தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - D06142-தொகுப்புரை

    • 2.5 தொகுப்புரை     

          அண்மைக் காலத்திய ஒரு திறனாய்வு மற்றும் பண்பாட்டுச் சிந்தனை     முறை,     பின்னை     நவீனத்துவமாகும். இது, நவீனத்துவத்துக்குப் பிறகு வந்தது என்றாலும், நவீனத்துவத்தின் போதாமையில்     தோன்றியது     என்பது மட்டுமல்லாமல், நவீனத்துவத்திற்கு மறுப்பாக இது தோன்றியது என்பதாக, இதனுடைய கொள்கையைப் பற்றிப் பேசுகிற லியோதா, மோதிலார் முதலிய பலர் கூறுகின்றனர். நவீனத்துவம், புதுமை, புதிய கலை, புதிய வடிவம் என்று தன்னை முன்னிறுத்துகிறது. அதுபோல உயர்வு, தரம், தாராளத்துவம் என்பன பற்றிப் பேசுகிறது. தமிழில் நவீனத்துவத்தின் முக்கியமான     பிரதிநிதிகளில்     ஒருவராக மதிக்கப்படுகிறவர் புதுமைப்பித்தன் ஆவார். சிறுகதை உத்திகளில் பல சோதனைகள் செய்தவர் இவர். தமிழில் ஒருசார் நவீனத்துவ விமரிசகர்கள் தமிழ் மரபுகளையும் தொன்மை இலக்கியங்களின் பெரும் சாதனைகளையும் மறுப்பர். இருப்பினும், நவீனத்துவம் பல போக்குகள் கொண்டது. தற்காலத் தமிழ் உலகில் பல நல்ல இலக்கியங்களை அது உருவாக்கித் தந்துள்ளது. புதுக்கவிதை எனும் இலக்கிய வகை நவீனத்துவத்தின் குழந்தையாகக் கருதப்படுகிறது.

          பின்னை நவீனத்துவம் என்பது பண்பாட்டு முதலாளித்துவம், நுகர்வுக்     கலாச்சாரம் ஆகியவற்றின் ஒரு விளைவாகும். மொத்தப்படுத்துதல், முழுமை, மையம், புனிதம், தரம் முதலிய கருத்து நிலைகளை இது தீவிரமாக மறுக்கிறது. அவற்றிற்குப் பதிலாக, கூறுபடுத்துதல், கூறு அல்லது பகுதி, விளிம்பு, எதிலும் புனிதம், தரம் என்று பார்க்கக் கூடாது என்ற மனநிலை முதலியவற்றை முன்னிறுத்துகிறது.பெருநெறி மரபுகளை மறுத்து சிறு நெறிகளை, தொடர்பற்ற தன்மைகளை இது போற்றுகிறது.1990-களில் இது தமிழில் மிகப் பிரபலமாக - முக்கியமாக - இலக்கியச் சிற்றிதழ்களால் பேசப்பட்டது. இன்று, மீண்டும் திறனாய்வு புதிய தடங்களை நோக்கி நகரத் தயாராகவுள்ளது.

           தன் மதிப்பீடு : வினாக்கள் - II
      1.
      பின்னை நவீனத்துவத்தின் துவக்கக் கொள்கை நூலாகக் கருதப்படுவது எந்த நூல்? அதன் ஆசிரியர் யார்?
      2.
      முழுமை அல்லது மொத்தம் என்பதற்குப் பதிலாகப் பின்னை நவீனத்துவம் முன்வைப்பது எதனை?
      3.
      கதையாடல் (Narrative) என்பதற்குரிய விளக்கம் யாது?
      4.
      தொன்றுதொட்டு வரும் கற்பு எனும் கருத்துநிலை, தாய்மை, குடும்பம் என்பவை என்ன வகையான கதையாடலைச் சேர்ந்தவை? இவற்றைப் பின்னை நவீனத்துவம் ஏற்றுக்கொள்கிறதா?
      5.
      கலகங்கள், மோதல்கள் முதலியவற்றைப் பின்னை நவீனத்துவம் எவ்வாறு எடுத்துக் கொள்கிறது?
      6.
      விளிம்பு நிலையிலிருப்போராகக் கருதப்படுவோர் யாவர்?

புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2017 19:16:38(இந்திய நேரம்)