தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிற திராவிட மொழிகளில் நாடகத் தோற்றம்

  • 1.3 பிற திராவிட மொழிகளில் நாடகத் தோற்றம்

    தென் திராவிட மொழிகளில் தலைமையானது தமிழ்மொழி. இலக்கிய இலக்கணங்களில் தமிழ்மொழிக்கு அடுத்த நிலையில் வளமுடையவை தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள். இந்த மூன்று மொழிகளிலும் நாடகங்களின் நிலைகளைப் பற்றி அறியலாம்.
    1.3.1 தெலுங்கு நாடகம்

    ஆந்திரத்தில் இசைப்பாட்டு நாடகமாகிய வீதி நாடகம் இன்றும் சிறப்புற நடைபெற்று வருகிறது. அவ்வீதி நாடகமே தெலுங்கு மொழியின் முதல் நாடக வடிவமாகவும் விளங்குகிறது.

    புதுவகை நாடகம் என்னும் அமைப்பில் சேக்ஸ்பியர் எழுதிய ஜூலியஸ்சீசர் நாடகத்தின் மொழிபெயர்ப்பு 1876 ஆம் ஆண்டு வெளிவந்தது. மொழி பெயர்ப்பாளர் வாவிலாலா வாசுதேவ சாஸ்திரி என்பவர். இந்த நாடகத்துக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்புக்குப் பின் பல நாடகங்கள் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டன.

    விஜயநகர மன்னரான ஆனந்த கஜபதியின் ஆதரவில் பல மொழிபெயர்ப்பு நாடகங்கள் அரங்கேறின. வாசுதேவ சாஸ்திரியைத் தொடர்ந்து கொரடி இராமச் சந்திரகவி, கே.வீரேசலிங்கம், பலிஜபள்ளி லட்சுமி காந்தன் ஆகியோர் தொடக்கக்காலத் தெலுங்கு நாடகங்களை வளர்த்தனர்.

    ஆந்திர நாடகப் பிதாமகன் எனப் போற்றப் படுபவர் தர்மாவரம் கிருஷ்ணமாச்சாரியா ஆவார். தெலுங்கின் நவீன நாடகத் தொடக்கம் இவரிடமிருந்தே தொடங்குகிறது.

    விசார சாரங்கதாரா என்னும் நாடகத்தை இவர் 1891 ஆம் ஆண்டு எழுதினார். தெலுங்கின் முதல் துன்பியல் நாடகம் இதுவேயாகும். இந்த நாடகம் மேடைகளில் வெற்றிகரமாக நடிக்கப்பட்டது. கிருஷ்ணமாச்சாரியாவைத் தொடர்ந்து இதே கால கட்டத்தில் சீனிவாசராவ் என்பவர் நாடகம் எழுதினார். இவர் விஜயநகர சாம்ராஜ்ய பதனம் என்னும் வரலாற்று நாடகத்தை எழுதினார். இவர்களுக்குப் பின் தெலுங்கு நாடக உலகம் இன்றுவரை நன்கு செழித்து வளர்ந்து கொண்டு வருகிறது.

    1.3.2 கன்னட நாடகம்

    கன்னட மொழியின் தொடக்க நாடகமாக யட்சகானம் என்னும் இசைப்பாட்டு நாடகம் விளங்குகிறது. புதுவகை நாடகங்கள் 1920ஆம் ஆண்டுக்குப் பின்னரே அம்மொழியில் உருவாயின.

    கன்னடத்தில் வடமொழி நாடகங்களும் ஆங்கில நாடகங்களும் முதலில் மொழி பெயர்க்கப்பட்டன. பின்னர் நேரடியான கன்னட மொழி நாடகங்கள் எழுதி நடிக்கப்பட்டன.

    கேரூர் என்பவர் வஷிகர்ணா, சுரதநகரஸ் ரேஸ்டி, நளதமயந்தி ஆகிய நாடகங்களை எழுதினார். நாராயண அய்யர் ஸ்திரி தர்ம ரகசியம் என்னும் நாடகத்தை எழுதினார். மகாபாரதக் கதைகளைத் தழுவிய நாடகங்களை ஸ்ரீ என்பவர் எழுதினார். கதாயுத்த நாடகம், அசுவத்தாமா என்பன இவர் எழுதிய நாடகங்களில் குறிப்பிடத்தக்கன. ஸ்ரீயைத் தொடர்ந்து டி.வி.ஜி., மாஸ்தி, டி.பி. கைலாசம், ஸ்ரீரங்கா எனப் பலர் கன்னட நாடக உலகில் புகழ்பெற்று விளங்குகின்றனர்.

    1.3.3 மலையாள நாடகம்

    மலையாள மொழியின் நாடகத் தொடக்கமும் இசைப்பாட்டு நாடகத்திலிருந்தே தொடங்குகிறது. கதகளி, கூடியாட்டம், ஓட்டந்துள்ளல் ஆகிய நாடக வடிவங்களில் புராணக் கதைகள் இசைப்பாட்டுகளாகப் பாடி நடிக்கப்பட்டன.

    கேரளத்தில் தோன்றிய முதல் மொழிபெயர்ப்பு நாடகம் அபிஞ்ஞான சாகுந்தலம் என்பதாகும். இந்த வடமொழி நாடகம் 1882ஆம் ஆண்டு மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மேடையேற்றப் பட்டது.

    போர்ச்சுக்கீசியர் வருகைக்குப் பின்னர், மலையாள நாடகத்தில் புதிய போக்கு ஏற்பட்டது. இது, பிற தென்னிந்திய மொழி நாடகங்களில் காணப் பெறாத புதிய போக்காகும். போர்ச்சுக்கீசியர் நடித்த நாடக வகைகளில் ஒன்று சவுட்டு நாடகம் ஆகும். இந்த நாடக வகையின் தாக்கம், மலையாள மொழி நாடகங்களில் காணப்பட்டது.

    கன்னடம், ஆந்திர மொழிகளின் நாடகத் தொடக்கம் போல் கேரளத்திலும் வடமொழி மொழிபெயர்ப்பு நாடகங்கள்தான் முதலில் அரங்கேறின. ஜானகி பரிணயம், மாளவிகாக்னி மித்ரம், உத்தரராம சரிதம், சூடாமணி ஆகியன வடமொழியிலிருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டன. ஆங்கில நாடகங்களும் சில மொழி பெயர்க்கப்பட்டன.

    கேரள நாடக உலகைச் சரியான முறையில் புதுமைப்படுத்தியவர் சி.வி. இராமன் பிள்ளை என்பவராவார். தொடக்கத்தில் இவர் ஒரு புதின ஆசிரியராக இருந்தார். இவர் எழுதிய மார்த்தாண்ட வர்மா, தர்மராஜா, ராஜராஜ பகதூர் ஆகிய புதினங்கள் மேடை நாடகமாக மாறிய போது மலையாள நாடகம் சிறந்த தரத்தைப் பெற்றது. இவருக்குப் பின்னர் பலர், பல வடிவங்களில் நாடகங்களை எழுதி அரங்கேற்றினர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-07-2018 18:13:47(இந்திய நேரம்)