தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.2 பள்ளு இலக்கியப் பொது அமைப்பு

3.2 பள்ளு இலக்கியப் பொது அமைப்பு

பள்ளு இலக்கியங்களில் நூல் படைக்கும் மரபு
போற்றப்பட்டுள்ளது. காப்பு, கடவுள் வணக்கம், பாயிரம்
ஆகியன     முறையாகப் படைக்கப்பட்டுள்ளன. நூலின்
தொடக்கமாகப் பள்ளன் தோன்றித் தலைவனின் உயர்வை
விளக்குவான். பின்பு பள்ளன் பள்ளியர் தம் குடிப்
பெருமைகளைக் கூறுவர். இவற்றைத் தொடர்ந்து நாட்டு வளம்,
நகர்வளம் கூறப்பெறும். மழையின் வரவு பற்றிக் குறி அறிந்து
மழை வேண்டிப் பாடப்படும். பின்பு மழை பொழியும்.
ஆற்றில் வெள்ளம் பெருகி ஐந்து வகை நிலங்களும் நீர்
பெறும். உழவு தொடங்குவதற்கான பக்குவமான சூழ்நிலை
உருவாகும்.

  • பள்ளனும் பள்ளியரும்



  • பண்ணைக்காரன் வரும்போது, பள்ளியர் அவனிடம்
    பள்ளனைப் பற்றி முறையிடுகின்றனர். இளைய பள்ளியின்
    அழகில் மயங்கிக் கடமையை மறந்த பள்ளனைப்
    பண்ணைக்காரன் கடிந்து உரைக்கிறான். பள்ளன் தன்
    தவறுகளை மறைக்கப் பண்ணைக்காரனிடம் வித்துவகை,
    மாட்டு வகை, ஏர் வகை முதலியவற்றைக் கூறுகின்றான்.

  • மூத்தபள்ளி முறையீடு



  • மூத்த பள்ளி பண்ணைக்காரன் முன்பு தோன்றுகிறாள்.
    தன்னை ஒதுக்கி வாழும் பள்ளனைப் பற்றிக் கூறி முறை
    இடுகிறாள். அதனைக் கேட்ட பண்ணைக்காரன் சினந்து
    பள்ளனைக் குட்டையில் (மரத்தால் பிணிக்கும் கருவி) மாட்டி
    விடுகிறான். பின்பு மூத்த பள்ளி மூலம் விடுவிக்கப்படுகிறான்.
  • பயிரிடும் பள்ளியர்



  • பண்ணையில் பயிர் இடும் வேலை தொடங்குகிறது.
    நிலத்தை உழுது விதைக்கிறார்கள். பயிர் முளையிட்டு
    வளர்கிறது. நாற்று நடுகிறார்கள். களை அகற்றி நீர்
    பாய்ச்சுகின்றனர். பயிர் விளைகிறது. முற்றிய கதிரை அறுத்து
    நெல்லடித்துக் குவிக்கிறார்கள். உழவு வேலையில் பள்ளியர்
    பங்குபெறும் நிகழ்ச்சிகள் பாடல்கள் மூலம் காட்சிப்படுத்தப்
    படுகின்றன.

  • பள்ளியர் மோதல்



  • பள்ளன் நெற்கணக்குக் கூறுகின்றான். பள்ளியர் இருவரும்
    கலகம் இட்டு ஒருவரை ஒருவர் ஏசிப் பேசுகின்றனர்.
    இறுதியில் இருவரும் மனம் பொருந்தி வாழ இசைகின்றனர்.
    நல்ல விளைவையும் நல்ல வாழ்வையும் அருளிய இறைவனை
    வேண்டிப் பணிவதோடு பள்ளு முடிவடைகிறது. இதுவே
    பள்ளு இலக்கிய நோக்கமாகவும் அமைகிறது.

    மேலே கூறிய செய்திகளே பள்ளு இலக்கிய அமைப்பாக
    விளங்குகின்றன. பெரும்பான்மைப் பள்ளு இலக்கியங்கள் இந்த
    அமைப்பு முறையிலேதான் அமைந்துள்ளன.

    1.
    பள்ளு இலக்கியங்கள் மிகச் சிறப்புடன் உருவான
    காலம் எது?
    2.
    பள்ளு என்ற சொல்லின் அடிச்சொல் எது? விகுதி
    எது?
    3.
    பள்ளு இலக்கியத் தோற்றத்திற்கு உறுதுணையாக
    விளங்கிய இலக்கிய இலக்கணக் கூறுகளைப் பட்டியல்
    இடுக.
    4.
    பழைய பள்ளு இலக்கியங்களில் ஐந்தின் பெயரைச்
    சுட்டுக.
    5.
    பள்ளு இலக்கியங்களில் முதன்மைப்படுத்தப்படும்
    தொழில் எது?

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:06:41(இந்திய நேரம்)