Primary tabs
-
1.3 தமிழ் ஆட்சி மொழி
தமிழகத்தில் ஆட்சி மொழியாகத் தமிழ் வழங்கவேண்டும் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது. இக்குழு ஆட்சி மொழியாக உள்ள ஆங்கிலத்தை அகற்றி, அவ்விடத்தில் தமிழை நிலைநிறுத்துவதற்கான அடிப்படைப் பணிகளில் கவனம் செலுத்தியது.
ஆட்சி மொழிக் குழுவின் முதன்மைச் செயற்பாடுகள் பின்வருமாறு:
-
தமிழகம் முழுவதிலுமுள்ள பல்வேறு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, தமிழில் அலுவல்களை நடத்திட அறிவுரைகள் வழங்குதல்.
-
தமிழை ஆட்சி மொழியாக்குவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் களைய ஆலோசனைகள் அளித்தல்.
-
ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்திற்கு அடிப்படையான ஆட்சிச்சொல் அகராதிகள் தயாரிப்புப் பணிகளை வளப்படுத்துதல்.
ஆட்சித் தமிழை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு 1971-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சி இயக்ககம் எனும் தனித்துறையை ஏற்படுத்தியது. ஆட்சித் தமிழ் தொடர்பான அனைத்துச் செயற்பாடுகளையும் அந்த இயக்கம் மேற்கொண்டு வருகிறது.
ஆட்சி மொழித் திட்டத்தினை நிறைவேற்றிட ஆங்கிலத்தில் உள்ள நிருவாகம் தொடர்பான விதிகள், விதித்தொகுப்புகள், நடைமுறை நூல்கள், பதிவேடுகள், படிவங்கள் போன்றவற்றைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டியது அடிப்படையானது ஆகும்.எனவே மொழிபெயர்ப்பு வல்லுநர்கள், கூர்ந்தாய்வுக் கண்காணிப்பாளர்கள் (Scrutiny officers) மட்டுமன்றிப் பல்வேறு துறைகளில் பணியாற்றி மொழிபெயர்ப்பு அனுபவம் பெற்ற அலுவலர்களும் ஆட்சித் தமிழ் மொழிபெயர்ப்புகளில் முனைந்து செயற்படுகின்றனர். இதனால் அரசின் பல்வேறு துறைகளிலும் தமிழ் இடம் பெறத் தொடங்கியுள்ளது.
தமிழ் ஆட்சி மொழித்திட்டத்திற்குப் பயன்படும் வகையில் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையாகத் தமிழ்ச் சொற்களைக் கொண்ட அகராதி தயாரிப்பது என்று அரசு கருதியது. இந்நிலையில் சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் ஆட்சிச் சொல் அகராதி தயாரித்து அரசிடம் வழங்கியது. அது 1957-ஆம் ஆண்டில் செப்பம் செய்யப்பட்டது. இவ்வகராதியில் பல்வேறு துறைகளில் வழக்கிலுள்ள பொதுவான ஆங்கிலச் சொற்கள், அவற்றுக்குரிய தமிழாக்கங்களுடன் இடம் பெற்றுள்ளன.
ஆட்சிச் சொல் அகராதி, காலத்தின் தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டு, இதுவரை நான்கு பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் கையடக்கப் பதிப்பு 1953-ஆம் ஆண்டிலும், இணைப்பகராதி 1997-ஆம் ஆண்டிலும் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசின் துறைகள்தோறும் வழக்கிலுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தொகுத்துச் சிறப்புச் சொல் துணையகராதிகள் தயாரிக்கப்படுகின்றன. அவை துறைதோறும் வழங்கப்படுகின்றன. இத்தகைய அகராதிகளில் இடம் பெறும் ஆங்கிலச் சொற்களின் தமிழாக்கங்கள், அவ்வத்துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்து ஆய்வு செய்து, முடிவெடுத்து, அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. எழுபத்தெட்டுத் துறைகளின் சிறப்புச் சொல் துணையகராதிகள், ஆட்சித் தமிழை நடைமுறைப்படுத்துவதற்காக, இதுவரை தமிழ் வளர்ச்சித் துறையினால் வெளியிடப்பட்டுள்ளன.
-