தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொடரில் பொருள் மயக்கம்

  • 4.4 தொடரில் பொருள் மயக்கம்

    சொற்கள் ஓர் ஒழுங்கான முறையில் பொருள் நோக்கில் தொடர்ந்து அமைவதே தொடர். இவ்வாறு அமையும் ஒரு தொடர் பெரும்பாலும் ஒரு பொருளையே தரும். சில வேளைகளில் ஒரு தொடர் இரு பொருள்களைத் தந்து நிற்றல் உண்டு. அப்போது தொடரில் பொருள் மயக்கம் ஏற்படும். இத்தகைய பொருள் மயக்கத்தை இரண்டு பிரிவில் அடக்கலாம் என்று டாக்டர். ச. அகத்தியலிங்கம் கூறுகிறார். ஒன்று, பல பொருள் தரும் ஒரு சொல்லினால் உண்டாவது. இது சொல் மயக்கம் (Lexical ambiguity) எனப்படும். மற்றொன்று, சொற்களின் அமைப்பினால் உண்டாவது. இது அமைப்பு மயக்கம் (Structural ambiguity) எனப்படும். (டாக்டர். ச.அகத்தியலிங்கம், திராவிட மொழிகள். ப.170)

    தொடரில் பொருள் மயக்கம் கூடாது. பொருள் தெளிவு இன்றியமையாதது. இதை நன்கு உணர்ந்த தொல்காப்பியர் இவ்விரு மயக்கமும் இல்லாமல் தொடர்ப் பொருளை (இரு வேறு பொருளை) எங்ஙனம் தெளிவாக உணர்த்த வேண்டும் என்பது பற்றி விளக்கமாகக் கூறுகிறார்.

    4.4.1 சொல் மயக்கம்

    பல பொருள் தரும் ஒரு சொல்லானது, தான் உணர்த்தும் பல்வேறு பொருளுக்கும் உரிய பொது வினையைக் கொண்டு முடிந்தால் தொடரில் பொருள் மயக்கம் ஏற்படும். சான்றாக, மா என்னும் சொல், பல பொருள் தரும் ஒரு சொல்லாகும். இதற்கு மரம், விலங்கு என்று பல்வேறு பொருள்கள் உண்டு. மா என்னும் இச்சொல் வீழ்ந்தது என்ற வினைச்சொல் கொண்டு முடியும் போது,

    மா வீழ்ந்தது

    என்ற தொடர் அமைகின்றது. வீழ்ந்தது என்ற வினை, மா என்ற சொல் உணர்த்தும் மரம், விலங்கு என்னும் இரு பொருள்களுக்கும் உரிய பொது வினையாக உள்ளது. எனவே மா மரம் வீழ்ந்ததா? விலங்கு வீழ்ந்ததா? என்பதைத் தெளிவாக அறிய முடியவில்லை. இதனால் பொருள் மயக்கம் ஏற்படுகிறது. எனவே இத்தகைய நிலையில் தொல்காப்பியர் தொடரில் சொல்லின் பொருளை வெளிப்படுத்திச் சொல்ல வேண்டும் என்கிறார்.

    “மா மரம் வீழ்ந்தது”

    என்றும்,

    விலங்கு மா வீழ்ந்தது”

    என்றும் மா என்ற சொல்லின் இருவேறு பொருள்களை வெளிப்படையாகச் சொல்லித் தொடரை அமைத்தல் வேண்டும். (தொல். சொல். 54, 55) இதனால் பொருள் மயக்கம் தவிர்க்கப்படுகிறது.

    4.4.2 அமைப்பு மயக்கம்

    சொற்களின் அமைப்பினால் பொருள் மயக்கம் உண்டாவது அமைப்பு மயக்கம் எனப்படும்.

    (எ.டு) புலி கொன்ற யானை

    இத்தொடரில், யானை புலியைக் கொன்றதா? புலி யானையைக் கொன்றதா? என்பது தெளிவாக இல்லை. எனவே பொருள் மயக்கம் ஏற்படுகிறது. இத்தகைய மயக்கத்தைத் தவிர்க்கும் முறையைத் தொல்காப்பியர் வேற்றுமை மயங்கியலில் குறிப்பிடுகிறார். (தொல். சொல். 96) அதன்படி இம்மயக்கத் தொடரை, இரண்டாம் வேற்றுமை உருபாகிய வருமாறு விரித்து,

    “புலியைக் கொன்ற யானை”

    என்றும், மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஆன் (ஆல்) வருமாறு விரித்து,

    “புலியால் கொல்லப்பட்ட யானை”

    என்றும் பொருள் மயக்கம் நீங்குமாறு இருவேறு தொடர்களாக்கித் தெளிவாகக் கூற வேண்டும் என்று தெளிவுறுத்துகிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:56:05(இந்திய நேரம்)