்காலத்திலும் நடைமுறையில் இருந்ததை அறிந்து மகிழ்வோமாக. பழையனூரைக் கங்கை கொண்ட சோழனும் இராசேந்திரசோழன் திருவாலங்காடுடைய மகாதேவருக்குத் தானமாகக் கொடுத்துள்ளான். இதனை இராஜேந்திர சோழன் வெளியிட்ட திருவாலங்காடு செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. பழையனூர் என்பது திருவாலங்காட்டுத் தலத் திற்கு ஒரு கல் தொலைவில் உள்ளது.
சிற்பங்கள் :
கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். ஊர்த்துவ தாண்டவமாடும் ஆடல்வல்லான் செப்புத்திருமேனி இங்கு உள்ளது சிறப்பு. இந்த திருமேனி சோழர் காலத்தியது. காரைக்கால் அம்மையாரின் சுதைச்சிற்பம் மதில் வாயிலில் காட்டப்பட்டுள்ளது. காளியின் செப்புத்திருமேனி தனித் திருமுன் கொண்டு விளங்குகிறது. இராஜகோபுரத்தின் தளங்களில் சுதைச் சிற்பங்கள் உள்ளன. 16 கால் மற்றும் 100 கால் மண்டபங்களின் தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறை விமானத்தின் தேவக்கோட்டங்களில் தெற்கில் தென்முகக் கடவுளும், மேற்கில் அண்ணாமலையாரும், வடக்கில் நான்முகனும் காட்சியளிக்கின்றனர். அர்த்தமண்டப வெளிப்புறச் சுவர் கோட்டங்களில் தெற்கில் ஆடல் கணபதியும், வடக்கில் துர்க்கையும் காட்டப்பட்டுள்ளனர். மேலும் உட்புறசுற்றில் திருமகள், பூமகள் உடன் விஜயராகவப் பெருமாள், கணபதி, அகோர வீரபத்திரர், முருகன், ஏழுகன்னியர், தேவார மூவர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், கார்க்கோடகர், மூஞ்சிகேச முனிவர், பதஞ்சலி, சூரியன், சந்திரன் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
கோயிலின் அமைப்பு :
நுழைவாயிலை அடுத்து 16 கால் மண்டபம் காணப்படுகிறது. அடுத்து 100 கால் மண்டபம் காணப்படுகின்றது. இராஜகோபுரம் 5 நிலைகளைக் கொண்டுள்ளது. அதில் சுதைச் சிற்பங்கள் உள்ளன. இராஜகோபுரத்தின் இருபுறங்களிலும் கணபதி, முருகன் சிறுகோயில்கள் அமைந்துள்ளன. அதனையடுத்து கொடியேற்று மண்டபமும், சுக்கிரவார மண்டபமும் அமைந்துள்ளன. நந்தி சிறுமண்டபத்தில் அமர்ந்துள்ளது. பலிபீடத்தைத் தொடர்ந்து, சிறிய உட்புறக் கோபுரம் அமைந்துள்ளது. இக்கோபுரம் 3 தளங்களை உடையது. இதில் இறைவனின் ஊர்த்துவத் தாண்டவம், காரைக்கால் அம்மையார் தாளமிடுதல் ஆகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முதல் திருச்சுற்றில் முருகன், விநாயகர், பைரவர், காளி, கஜலெட்சுமி, சண்டிகேசர் ஆகியோருக்கு தனித்தனி சிறு கோயில்கள் அமைந்துள்ளன. கருவறை விமானத்தின் தேவக்கோட்டங்களில் தெற்கில் தென்முகக் கடவுளும், மேற்கில் அண்ணாமலையாரும், வடக்கில் நான்முகனும் காட்சியளிக்கின்றனர். அர்த்தமண்டப வெளிப்புறச் சுவர் கோட்டங்களில் தெற்கில் ஆடல் கணபதியும், வடக்கில் துர்க்கையும் காட்டப்பட்டுள்ளனர். மேலும் திருச்சுற்று மாளிகை அமைந்துள்ளது. மேலும் வண்டார்குழலி அம்மனுக்கு தனி திருமுன் இங்குள்ளது. அம்மன் நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார்.
அமைவிடம் :
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் கோயில், திருவாலங்காடு-609810, திருவள்ளுர்
கோவில் திறக்கும் நேரம் :
காலை 7.00 முதல் மாலை 10.00 வரை
செல்லும் வழி :
திருவள்ளுரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் அரக்கோணம் செல்லும் வழியில் திருவாலங்காடு அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம் :
அரக்கோணம், மணவூர், திருவாலங்காடு
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :
மணவூர், அரக்கோணம், திருவாலங்காடு
அருகிலுள்ள விமான நிலையம் :
தங்கும் வசதி :
திருத்தணி, திருவள்ளுர் விடுதிகள்,
சாலை வரைபடம்
படங்கள்
-
வடாரண்யேஸ்வரர் கோயில், கோபுரம், திருவாலங்காடு, திருவள்ளுர், கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு
-
வடாரண்யேஸ்வரர் கோயில், நந்தி மண்டபம், கொடி மரம், உட்புறக்கோபுரம், திருவாலங்காடு, திருவள்ளுர், கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு
-
வடாரண்யேஸ்வரர் கோயில், பலிபீடம், திருவாலங்காடு, திருவள்ளுர், கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு
-
வடாரண்யேஸ்வரர் கோயில், வாயிற்காவலர்கள், திருவாலங்காடு, திருவள்ளுர், கி.பி.15- ஆம் நூற்றாண்டு
-
வடாரண்யேஸ்வரர் கோயில், ஒற்றைக்காலை உயரத் தூக்கி ஆடும் ஆடல் வல்லான் (ஊர்த்துவ தாண்டவர்) திருவள்ளுர், கி.பி.15- ஆம் நூற்றாண்டு
-
வடாரண்யேஸ்வரர் கோயில், ஒற்றைக்காலை உயரத் தூக்கி ஆடும் ஆடல் வல்லானோடு போட்டியிடும் காளி, திருவள்ளுர், கி.பி.15- ஆம் நூற்றாண்டு
-
வடாரண்யேஸ்வரர் கோயில், ஒற்றைக்காலை உயரத் தூக்கி ஆடும் ஆடல் வல்லானுக்கு திருமுழுக்காட்டு (ஊர்த்துவ தாண்டவர்) திருவள்ளுர், கி.பி.15- ஆம் நூற்றாண்டு
-
வடாரண்யேஸ்வரர் கோயில், ஒற்றைக்காலை உயரத் தூக்கி ஆடும் ஆடல் வல்லானின் இரத்தின சபை, திருவள்ளுர், கி.பி.15- ஆம் நூற்றாண்டு
-
வடாரண்யேஸ்வரர் கோயில், திருச்சுற்று, திருவாலங்காடு, திருவள்ளுர், கி.பி.15- ஆம் நூற்றாண்டு
-
வடாரண்யேஸ்வரர் கோயில், இரத்தினசபை விமானம், திருவாலங்காடு, திருவள்ளுர், கி.பி.15- ஆம் நூற்றாண்டு
-
வடாரண்யேஸ்வரர் கோயில், இரத்தினசபையிலுள்ள தூண்களின் அமைப்பு, திருவாலங்காடு, திருவள்ளுர், கி.பி.15- ஆம் நூற்றாண்டு