தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குகைக் கல்வெட்டும் கோயில் கல்வெட்டும்

  • 1.4 குகைக் கல்வெட்டும் கோயில் கல்வெட்டும்

    கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சமண முனிவர் பலர், மகத நாட்டிலிருந்து பத்திரபாகு என்பார் தலைமையில் சந்திரகுப்த மௌரியனுடன் கருநாடக மாநிலம் வந்தனர். அங்கிருந்து விசாகாச்சாரியார் என்பவர் தலைமையில் சமண முனிவர்கள் பலர் தமிழகம் வந்தனர். கொடுமணல் அகழாய்வுப் பானை ஓட்டிலும், இலங்கைப் பிராமி கல்வெட்டிலும் ‘விசாகா’ என்ற சொல் காணப்படுகிறது.
     

    1.4.1 குகைக் கல்வெட்டு

    தமிழகத்திற்கு வந்த சமண முனிவர்கள் இயற்கையான தமிழக மலைக்குகைகளில் தங்கித் தம் சீடர்களுக்கும், மக்களுக்கும் அற உபதேசம் செய்தனர். அம்மலைகளில் அவர்களுக்குரிய கல் படுக்கைகளைத் தமிழக அரசர்களும், வணிகர்களும், பொதுமக்களும் அமைத்துத் தந்தனர். அவை பாழி, பள்ளி, அதிட்டானம், கல்கஞ்சனம், இருக்கை என்று கூறப்பட்டன.

    மேற்குறிப்பிட்ட செய்திகளை அக் கல்படுக்கைகளின் அருகே கல்வெட்டெழுத்துகளாகவும் பொறித்தனர். இந்த அமைப்புடைய குகைகள் மாங்குளம், அறச்சலூர், சித்தன்னவாசல், புகலூர், அரிட்டாபட்டி, அய்யர்மலை, அம்மன் கோயில்பட்டி, ஆனைமலை, ஜம்பை, கருங்காலக்குடி, கீழவளவு, கொங்கர் புளியங்குளம், குடுமியான்மலை, குன்னக்குடி, மாமண்டூர், மன்னார் கோயில், மறுகால்தலை, மேட்டுப்பட்டி, முதலைக்குளம், முத்துப்பட்டி, நெகனூர்ப்பட்டி, திருச்சி, திருப்பரங்குன்றம், திருவாதவூர், தொண்டூர், வரிச்சியூர், விக்கிரமங்கலம் போன்ற பல இடங்களில் உள்ளன. இங்கெல்லாம் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன.
     

    • பிராமி

    இந்தக் கல்வெட்டு எழுத்துகள் பிராமி என முன்பு அழைக்கப்பட்டன. வடநாட்டு பிராமியிலிருந்து இவற்றின் வரி வடிவத்தில் பல வேறுபாடுகள் காணப்படுவதால் இவை தென்பிராமி எனக் குறிக்கப்பட்டன.
     

    • பிராமியும் தமிழும்

    இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சமணர் நூலான பன்னவன சூத்திரம் என்னும் நூல் இந்திய எழுத்துகளில் பிராமியுடன் ‘தமிழ்’ என்ற எழுத்து வகையையும் ஒன்றாகக் கூறுகிறது. எனவே 1965இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் கல்வெட்டுக் கருத்தரங்கில் ‘தென்பிராமி’ என அழைக்கப்பட்ட எழுத்துகளைத் ‘தமிழ்’ என்றே அழைக்க வேண்டும் என்று அறிஞர் சா. கணேசன் கூறினார். பலரும் இன்று அவ்வாறே அழைக்கின்றர். தமிழுக்கு உரிய எழுத்து தமிழ் ஆயிற்று.

    தமிழ் பிராமி

    தமிழகக் குகை எழுத்துகள் என்னவென்றே புரியாமல் இருந்தபோது முதலில் 1924ஆம் ஆண்டு தமிழாகப் படித்தவர், கோவை கே.வி.சுப்பிரமணியம் அவர்கள். பெரும்பான்மையான தமிழ்க் கல்வெட்டுகளைப் பொருள் பொருத்தமுறப் படித்தவர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்.
     

    1.4.2 கோயில் கல்வெட்டு

    கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை கோயில்கள் மரம், செங்கல், சுண்ணாம்பு, காரை ஆகியவற்றால் மட்டும் கட்டப்பட்டன. இதனைச் ‘சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு’ எனச் சங்க இலக்கியமும் கூறும்.
     

    • மகேந்திரனும் கற்கோயிலும்

    பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் மேற்கண்ட பொருள்கள் இல்லாமல் கற்களால் கோயில் கட்டினான். அவனுக்குப் பின்னர் கற்கோயில்கள் பல தோன்றின. அவை கற்றளிகள் எனப்பட்டன. பல கோயில் கட்டிய ஒருவன் கற்றளிப்பிச்சன் எனப்பட்டான்.
     

    • தனிக்கற்கள்

    செங்கற் கோயில் சுவர்களில் தனிக்கற்களில் கல்வெட்டுகளைப் பொறித்துக் கோயில் சுவர்களில் பதித்திருந்தனர். கற்கோயில்களாக அவை மாற்றப்பட்டபோது தனிக்கல்லில் பொறிக்கப்பட்ட அக்கல்வெட்டுகள் கற்கோயில்களில் மீண்டும் பொறித்து வைக்கப்பட்டன. அக்கல்வெட்டுகளின் தொடக்கத்தில் ‘இதுவும் ஒரு பழங்கல்படி’ என்ற தொடர் வெட்டப்பட்டது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இக்கல் கிடைத்துள்ளது.
     

    • இடங்கள்

    கற்கோயில்களில் சுவர்களிலும், தூண்களிலும், வாயில் நிலைகளிலும், மேல் விதானங்களிலும், தனிக்குத்துக் கற்களிலும் கல்வெட்டுகளைப் பொறித்தனர். சில கோயில்களில், சுவாமி சிலைகளின் பீடங்களில்கூடக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
     

    • கோயில் கொடைகள்

    கோயில்களுக்கு நாள் வழிபாட்டுக்காகவும், சிறப்பு விழாக்களுக்காகவும், கோயில் பகுதிகளைப் புதிதாகக் கட்டும் திருப்பணிக்காகவும், பழுதுபார்க்கவும், சுவாமிகள் திருவீதிகளில் உலா வரவும், பாடல்களைப் பாடவும், ஆடல் நிகழ்ச்சிகளை நடத்தவும், விளக்குகள் எரிக்கவும், மலர்மாலைகள் அணிவிக்கவும், அடியார்கட்கு அன்னமிடவும், கோயில் பணியாளர்களை நியமிக்கவும், இசைக் கருவிகள் இசைக்கவும் பலர் கொடைகள் அளித்தனர். அவற்றைக் கல்வெட்டாக வெட்டினர். அளித்த கொடைகள் காசு, பொன், நெல், விளைநிலம் முதலிய பொருள்களாக இருந்தன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:09:09(இந்திய நேரம்)