தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தமிழ்
  • English

5.1 திருமந்திரம்

  • 5.1 திருமந்திரம்

    திருமந்திரம் தமிழ் ஆகம நூல். வேதம் பொது நூல் என்றும்,
    ஆகமம் சிறப்பு நூல் என்றும் சைவர் கூறுவர். திருமந்திரத்தில்
    பாயிரம் என்று ஒரு பகுதி உள்ளது. இந்நூலில் ஒன்பது
    உட்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தந்திரம் என்பது
    பெயர். இதில் 232 அதிகாரங்கள் உள்ளன. இப்பொழுது இதில்
    3100 செய்யுட்கள் உள்ளன. ‘மூலன் உரை செய்த மூவாயிரம்
    தமிழ்’ என்பதனால் இதற்கு உரியவை 3000 செய்யுட்களே என்று
    அறியலாம். எஞ்சியவை பிற்சேர்க்கையாம்.

    ஆசிரியர் இதற்கு இட்ட பெயர் திருமந்திர மாலை. தமிழ்
    மூவாயிரம்
    என்றும் இதனைக் கூறுவர். தமிழில் தோன்றிய
    ஒன்பது ஆகமங்களே ஒன்பது தந்திரங்களாக இயற்றப்பட்டன
    என்பது அறிஞர் கருத்து. இதற்கு வடமொழியில் மூலநூல்
    இல்லையென்பர். முழுத்தமிழில் பாடினார் திருமூலர் என்ற
    நம்பியாண்டார் நம்பியின் வாக்கினை இங்கே எண்ணிப்
    பார்க்கலாம்.

    5.1.1 திருமூலநாயனார்
    சைவ சமய அடியாருள் காலத்தால் முந்தியவர்கள் திருமூல நாயனாரும், காரைக்கால் அம்மையாரும் ஆவர்.
    திருமூலநாயனார்
    காரைக்கால் அம்மையார்

    திருமூலர் சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவர். சுந்தர
    மூர்த்தி நாயனார், ‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’
    என்று தம் பேரன்பு தோன்றக் கூறினார். கி.பி. 10-ஆம்
    நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பிகள், தம்
    திருத்தொண்டர் திருவந்தாதியில்,


    குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம்
    மேய்ப்போன் குரம்பை புக்கு
    முடி மன்னு கூனல் பிறையாளன்
    தன்னை முழுத்தமிழின்
    படிமன்னு வேதத்தின் சொற்படியே
    பரவி விட்டு என் உச்சி
    அடிமன்ன வைத்த பிரான் மூலன்
    ஆகின்ற அங்கணனே (36)

    என்று பாடினார். மூலன் என்பவர், சாத்தனூரைச் சேர்ந்தவனும்,
    ஆக்களை மேய்ப்பவனும் ஆன இடையன் ஒருவன் இறந்தபோது,
    அவன் உடம்பில் தன் உயிரைச் செலுத்தியவர். அவர் வேதத்தில்
    சொன்னவாறே சிவபெருமான் பெருமையினை முழுத்தமிழில்
    பாடினார் என்பது இச்செய்யுளால் அறியப்படும் செய்திச்
    சுருக்கமாகும்.

    கி.பி. 12-ஆம் நூற்றாண்டினரான தெய்வச் சேக்கிழார் தம்
    பெரியபுராணத்தில்
    திருமூலர்     வரலாற்றை விரிவாகப்
    பாடுகின்றார். அவர் கூறும் வரலாற்றுச் சுருக்கம் வருமாறு:-

    திருமூலர் திருக்கயிலையில் வாழ்ந்த சிவயோகியார். அவர்
    தமிழகத்தில் பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய
    மாமுனிவரைக் காண விரும்பினார். பல தலங்களை வணங்கினார்.
    அவர் காவிரிக்கரைப் பகுதிக்கு வந்து சேர்ந்தார். ஆவடுதுறையில்
    கோயில் கொண்டுள்ள சிவபெருமானை வணங்கி, சில நாள்
    அங்கே தங்கியிருந்தார். அவ்விடம்     விட்டு நீங்கும்

    பொழுது,     காட்டில்     பசுக்களின்
    கதறலைக்     கேட்டார்.     அவற்றை
    மேய்த்த இடையன் இறந்தமையே
    ஆக்களின் துயருக்குக் காரணம் என
    உணர்ந்தார். தம் ஆற்றலால் தம் உயிரை

    ஆயனின் உடம்பில் புகச் செய்தார். ஆக்களை உரியவரிடம்
    சேர்த்தார். ஆயன் மனைவி, இவரைத் தன் கணவன் என்று
    கருதி நெருங்கிய பொழுது, ‘எனக்கு உன்னோடு உறவு இல்லை’
    என்று கூறி, சாத்தனூரின் பொதுவிடத்தில் சிவயோகத்தில்
    அமர்ந்தார்.

    பின்னர்த் தம் உடம்பைத் தேடிச் சென்றார். இறைவன்
    அதனை வேண்டும் என்றே மறைத்தருளினார். பின்னர் அவர்
    ஆவடுதுறைக்குச் சென்றார். திருக்கோயிலுக்கு மேற்கில் இருந்த
    அரசமரத்தடியில் அமர்ந்தார். மூவாயிரம் ஆண்டுகள் தவம்
    இருந்தார். ஆண்டுக்கு ஒரு செய்யுளாக 3000 செய்யுட்களை
    இயற்றினார். அங்ஙனம் இயற்றப்பட்டதே திருமந்திரம் என்னும்
    ஆகம நூல் என்பார் பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார்.
  • காலம்

  • சுந்தரர் கி.பி. எட்டாம் நூற்றாண்டினர். அவர் திருமூலருக்கு
    வணக்கம் சொல்வதனால் திருமூலர் காலத்தால் முந்தியவர்.

    அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடல்களில்
    திருமூலரின் செல்வாக்குக்     காணப்
    படுவதால், அவர்களின் காலமான கி.பி.
    ஏழாம் நூற்றாண்டுக்கும் முற்பட்டவர்
    திருமூலர் என்று தெரிகிறது. தில்லைத்
    திருக்கோயிலில் உள்ள சிற்றம்பலத்திற்குக்
    கி.பி. 500-ல் ஆண்ட பல்லவ அரசன் சிம்மவர்மன் பொன் வேய்ந்தான்.

    அதன்பின் அது பொன்னம்பலம் ஆயிற்று. திருமூலர்
    இப்பெயரைக் கையாள்கின்றார். எனவே, திருமூலர் கி.பி. ஐந்தாம்
    நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்பர் அறிஞர்.

    5.1.2 திருமந்திரத்தின் பாடுபொருள்

    சைவ சமயத்தின் தத்துவத்தைச் சைவசித்தாந்தம் என்பர். பதி,
    பசு, பாசம் என்ற மூன்றும் இச்சித்தாந்தத்தின் அடிப்படைக்
    கூறுகள். (பதி - இறைவன்; பசு - உயிர்கள்; பாசம் - ஆணவம்,
    கன்மம், மாயை என்ற மூன்று மலங்கள்). திருமந்திர நூலின்
    பெரும் பகுதி சைவ சமயத் தத்துவங்களை விளக்குவது. அத்துடன்,
    எல்லாருக்கும் பொதுவான அறக் கருத்துகளும் இதில் உள்ளன.
    அன்புடைமை, அருள் உடைமை, நிலையாமை, கொல்லாமை,
    புலால் மறுத்தல் முதலானவை இவற்றுள் சிலவாகும்.

    இந்நூலின் முதல் நான்கு தந்திரங்கள் சிவஞானத்தைப் பெற
    விரும்புவோர் அதற்குத் தம்மைத் தகுதியாளராக்கிக் கொள்ளுதற்கு
    உரிய வழிகளை விளக்குகின்றன.

    ஐந்தாவது தந்திரம் சைவ சித்தாந்த உண்மைகளை
    விவரிக்கின்றது. ஆறு முதல் ஒன்பது இறுதியான தந்திரங்கள்
    ஞானம் பெறும் நிலையில் உணர்ந்து பெறத்தக்கனவாக உள்ள
    நல்ல பயன்கள் பற்றி உணர்த்துகின்றன.

    ஆசனம், பிராணாயாமம், தியானம், சமாதி முதலியன பற்றியும்,
    எண்பெரும் சித்திகள் பற்றியும், உடம்பைப் பேணிக் காக்கும் வழி
    பற்றியும் இந்நூல் விளக்கியுள்ளது.

    சைவ சமயத்தின் நான்கு பிரிவுகள், சரியை, கிரியை, யோகம்,
    ஞானம் என்னும் நான்கு நெறிகள், அந்த நெறிகளில் நிற்பார்
    அடையும் நான்கு நிலைகள் ஆகியன ஐந்தாவது தந்திரத்தில்
    விளக்கப்பட்டுள்ளன.

    இறைவன் இயல்பு, உயிர்களின் இயல்பு, பாசத்தின் பண்பு,
    குருவின் இன்றியமையாமை, நல்வினை தீவினைகள், இவற்றி்ன்
    நீக்கம், ஞானம் கைவரப்பெற்ற சிவயோகிகளின் பெருமையும்,
    தன்மைகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. திருமந்திரம் கூறும்
    தத்துவங்களில் சிலவற்றை இங்கே பார்த்தோம்.
    5.1.3 திருமந்திரச் சிந்தனைகள்

    திருமந்திரம் உலகுக்கு வழங்கும் உயர்ந்த கருத்துகள் மிகப்
    பல. சான்றுக்குச் சில மட்டுமே இ்ங்குச் சுட்டிக் காட்டப்படுகின்றன.
  • அன்பும் சிவமும் ஒன்றே

  • அன்பு வேறு சிவன் வேறு என்பார் அறிவில்லாதவர் என்றும்,
    அன்பும் சிவமும் ஒன்று என்பதே உண்மையென்றும், இதனை
    உணர்ந்தார் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பர் என்றும்
    கூறுகின்றார் திருமூலர்.
    அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.

  • இரு கோயில்கள்

  • உலகில் இரு கோயில்கள் உண்டென்கிறார் திருமூலர். அவை,
    1. படமாடுகின்ற கோயில் 2. நடமாடும் கோயில். நடமாடும்
    கோயிலாவது உயிர்கள். குறிப்பாக மனிதர்கள். கடவுளைப் படமாக
    எழுதி வைத்து வழிபட்டமையால் படமாடக் கோயில் என்றார்.

    தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு
    பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும்
    கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடக்
    கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது
    இறைவனுக்குச் சென்று சேரும் என்று கூறுவார் திருமூலப்
    பெருந்தகை.
    படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
    படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே

    (பகவன் = கடவுள்)

  • உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்

  • சிவஞானம் பெற்றுப் பிறவியை நீக்குவதற்கு உடம்பைப்
    பேணுவது இன்றியமையாதது என்று வற்புறுத்துகிறார் திருமூலர்.
    உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

    உடம்பு என்பது இழிவானதன்று. அது இறைவனுக்கு உரிய
    திருக்கோயில் என்பார் அவர்.

  • ஆசை அறுமின்

  • ஆசையே துன்பத்திற்கு அடிப்படை யென்பர். ஆசை அற்றால்
    அனைத்துத் துன்பங்களும் அழிந்துபோகும். எஞ்சி நிற்பது
    பேரானந்தமே.
    ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
    ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
    ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
    ஆசை விடவிட ஆனந்தம் ஆமே!

  • ஒன்றே குலம் ஒருவனே கடவுள்

  • தமிழர் என்றும் எண்ணிப் பெருமைப்படத்தக்க பொதுமைத்
    தத்துவத்தை வழங்கியவர் திருமூலர். சாதி, மதம், நாடு, மொழி
    என்று பல தடைச் சுவர்களால் சிதறிக்கிடக்கும் மனித குலத்தை
    நோக்கி,
    ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
    நன்றே நினைமின் நமன் இல்லை

    என முழங்கினார்.

    என்றும் நெஞ்சில் நிறுத்தி வாழ்வில் பின்பற்றத்தக்க உயர்ந்த
    நெறிகள் பலவற்றை உள்ளடக்கியது திருமந்திரம் என்று
    குறிப்பிட்டோம். சில பகுதிகள் வருமாறு:-

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் (85)

    ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின் (250)

    உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம் (1823)

    1.
    நம்பியாண்டார் நம்பிகள் நாயன்மார்கள் பற்றி இயற்றிய
    நூலின் பெயரைக் குறிப்பிடுக.
    2.
    திருமூலர் தமிழகத்திற்கு வந்த நோக்கம் யாது?
    3.
    திருமூலர் எந்தத் தலத்தில் தவம் இருந்து திருமந்திரத்தை
    இயற்றினார்?
    4.
    திருமந்திரத்திற்கு ஆசிரியர் இட்ட பெயர் யாது?
புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:03:07(இந்திய நேரம்)