தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தற்கால உரைநடை-1.5 தற்கால உரைநடை

  • 1.5 தற்கால உரைநடை 

    (1)  மேலை நாட்டுக் கல்வியின் பயனாக, விஞ்ஞான, மெய்ஞ்ஞான உளவியல் கருத்துகளை வெளியிடும் வகையில் உரைநடை ஓங்கியது. 

    (2) கலைகளும், கருத்துகளும் அறிவாக்கமும் பெருகப் பெருக அவற்றிற்கு ஈடுகொடுக்கும் வகையில் உரைநடை விரிந்தது. 

    (3) உள்ள உணர்வுகளைப் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தும் ஆர்வம் கொண்டு உரைநடையினைப் பயன்படுத்தியதால் பல்வகை நடைகள் பிறந்தன. 

    (4) தத்தம் புலமையைக் காட்டித் தனித்துவம் காட்ட முனைந்தமையாலும் நடையில் மாறுபாடுகள் மலர்ந்தன. 

    சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை போன்ற புதிய இலக்கிய வடிவத்தால் தமிழன்னையைப் பலர் அழகுபடுத்தினர். எண்ணற்ற ஆசிரியர்கள் உரைநடை வாயிலாகப் பல நூல்களை எழுதி இலக்கியப்புகழ் பெற்றனர். 

    வீராசாமி செட்டியாரும், பி.ஆர்.இராஜமையரும் தமிழில் கட்டுரை இலக்கியத்தைத் தொடங்கி வைத்தவர்களாகவும், கதை இலக்கியத்திற்கு வித்தூன்றியவர்களாகவும் விளங்குகின்றனர். இவர்களேயன்றி, தாமோதரம் பிள்ளை, சுந்தரம் பிள்ளை போன்றோரும் உரைநடை உயர்வுக்கு உறுதுணை புரிந்தனர். இந்த இருபதாம் நூற்றாண்டு உரைநடையில் ஆங்கிலச் சாயல் படிந்துள்ளமை அறியத்தக்கது. இந்த நூற்றாண்டு உரைநடை இலக்கிய உச்சகாலமாகவும், நற்றமிழ் உரைநடையின் பொற்காலமாகவும் பொலிகிறது.

    1.5.1 கட்டுரை நடை 

    இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார் தமிழ்க்கவிதைக்கு உயிர்ப்பூட்டியது போன்றே உரைநடையையும் சொல் புதியதாக, பொருள் புதியதாகப் படைத்தார். இக்காலத்துக்கேற்ற உரைநடைக் கூறுகள் அவர் நடையில் ஒளிரவே செய்கின்றன. வ.ரா.வின் உரைநடை எளிமையானது. 

    ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதையர் பொதுமக்கட்குப் புரியும் வகையில் எளிய நடையில் பழகு தமிழ்ச் சொற்களைப் பெய்து மரபுகெடாது எழுதினார். தொடக்கத்தில் பண்டிதர் நடையில் எழுதிய இவர்காலப் போக்குணர்ந்து எளிய நடையில் எழுதினார். கி.வா.ஜ.வும் அவரைப் போன்றோரும் இந்நெறியில் எழுதியவர்கள் ஆவர். 

    பண்டிதர் தமிழில் எழுதியவர் பரிதிமாற்கலைஞர். இவரும் பின்னர் நடையின் கடுமை குறைத்து எழுதினார். இதற்கு இவரது தமிழ் வரலாறு சான்றாகும். தற்காலத் தமிழ் உரைநடையின் ஞாயிறும், திங்களுமாகத் திகழ்பவர்கள் மறைமலையடிகளாரும் திரு.வி.க.வும் ஆவர். இவ்விருவரும் பேச்சாலும், எழுத்தாலும் பைந்தமிழுக்கு ஊட்டமளித்தவர்கள். மறைமலையடிகள் 'தனித்தமிழ் நடையின் தந்தை’  தனித்தமிழ் இயக்கங் கண்டவர். வடமொழி கலவாது தமிழில் பேசவும், எழுதவும் முடியும் என்பதை உறுதி செய்து தாமே 1916-இல் தனித்தமிழில் எழுதும் முறையைத் தொடங்கி வைத்தார். இந்நெறியை இளவழகனார், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், வ.சுப.மாணிக்கம் போன்றோர் பின்பற்றினர். 

    திரு.வி.க., மென்தமிழ் உரைநடையின் முதல்வராய்த் திகழ்ந்தார். ஒருமுறை இவரது பேச்சைக் கேட்ட பாரதி ‘இதுவையா பேச்சு’ எனத்துள்ளி எழுந்தாராம். அத்துணை உணர்வூட்டும் அரிய இயல்பும் எழில் நடையும் கொண்டது, அவரது நடை. திருத்தமான தமிழுக்குப் பொருத்தமான வடிவம் தந்து நல்ல தமிழ் நடையினை நிலைக்கச் செய்தவர். 

    இதே சமயம் பண்டைப் புலவர் நடையினைப் பின்பற்றிச் செந்தமிழ் நடையில் எழுதிச் சென்றவர்கள் பண்டிதமணி மு.கதிரேசர், செல்வகேசவராயர், விபுலானந்தர் போன்றவர்கள். பண்டைய இலக்கணம் பிறழாத அதே சமயம் காலத்தோடு பொருந்தும் உயரிய தெள்ளிய செழுந்தமிழ் நடையின் சீர்மையுணர்த்தும் சோமசுந்தர பாரதியாரின் வீரமும் செறிவும் வலிமையும் வாய்மையும் வாய்ந்த வீறுநடை, கம்பீரமானது; சிறிது கடினமானது. விபுலானந்தரின் வளநடையோ செறிவும், ஓசைச் சிறப்பும் சொல்வளமும் சான்றது. 

    கா.சு.பிள்ளையின் நடை, வெள்ளோட்டமான தெள்ளிய சாதாரணநடை. வையாபுரிப்பிள்ளையின் நடை வடசொற்கலந்த அறிவு நிரம்பிய எளிய நடை. சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை தமக்கெனத்தனிநடை வகுத்துக் கொண்டவர். ஒளவை. துரைசாமியாரின் அள்ளுநடை உரையாசிரியர்களின் ஊற்று நடை. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார், பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ இருவர் நடையும் பழுத்துப் பண்பட்டு இறுகிய சிந்தனை மிகு செறிவு நடை; அழகும், குழைவும் கெழுமிய செழுமை நடை; மு.வ. நடையில் கனிவு, தெளிவு, எளிமை, இனிமை தவழும். 

    உரைநடைக்கு மெருகூட்டி மேன்மை அளித்தவர்கள் அறிஞர் அண்ணாதுரையும், கலைஞர் கருணாநிதியும் ஆவர். அடுக்குச் சொல், மிடுக்கு நடை, முன்னவர் நடை. அலங்கார அழகு நடை, பின்னவர் நடை. இருவரும் ஒரு பெரும் அலையை எழுப்பி விட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் பலாப்பழ ஈக்கள் போல் ஆயினர். 

    பத்திரிகைகள், மறுமலர்ச்சி நடையை உருவாக்கின. வ.வே.சு. ஐயர், பாரதியார், வ.ரா, கல்கி, புதுமைப்பித்தன், டி.கே.சி., சீனிவாச ராகவன் போன்றோர் படைப்புகள் இதற்குச் சான்றாகும். இதுவே இக்காலப் புத்திலக்கியத்திற்கு ஏற்ற சிறப்பான நடையாகும்.

    1.5.2 படைப்பிலக்கிய நடை

    எம்மொழியிலும் நாவல் முன்னே எழுந்து சிறுகதை பின்னே எழுந்துள்ளது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழ் நாவலுக்கு மட்டும் முன்னோடி இல்லை. உரைநடைக்கும் முன்முயற்சியாளர் எனலாம். இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879) தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் என்ற பெருமைக்குரியது. இவரைத் தொடர்ந்து பண்டித நடேச சாஸ்திரி, பி.ஆர்.இராஜம் ஐயர், அ.மாதவையா, ஆரணி குப்புசாமி, வடுவூர் துரைசாமி, கே.எஸ்.வேங்கடரமணி, தேவன், த.நா.குமாரசாமி, அறிஞர் அண்ணா, மு.வரதராசனார், ந.சிதம்பரசுப்பிரமணியன், பி.எம்.கண்ணன், சாண்டில்யன், க.நா.சுப்பிரமணியம், லா.ச.ராமாமிர்தம், எம்.வி.வெங்கட்ராம், கோவி.மணிசேகரன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், சுஜாதா, இராஜம் கிருஷ்ணன், சூடாமணி போன்றவர்கள் நாவல்களைப் படைத்துள்ளனர். 

    முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தில் வரும் ஞானாம்பாள் பாத்திரத்தின் மூலம் பல அரிய கருத்துகளைக் குறிப்பிடுகின்றார். 

    நம்மைப் பெற்றது தமிழ் நம்மை வளர்த்தது தமிழ்

    நம்மைத் தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ்.

    என்று தமிழ்மொழியைப் போற்றுகின்றார். 

    வரகனேரி வேங்கட சுப்ரமணிய ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் தமிழில் தோன்றிய முதல் சிறுகதை. ஆற்றலும், அழகும் பொருந்திய வசனங்களை அமைப்பதில் இவர் வல்லவர். இவரது நடை உயிர்த்துடிப்புள்ளதாக விளங்குகிறது. இவரை வ.வே.சு.ஐயர் என்பர். 

    பார்க்கப் போனால் நான் மரம் தான்... ஆனால் என் மனதில் உள்ளதை சொல்கிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயிசுக்குள் கண்ணாலே எத்தனை பார்த்திருக்கிறேன். காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். 

    என்று குளத்தங்கரையிலுள்ள அரசமரம் பேசுவதாகப் படைத்துள்ளார். இவரைத் தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் பாராட்டுவர். இவரைத் தொடர்ந்து பாரதியார், கு.ப.ராசகோபாலன், ந.பிச்சமூர்த்தி, கல்கி (ரா.கிருஷ்ணமூர்த்தி), புதுமைப்பித்தன், மௌனி,பி.எஸ்.இராமையா, ராஜாஜி, கு.அழகிரிசாமி, சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன், சிதம்பர ரகுநாதன், கி.இராஜநாராயணன், மு.வ.,கி.வா.ஜகந்நாதன், அகிலன், ஜெயகாந்தன், கோவி.மணிசேகரன், சு.சமுத்திரம், வண்ணநிலவன், சுப்ரபாரதிமணியன், பிரபஞ்சன், பொன்னீலன் போன்றவர்கள் சிறுகதை படைத்தனர்; படைத்து வருகின்றனர்.

    1.5.3 இதழியல் உரைநடை 

    மக்களது வாழ்வியலுக்கு வளம் சேர்க்கும் துறைகளுள் இதழியல் ஒன்று. இந்த இதழியல் துறையுடன் மற்ற எல்லாத் துறைகளும் பின்னிப் பிணைந்துள்ளன. பத்திரிகைத் துறை பொது அறிவுக்களஞ்சியமாக விளங்குகின்றது. இந்திய இதழியல் வரலாறு ஏறத்தாழ இரு நூற்றாண்டுகளைக் கொண்டதாகும். சுதேசமித்திரன் என்ற பத்திரிகையின் தோற்றமே தமிழ் இதழியலின் தோற்றமாகும். பாரதியாரின் இந்தியா, திரு.வி.க.வின் தேசபக்தன், நவசக்தி போன்ற இதழ்கள் சுதந்திர உணர்வின் அடிப்படையில் செயலாற்றின. சுதேசமித்திரன் தமிழ் நாளிதழ்களின் முன்னோடி ஆகும். இந்த இதழில் மிக நீண்ட வாக்கியங்களைக் கொண்ட செய்திகளைக் காணலாம். இதில் ஆங்கிலச் சொற்களும், வடசொற்களும் பயன்படுத்தப்பட்டன. கமலாம்பாள் சரித்திரம் என்னும் நாவல் விவேக சிந்தாமணி என்னும் இதழில் தொடர்கதையாக (1893-95-இல்) வெளிவந்தது. 

    தமிழ் இதழ் வரலாற்றில் மணிக்கொடி வெளிவந்த காலம் குறிப்பிடத் தக்கது. இந்த இதழ் உரைநடையில் எளிமைத்தன்மையைக் கொண்டு வந்தது. 

    பாரதி பாடியது மணிக்கொடி

    காந்தி ஏந்தியது மணிக்கொடி

    காங்கிரஸ் உயர்த்தியது மணிக்கொடி

    சுதந்திரப் போராட்ட வீரர்களை

    உற்சாகமூட்டியது இம்மணிக்கொடி

    இவ்வாறு மணிக்கொடி முதல் இதழில் தலையங்கம் வெளிவந்தது. 

    முரசொலி இதழின் நடையில் எதுகை மோனையைக் காணலாம். 

    தமிழே ! தேனே ! தீங்கனியே !

    அமிழ்தே ! அன்பே ! அழகுக்கலையே !

    எழிலே ! அறிவே ! எண்ணச் சுடரே !

    என, கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணாவைப் பாராட்டியுள்ளார். 

    இவ்வாறு  சிறுகதை, புதுக்கவிதை ஆகியவற்றின் வளர்ச்சிக்கேயன்றிப் புதின வளர்ச்சிக்கும் இதழ்கள் பேருதவி புரிகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:33:12(இந்திய நேரம்)