தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உரைநடையின் உட்பொருள்கள்

5.3 உரைநடையின் உட்பொருள்கள்

கண்ணதாசன் உரைநடையில் புதினம், சிறுகதை, நாடகம்
எனப் பல வடிவங்களில் படைப்புகளை இயற்றியுள்ளார் என்று
கண்டோம். இவை அனைத்திலும் உட்பொருளாக அமைந்தவை
எவை என்பதை அறிய வேண்டாமா? அவற்றை அறிந்து
கொள்வது அவரது உரையின் தன்மையை அறிந்து
கொள்வதற்கும் பயன்படும் அல்லவா? எனவே கண்ணதாசன்
உருவாக்கிய உரைநடைப் படைப்புகளின் உட்பொருள்களைப்
பகுத்துக் காண்பது பொருத்தம் தானே!

கண்ணதாசனின்     உரைநடையில்     அமைந்த
உட்பொருள்களைப் பின்வருமாறு பகுத்துக் காணலாம். அவை,
 

(1)
தமிழ் இன, மொழி உணர்வு
(2)
திராவிட இயக்க உணர்வு
(3)
தமிழர் வரலாறு
(4)
இந்தியத் தேசிய உணர்வு
(5)
தத்துவம்
(6)
வாழ்வின் பட்டறிவுப் பிழிவுகள்
(7)
இந்து சமயத் தத்துவம்
(8)
தமிழகத்து அன்றாட அரசியல் நிகழ்வுகள்
(9)
இலக்கியத் திறனாய்வுகள்
(10)
தன் வரலாறு

என்பனவாகும்.

இப்பட்டியலைக் காணும்போது அவரது வாழ்க்கையில்
மேற்கொண்ட கொள்கைகளை விளக்கிக் காட்டும் வகையில்
அவரது படைப்புகள் விளங்கின என்பது தெளிவாகிறது.
கண்ணதாசன் எந்த இயக்கத்தைச் சார்ந்தவராக இருந்தாரோ
அப்போது அந்த இயக்கம் பற்றிய கருத்துகளைத் தன்
உரைநடையில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதைப் புரிந்து
கொள்ள முடிகிறது. கண்ணதாசன் திராவிட இயக்கத்தில்
இருந்த போது அவ்வியக்கக் கொள்கைகளைத் தன்
உரைநடையில் வடித்துக் கொடுத்தார். பின்னர் அவர் தேசிய
இயக்கத்தில் இணைந்த போது அந்த இயக்கத்தின்
கொள்கைகளையும் தன் உரைநடையின்வழி வெளியிட்டார்.
எனினும் அவர் எந்த இயக்கத்தில் இருந்த போதும், தமிழ்
இலக்கியங்களில் அவர் படித்துச் சுவைத்த பகுதிகளைப்
பாமரர்களுக்கும் வழங்கிட இலக்கியக் கட்டுரைகளைத்
தொடர்ந்து எழுதி வந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

கண்ணதாசன் ஆன்மீகச் செய்திகளை எழுதத் தொடங்கிய
போது அவரது உரைநடை புதுவடிவம் பூண்டது எனலாம்.
இந்து சமயத்தின் சடங்குகளுக்கும் சாத்திரங்களுக்கும் அவர்
தந்த விளக்கங்கள் தமிழ் உரைநடைக்குப் புது வடிவத்தைக்
கொடுத்தன என்பர்.



 
1.
கண்ணதாசனின் பெற்றோர் யாவர்?
2.
கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
3.
கண்ணதாசனின் உரைநடை நூல்களுள் புதினங்கள்,
குறும்புதினங்கள் எத்தனை?
4.
கண்ணதாசனின் படைப்புகள் குறித்துக் கவிஞர்கள்
வெளியிட்டுள்ள கருத்து ஒன்றைக் குறிப்பிடுக.
5.
கண்ணதாசனின் உரைநடையில் அமைந்து இருக்கும்
உட்பொருள்களின் ஐந்தினைக் குறிப்பிடுக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:30:45(இந்திய நேரம்)