தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - C02124-பதத்தின் வகைகள

  • 4.6 பதத்தின் வகைகள்

    நன்னூல், பதம் என்பதை வரையறுக்கும் முதல் நூற்பாவிலேயே பதத்தின் வகைகளையும் வகுத்துக்காட்டியுள்ளது. நன்னூல் பதத்தை இரண்டு வகையாகப் பிரித்துள்ளது. அவை,

    (1)
    பகாப்பதம்
    (2)
    பகுபதம்

    ஆகியன.

    இதனை,

    எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம் : அது பகாப்பதம் பகுபதம் என இருபாலாகி இயலும் என்ப (நன்னூல் நூற்பா - 127)

    என விளக்குகின்றது.

    இந்த இருவகைப் பதங்களும் எவ்வாறு அமையும் என்பதைக் காண்போம்.

    4.6.1 பகாப்பதம்

    இது இரண்டு எழுத்துகள் முதலாக ஏழ் எழுத்து ஈறாகத் தொடர்ந்து வரும் என்பது நன்னூல் கூறும் இலக்கணம் ஆகும்.

    எடுத்துக்காட்டுகள்

    அணி (2), அறம் (3), அகலம் (4), இறும்பூது (5), குங்கிலியம் (6), உத்திரட்டாதி (7).

    என வருவனவற்றைப் பாருங்கள். இவற்றில் இரண்டு முதல் ஏழு எழுத்துகள் தொடர்ந்து வந்து சொல்லாகப் பொருள் தருகின்றன.

    4.6.2 பகுபதம்

    பகுபதம் என்னும் பிரிவிற்குள் வரும் சொற்கள் இரண்டு முதலாக ஒன்பது எழுத்துகளைக் கொண்டிருக்கும்.

    பகுபதத்திற்கு எடுத்துக்காட்டுகள் :

    கூனி (2), கூனன் (3), குழையன் (4), பொருப்பன் (5), அம்பலவன் (6), அரங்கத்தான் (7), உத்திராடத்தாள் (8), உத்திரட்டாதியான் (9).

    அடைப்புக்குள்ளே இருக்கும் எண்கள் அந்தச் சொற்களில் அடங்கியிருக்கும் எழுத்துகளின் எண்கள் ஆகும்.

    பகாப்பதம் பகுபதம் ஆகிய இரு பதங்களின் இலக்கணங்களை அடுத்த பாடத்தில் விரிவாகக் காண்போம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:27:00(இந்திய நேரம்)