தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0111-காப்பியம்

1.1 காப்பியம்

    காப்பியம் என்றால் என்ன? இந்தச் சொல்லின் பொருள் என்ன? இச்சொல் விளக்கும் இலக்கியம் எத்தகையது? ஒருவகையில் சிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்றவை கதைப்பாடல்கள் என்பதை நாம் அறிவோம். இன்னொரு நிலையில் ‘காப்பியம்’ என்றால் என்ன? இந்தச் சொல் எங்கிருந்தது வந்தது? இதன் அடிப்படைப் பொருள் யாது? இதற்கு விடை காண்பதே நமது நோக்கம்.

● சொல் விளக்கம்

    வடமொழியில் ‘காவ்யா’ என்றால் பாட்டு என்பது பொருள். கவியால் படைக்கப்படுவன அனைத்தும் ‘காவியமே’. எனவே காவ்யா - காவியம் - காப்பியம் என ஆகியது என்பர். தமிழில் தொல்காப்பியம், காப்பியக் குடி, வெள்ளூர்த் தொல்காப்பியர், காப்பியஞ் சேந்தனார், காப்பியாற்றுக் காப்பியனார் முதலான பெயர்கள் காணப்படுகின்றன. இவை காப்பு + இயம் என்ற சொற்களின் சேர்க்கையாகக் கருதப்படுகின்றன. பழமரபுகளைக் காப்பது ‘காப்பியம்’ எனக் கருத இடம் உண்டு. காப்பியம் என்ற இலக்கியமே, வரலாற்றுக்கு முற்பட்ட காலச் சமூக - சமய - அரசியல் வரலாற்றையோ அல்லது வரலாறாக நம்பப்படுவதையோதான் பாடுபொருளாகக் கொண்டுள்ளது. இவை வாய்மொழி மரபாகச் சொல்லப்பட்டு வந்த கதைகளாக அமைந்தன. இவ்வாறு வரலாற்றுக்கு முந்தைய கால மனிதனின் வாழ்வியல், சிந்தனை மற்றும் சமய நம்பிக்கை பற்றிச் சொல்லப்பட்டு வந்த கதைகளே ஹோமர் போன்ற கவிஞர்களால் காப்பியமாகத் தொகுக்கப் பட்டன.

    ஆங்கிலச் சொல்லான Epic என்பதும் ‘epo’ என்ற கிரேக்கச் சொல்லின் ஆக்கமாகக் கருதப்படுகிறது; ‘epo’ என்றால் ‘to tell’ என்றும், ‘epos’ என்றால் ‘anything to tell’ என்றும் பொருள்படும். எனவே Epic என்பது மரபுவழியாகச் சொல்லப்பட்டு வருவது என்பது பொருளாகிறது. இவ்வகையில் காப்பியம் என்பதும் பழமரபுகளைக் காத்து இயம்புவது அதாவது ‘சொல்லப்பட்டு வருவது’ என்பது விளங்குகிறது அல்லவா?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:52:00(இந்திய நேரம்)