தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பொது மொழியின் இயல்பும் தமிழின் வகையும்

  • 1.1 பொது மொழியின் இயல்பும் தமிழின் வகையும்

    மொழி தானும் வளர்ந்து தன்னை வளர்ப்பவனையும் வளர்க்கும் இயல்புடையது. மொழியை நம்முடைய முன்னோர்கள் அந்நாளில் வாய்க்கொரு தமிழ்; செவிக்கொரு தமிழ்; கண்ணுக்கு ஒரு தமிழ் என்ற வகையால் வளர்த்தனர். இதனால், நமது தாய்மொழி முத்தமிழ் எனப்பட்டது. முத்தமிழாவன இயல்தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ்களாம். இவற்றோடு இக்காலத்து அறிவியல் தமிழ் என்னும் ஒன்றும் இணைந்து கொண்டுள்ளது. இன்னும் சிலர் மெய்ஞ்ஞானத் தமிழ் என்ற ஒன்றினையும் கூட்டித் தமிழை ஐந்தாகவும் எண்ணுகின்றனர்.

    1.1.1 இயல் தமிழும், பாடுபொருளும்

    முத்தமிழில் ஒன்றான இயல் தமிழுள் இலக்கிய இலக்கணங்கள் அடங்கும். இங்கு இலக்கியம் என்பது வகைமைப்பட்ட இலக்கியங்கள் பலவற்றையும் குறிப்பிடும். இவ்வாறே இலக்கணம் என்பதும் வகைமைப்பட்டு விளங்கும் இலக்கணங்கள் அனைத்தையுமே குறிக்கும்.

    அந்நாளைய இலக்கியங்கள் பெரும்பான்மையும் வீட்டையும் நாட்டையும் அஃதாவது, காதலையும் வீரத்தையும் பற்றியனவாகவே தோன்றின. வீடு என்பது காதல் வாழ்வு; நாடு என்பது போர்க்கள வாழ்வு. வேறுவகையில் சொன்னால், காதலும் வீரமும் இலக்கியங்களின் பாடுபொருளாயின என்றுதான் குறிக்க வேண்டும். பாடுபொருள் என்பது காலத்திற்குக் காலம் விரிந்து கொண்டே போவது அல்லவா?

புதுப்பிக்கபட்ட நாள் : 06-11-2017 10:39:05(இந்திய நேரம்)