தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு மன்னார்குடி கைலாசநாதர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

கைலாசநாதர்

ஊர் :

மன்னார்குடி

வட்டம் :

மன்னார்குடி

மாவட்டம் :

திருவாரூர்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

கைலாசநாதர்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

பெரியநாயகி

தலமரம் :

வில்வம்

திருக்குளம் / ஆறு :

பாமணி ஆறு

ஆகமம் :

பூசைக்காலம் :

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

திருவிழாக்கள் :

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை

தலவரலாறு :

பாதுகாக்கும் நிறுவனம் :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

மன்னார்குடி இராஜகோபாலசுவாமி கோயில், திருத்துறைப்பூண்டி சிவன் கோயில், திருவாரூர் சிவன் கோயில்

சுருக்கம் :

கைலாசநாதர் கோவில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. பாமணி ஆற்றின் மேற்கு கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு இரு நுழைவாயில்கள் இதன் தென்புற வாயில் பிரதான சாலையை நோக்கியது. மற்றொன்று கிழக்கு திசையை நோக்கியது. இராஜகோபுரம் காணப்படவில்லை. தென்புற வாயிலின் இருமருங்கிலும் நந்தவனம் உள்ளது. மூலவர் சந்நிதி மற்றும் அம்மன் சந்நிதி ஆகிய இரு சந்நிதிகளையும் உள்ளடக்கிய ஒரே ஒரு திருச்சுற்றைக் கொண்ட கோவில். கோவில் முழுமையும் நீண்ட நெடிய செங்கற் சுவரால் சூழப்பட்டுள்ளது. தெற்கு நோக்கிய நிலையில் அம்மன் சந்நிதியும் அதன் வலப்புறம் பள்ளியறை, இடப்புறம் உக்கிராண அறை உள்ளது. கோவிலுக்குக் கொடிமரம் இல்லை. மூலவருக்கு நேர் எதிரே மகாமண்டபத்தில் நந்தியும் பலிபீடமும் ஒரு சிறு மண்டபத்துள் உள்ளன. அம்மன் திருமுன் நேர் எதிரே ஒரு பலிபீடமும் நந்தியும் உள்ளன. வடமேற்கில் முன்புறம் மகாமண்டபத்தோடு கூடிய சுப்ரமணியர் திருமுன் உள்ளது. அதனையடுத்து முன்புறம் மகாமண்டபத்தோடு கூடிய மகாலட்சுமி திருமுன்னும் உள்ளது. மூலவருக்கு வடக்கில் சண்டிகேஸ்வரர் திருமுன் தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது. முதல் பிரகாரத்தின் வடபுறம் சிறு நந்தவனம் உள்ளது. மகாமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் சனீஸ்வரர் உள்ளார். முதல் திருச்சுற்றின் வடகிழக்கு மூலையில் பீடத்தோடு கூடிய யாகசாலையும் அதனையடுத்து நவக்கிரகம், மேற்கு நோக்கிய நிலையில் காளியும், தெற்கு நோக்கிய நிலையில் சண்டிகேஸ்வரர், இரு பைரவர்கள், சூரியன், தில்லைக்காளி, நாகம் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. அதனையடுத்து ஒரு சிறு அறையும் உள்ளது. இந்த உடன்கூட்டத் தெய்வங்களுக்கு நேர் எதிரே அல்லது அம்மன் சந்நிதிக்கு கிழக்கே / இடப்புறம் தீர்த்தக்கிணறு உள்ளது.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு / நகரத்தார்

கல்வெட்டு / செப்பேடு :

மூலவர் திருமுன் அர்த்தமண்டபத்தின் இடப்புறம் உள்ள துவாரபாலகர்களின் பின்புறம், மூலவர் திருமுன் மகாமண்டபம், அர்த்த மண்டபத்தின் தென்புறம், மூலவர் திருமுன் கருவறையின் மேற்கு மற்றும் வடக்குப் புறச் சுவர்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பெரும்பாலான கல்வெட்டுகள் இரசாயன வண்ணப்பூச்சு பூசப்பெற்றும் சுதைக் கட்டுமானங்களாலும் சிதைவடைந்த நிலையில் உள்ளன.

சுவரோவியங்கள் :

கருவறைச் சுவரில் சிவ நடனங்கள் தற்கால ஓவியங்கள் காணப்படுகின்றன.

சிற்பங்கள் :

தென்புற தேவகோட்டத்தில் தென்முகக்கடவுள் (தக்ஷ்ணாமூர்த்தி), மேற்குப்புற தேவகோட்டத்தில் எவ்வித தேவகோட்ட சிற்பமும் காணப்படவில்லை. இருப்பினும் தேவகோட்டத்திற்கு வெளியே கோட்டத்தின் வலஇடப்புறங்களில் சுமார் 1 அடி உயரத்தில் முறையே நான்முகன் மற்றும் திருமால் மூர்த்தங்கள் புடைப்புச் சிற்பமாக உள்ளன. வடப்புற தேவகோட்டத்தில் விஷ்ணுதுர்க்கை உள்ளது. கோவிலின் மேற்குப்புறம் அதாவது மூலவர் கருவறைக்குப் பின்புறம் தெற்கிலிருந்து வடக்காக முறையே விநாயகர், வள்ளி,தெய்வயானை உடனுறை சுப்ரமணியர், மகாலெட்சுமி திருமுன்கள் அமைந்துள்ளன. பெரும்பாலான தூண்களின் சதுரப் பகுதியில் யானை, மயில் போன்ற சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

கோயிலின் அமைப்பு :

இக்கோயில் கருவறை, இடைநாழிகை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அர்த்தமண்டபத்திற்கு இரு நுழைவாயில்கள் உள்ளன. ஒரு நுழைவாயில் மகாமண்டபத்தோடு கூடிய கிழக்குப் புறத்திலும் கோவிலின் தென்புற வாயிலோடு தொடர்புடையவாறு மற்றொரு நுழைவாயிலும் அமைந்துள்ளன. கருவறை வாயிலின் வலப்புறம் ஒரு சிறு விநாயகர் சிற்பமும் அர்த்த மண்டபத்தின் வடபுறம் நீளவாக்கில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறையில் பஞ்சலோக சிற்பங்களும் உள்ளன. தென்புற சுவரையொட்டி நால்வர் சிற்பங்களும் உள்ளன. அர்த்தமண்டபம் இரு தூண்களோடு உள்ளது. இத்தூண்கள் கட்டு, சதுரம் என்ற அமைப்பில் வெட்டுப்போதிகையுடன் கூடிய 16 பட்டைத் தூண்கள் ஆகும். அர்த்தமண்டபத்தின் வலப்புறம் துவார கணபதியும் இடப்புறம் பாலசுப்ரமணியரும் உள்ளனர். அர்த்தமண்டபத்தில் வடபுறம் நடராஜர் திருமுன் உள்ளது. அர்த்தமண்டபத்தில் கருவறையின் வலப்புறம் பஞ்சலோகத்தாலோன சோமாஸ்கந்த சிற்பம் உள்ளது. மூலவருக்கு நேரே மூலவரை நோக்கிய நிலையில் பிரம்மநந்தி, பலிபீடம், புண்யாவாஜனகல், நித்யாகிரிக்குண்டம் மற்றும் கிழக்கு நோக்கிய நிலையில் விநாயகர் ஆகியன உள்ளன. மூலவர் திருமுன் இடப்புறம் மகாமண்டபத்தில் உற்சவ மூர்த்தங்களுக்கான யானை, அன்னம், மயில், ரிஷபம், குதிரை, கையிலாய மலையினைத் தூக்கும் நிலையில் இராவணன் ஆகிய வாகனங்கள் உள்ளன. மூலவர் திருமுன்னுக்கு தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளி உள்ளது. மூலவர் திருமுன் விமானம் ஏகதள விமானம் ஆகும். இவ்விமானம் கீழிருந்து மேலாக உபபீடம், தாங்குதளம், கோட்டம், கூரை, சிகரம், கலசம் என்ற அமைப்பில் உள்ளது. திரிகோண போதிகை, பலகை, பத்மம், கலசம் ஆகியவற்றோடு கூடிய வட்ட வடிவ அரைத்தூண்கள் மற்றும் எண்பட்டையோடு கூடிய சதுரவடிவ அரைத்தூண்கள் உள்ளன. தென்புற தேவகோட்டத்தில் தென்முகக்கடவுள், மேற்குப்புற தேவகோட்டத்தில் எவ்வித தேவகோட்ட மூர்த்தமும் காணப்படவில்லை. இருப்பினும் தேவகோட்டத்திற்கு வெளியே கோட்டத்தின் வல, இடப்புறங்களில் சுமார் 1 அடி உயரத்தில் முறையே பிரம்மா மற்றும் விஷ்ணு மூர்த்தங்கள் புடைப்புச் சிற்பமாக உள்ளன. வடப்புற தேவகோட்டத்தில் விஷ்ணுதுர்க்கை உள்ளது. மகாமண்டபத்தின் புறச்சுவர்ப் பகுதி உபபீடம், ஜகதி, முப்பட்கக் குமுதம், கண்டம், பத்மம், கோஷ்ட்டம், குமுதம் என்ற வரிசையில் கீழிருந்து மேலாக உள்ளன. அம்மன் சந்நிதி விமானம் ஏகதளவிமானம் ஆகும். இவ்விமானம் கருவறை, அந்தராளம், மகாமண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கியது. வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகள் இன்றி கல்லினாலான இரு யானைகள் உள்ளன. புறச்சுவர் பகுதியில் உச்சியில் பலகையோடு கூடிய சதுர வடிவ அரைத்தூண்கள் உள்ளன. அம்மன் சந்நிதிக்கென்று தனியே திருச்சுற்று, திருச்சுற்று மண்டபம், கொடிமரம் காணப்படவில்லை. கோவிலின் மேற்குப்புறம் அதாவது மூலவர் கருவறைக்குப் பின்புறம் தெற்கிலிருந்து வடக்காக முறையே விநாயகர், வள்ளி,தெய்வயானை சமேத சுப்ரமணியர், மகாலெட்சுமி திருமுன்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் அல்ப விமானங்களோடு முன்புறம் சிறு 4 கால் மண்டபத்தோடு உள்ளன. இவற்றின் புறச்சுவர்ப் பகுதி முழுமையுமே திரிகோணபோதிகையுடன் கூடிய சதுரவடிவ அரைத்தூண்கள் அணிசெய்கின்றன.

அமைவிடம் :

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், மன்னார்குடி-614 001, திருவாரூர்

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.30 வரை

செல்லும் வழி :

கைலாசநாதர் கோவில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

மன்னார்குடி

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

மன்னார்குடி

அருகிலுள்ள விமான நிலையம் :

திருச்சி, சென்னை மீனம்பாக்கம்

தங்கும் வசதி :

திருவாரூர் விடுதிகள்
சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:50(இந்திய நேரம்)