Primary tabs
-
இலக்கியங்கள் தாம் தோன்றிய காலத்தைக் கண்ணாடி போல் எடுத்துக் காட்டுகின்றன. அக்காலத்து மக்களின் வாழ்க்கை, கலைகள், நம்பிக்கைகள் முதலிய பல செய்திகளை இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவானது சமயம். ஆகவே பல்வேறு சமயங்களைப் பற்றிய குறிப்புகளையும் பழந்தமிழ் நூல்களில் காண்கிறோம்.
தமிழர்கள் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்துக் கண்டார்கள். ஒவ்வொரு பிரிவுக்கும் (திணைக்கும்) தனித்தனியே முதல், கரு, உரிப்பொருள்களை வகுத்தார்கள். (முதல், கரு, உரி பற்றி அகப்பொருள் இலக்கணத்தில் படித்திருப்பீர்கள்). கருப்பொருள் என்பது அந்த நிலப்பகுதிக்கே உரிய உணவுப் பொருள்கள், மரம், செடி, கொடிகள், விலங்குகள், இசை, தெய்வம் முதலிய பல பொருள்களைக் கொண்டது. திணைக்குரிய தெய்வமாகத் திருமால், முருகன் முதலிய தெய்வங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்கள் தம் இயல்பும் இயற்கையும் இணைந்து செல்லும் வகையில் வழிபாடு மேற்கொண்டனர். மிகச்சிறிய எளிய முறையில் தொடங்கிய இந்த வழிபாடு பிற்காலத்தில் பெரும் சமயமாக வளர்ந்தது. வளர்ந்த நிலையில் உள்ள சமயங்களைப்பற்றி இலக்கியங்களில் காண்கிறோம். இந்தப் பாடத்தில் சைவசமயம் பற்றிய குறிப்புகளை அறியவுள்ளோம்.