Primary tabs
புலவர்
முக்கூடல் நகரின் சிறப்பினைக் கற்பனை நயம்பட
விவரித்துள்ளார். முக்கூடலில் அழகர் கோயில்
கொண்டிருக்கும் கோயிலின் கோபுரம் மிக உயரமானது.
மேகத்திரள் அந்தக் கோபுரத்தைச் சூழ்ந்து நிற்கும்;
வானத்திலிருந்து மழைத்துளிகள் படியும். கொடி மரத்துக்
கொடிகள் வானத்தையே மூடி மறைத்துக் கொண்டு இருக்கும்.
பேரண்டப் பறவைகள் கோயிலின் உச்சியை நோக்கிப்
பறந்து
கொண்டிருக்கும். பொற்கோயிலின் முற்றத்தில் உள்ள
மழைநீரில் அன்னங்கள் விளையாடிக் கொண்டிருக்கும்.
சூரியன், கோயிலின் மதிற்சுவர்களில் தான் புகுந்து
செல்வதற்குரிய வழியைத் தேடிக் கொண்டிருப்பான்.
இவ்வாறாக முக்கூடல் நகரைப் புலவர்
வருணித்துள்ளார்.
இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.
(கொண்டல் = மேகம், அண்டையில் =
அருகில், படிதர =
பரவ, பேரண்டம் = பறவை, கனகம் = பொன், முன்றில் =
முற்றம், அனம் = அன்னம், விண்ட =
விழுந்த, வெய்யோன்
= ஞாயிறு, அண்டர்
= தேவர், செண்டு = கைத்தடி)
முக்கூடல் அழகர் கோயிலைப் பாடிய புலவர் அடுத்து நகர
அழகைப் பாடுகின்றார்.
வீதியும் சோலையும்
ஒளி வீசும் சிறந்த மணிவகைகள் பதித்த மாளிகைகளை
உடையன வீதிகள். வீதிகளின்
நெருக்கம் அதிகமாக இருக்கும்.
மலர்ச் சோலைகளில் திரியும் வண்டு இனங்கள் தம்
ரீங்காரப்
பண்ணினைப் பாடும். அப்பாடல் இரும்பு உள்ளங்களையும்
உருகச் செய்துவிடும். நால்வகை வருணத்து மக்களும் தம்
வேற்றுமையை மறந்து ஒன்றுபட்டு நீதியைப் பெருக்குவர். நீர்
நிலைகளில் உள்ள வாளை மீன்கள் நீர் முகப்பார் குடங்களில்
புகும். புகுந்து குடத்தை
நெருக்கும். இளம் எருமை மாடானது
கழனிகளிலே உள்ள நீர்ப்பூக்களை மேயும்; அதில் உள்ள
மதுவை உட்கொண்டு செருக்கித் திரியும். மேட்டு நிலங்களில்
எல்லாம் குளிர்ந்த மலர்கள் இதழ் விரித்து மலர்ந்திருக்கும்.
இவ்வாறாக முக்கூடல் நகரின் இயற்கை வளத்தையும்
செயற்கை வளத்தையும் புலவர் பாடியுள்ள திறத்தை அறிந்து
மகிழலாம். இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.
(சோதி = ஒளி, சுரும்பு = வண்டு, தடம்
= நீர்நிலை/குளம்,
வாளை = மீன், போது
= பூ, மேதி = எருமை,
விண்டிருக்கும் =
விரிந்திருக்கும்)
முக்கூடல் நகரே அன்றி வடகரை நாடு, தென்கரை நாடு,
மருதூர் ஆகியவற்றின் வளங்களையும் சுவையாக இப்பள்ளு
விவரிக்கிறது.
3.4.1 குடிச்சிறப்பு
மூத்த பள்ளி, இளைய பள்ளி, பள்ளன்
ஆகியோரின்
அறிமுகமும், அவர்களின் குடிச்சிறப்பும் நூலின்
தொடக்கத்தில் சிறப்புடன் எடுத்துக்
கூறப்பட்டுள்ளன.
மூத்த பள்ளியின் தொல்குலம்
சித்திரா நதியானது முக்கூடலுக்கு வடப் பக்கமாக ஓடுவது.
அதற்குத் தென்பக்கமாக ஓடுவது பொருநை ஆறு ஆகும்.
இவ்விரு நதிகளும் தோன்றி ஓடிவந்து முக்கூடலில் ஒன்று
கலந்த காலம் மிகத் தொன்மையான காலம் ஆகும். உலகம்
தோன்றிய தொடக்கக் காலத்திலேயே அவை ஒன்று கலந்தன.
அப்படி அவை ஒன்று கலந்த காலம் தொட்டு வழி வழியாகத்
தோன்றி வரும் மிகப் பழமையான குடும்பத்தில் பிறந்தவள்
மூத்தபள்ளி ஆவாள். (முக்.பள். 13)
இளைய பள்ளியின் பெருமை
செஞ்சி நாட்டிலும, கூடலாகிய மதுரை நாட்டிலும் தஞ்சை
நாட்டிலும், தம் ஆணையைச் செல்வாக்குடன் செலுத்தும்
ஆட்சியாளன் வட மலையப்பப் பிள்ளையன் ஆவான். அவர்
ஊரும் இளையபள்ளி ஊரும் ஒன்றே ஆகும். வடமலையப்பப்
பிள்ளையன் உலக நன்மைக்காக ஐந்து குளங்களை வெட்ட
நினைத்தான். குளம் வெட்ட, சக்கரக்கால் நிலை இட்ட போது
(குளம் வெட்டுவதற்குரிய எல்லைகளை அளந்து எல்லைக்
கற்கள் பதிப்பித்த போது) அந்த நாளிலேயே இளைய பள்ளி
பண்ணையில் வந்து சேர்ந்தாள் என்று இளைய பள்ளியின்
பெருமை பேசப்பட்டுள்ளது. (முக்.பள். 15).
பள்ளன்
பள்ளனின் பெருமை சமய உணர்வு அடிப்படையில்
கூறப்பட்டுள்ளது. முக்கூடல் அழகர் திருவடிகளைக் கருதாத
மனத்தை உடையோரும் உள்ளனர். அவர்களின் மனத்தைத்
தரிசு நிலம் என்று எண்ணி, கொழுப் பாய்ச்சி உழுபவன்
பள்ளன் ஆவான். சுருதிகள் போற்றும் எட்டு எழுத்துகள்
(ஓம் நமோ நாராயணாய) வைணவத்தில் முதன்மை
பெற்றவை. இந்த எழுத்துகளைப் பெரிய நம்பியைக் கேட்டுத்
தெரிந்து கொள்ளாத துட்டர்களின் காதுகளைப் பாம்புப்
புற்றுகள் என்று கருதி வெட்டி எறிபவன் பள்ளன்.
பெருமானுடைய நூற்று எட்டுத் திருப்பதிகளையும் வலம்
செய்து வணங்காதவர் கால்களை வடத்தால் பிணித்து
ஏர்க்காலில் சேர்த்துக் கட்டுபவன் பள்ளன். திருவாய்மொழிப்
பாசுரங்களைக் கல்லாதவர்களை இருகால் மாடுகளாக ஆக்கி
ஏரிலே பூட்டித் 'தீத்தீ' என்று கோலால் அடித்து ஓட்டுபவன்
பள்ளன். இவ்வாறாகப் பள்ளனின் பெருமை கூறப்பட்டுள்ளது.
இதனைப் பின்வரும் பாடல் விளக்கக் காணலாம்:
ஒருபோதும் அழகர் தாளைக்
கருதார் மனத்தை வன்பால்
உழப்
பார்க்கும் தரிசுஎன்று
கொழுப்
பாய்ச்சுவேன்
சுருதி எண்எழுத்து உண்மைப்
பெரிய நம்பியைக் களோத்
துட்டர் செவி
புற்று எனவே
கொட்டால்
வெட்டுவேன்
பெருமாள் பதிநூற்று எட்டும்
மருவி வலம் செய்யார்தம்
பேய்க்காலை
வடம் பூட்டி
ஏர்க்கால்
சேர்ப்பேன்
திருவாய் மொழிகல்லாரை
இருகால் மாடுகள் ஆக்கித்
தீத்தீ என்று
உழக்கோலால்
சாத்துவேன்
ஆண்டே
(முக்.பள். 12)
(போது = பொழுது, தாள் = திருவடி, வன்பால் =
வரட்டுநிலம், கொழு = உழும் கருவி, சுருதி = வேதம்,
கொட்டு = மண்வெட்டுங்கருவி, பதிநூற்றெட்டு = வைணவத்
திருத்தலங்கள் 108, வடம் = கயிறு, திருவாய்மொழி =
வைணவ இலக்கியம். ஆண்டே = தலைவனே)