Primary tabs
இரட்சணிய யாத்திரிகத்தின் கதை மாந்தர்கள் ஒருவகையில்
தனித்தன்மை வாய்ந்தவர்கள். புதுமையானவர்கள்.
அதற்குக்
காரணம் அக்காப்பியத்தின் முற்றுருவகத் தன்மை ஆகும். ஒரு
கதையில் பாத்திரங்கள், கதை நிகழ்ச்சிகள் எல்லாமே
உருவகங்களாக அமைந்தால், அது முற்றுருவகம் எனப்படும்.
அம்மாந்தர்களைப் பற்றிக் காண்போம்.
1.3.1 தலைமை மாந்தர்
இரட்சணிய யாத்திரிகத்தின் தலைமைக் கதைமாந்தர் யார்என்பதில் முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. பொதுவாக
மக்கள் இது ஒரு கிறித்துவக் காப்பியம் என்பதால் இயேசு
கிறிஸ்துவே இதன் தலைமை மாந்தர் எனக் கருதுவதுண்டு.
ஆனால் முன்னரே சுட்டப்பட்டவாறு, பல்வேறு
சோதனைகளின் இடையே மீட்சிப் பயணம் மேற்கொள்ளும்
ஆன்மிகனது பயணத்தைப் பற்றியே இக்காப்பியம் பேசுவதால்,
அவனே இக்காப்பியத் தலைவன். அவனை ஆட்கொண்டு
வழிநடத்தும் இறைவனாக இயேசு கிறிஸ்து விளங்குகிறார். ஆனால்
வி. ஞான சிகாமணி குறிப்பிடுவது போல, கம்ப ராமாயணத்துக்கு
இராமர் காப்பியத் தலைவனாக விளங்குவதுபோல இரட்சணிய
யாத்திரிகத்திற்குக் கிறிஸ்து தலைவரல்லர். இரட்சணிய யாத்திரை
செய்பவன் கிறித்துவனே (ஆன்மிகனே) அன்றி, கிறிஸ்து அல்லர்.
● தனித்தன்மை கொண்ட தலைமை மாந்தர்
இரட்சணிய யாத்திரிகத்தின் கதைமாந்தர் அனைவருமே
உருவகப் பண்பினர் என்பது முன்னரே சுட்டப்பட்டது.
அவர்கள் இடையிலும் தலைமை மாந்தராக அமையும் ஆன்மிகன்
அல்லது கிறித்தவன் தனிச் சிறப்புடைய ஒரு பாத்திரமாகக்
கருதப்பட வேண்டும். வழக்கமாகப் பெருங்காப்பியங்களில்
அமையும் தலைவனைப் போன்று, இவன் தன்னிகரற்ற - உயர்ந்த
மானிடப் பிறவியோ, தெய்வப் பிறவியோ, அரசனோ, வள்ளலோ
அல்லன். அன்றாட மனித வாழ்வில் நாம் சாதாரணமாகச்
சந்திக்கிற - ஆசைப் பற்றுகளும் பலவீனங்களும் நிறைந்த ஒரு
சாமானியன். ஆனால், அவனிடம் ஓர் உயர்ந்த நாட்டம்
இருக்கிறது, பாவங்களும் அக்கிரமங்களும் அசுத்தங்களும்
நிறைந்த தன் சொந்த நாட்டை விட்டு, தூய்மைக்கும் அறத்துக்கும்
மொத்த உருவமாகத் திகழும் இறைவன் வாழும் பேரின்ப நாட்டை
அடைய வேண்டுமென்ற நீங்காத தாகம் அது. அதனால், அவனது
பாத்திரப் படைப்பை ஆசிரியர் பரிணாம வளர்ச்சி கொண்ட
ஒன்றாக அமைக்கிறார். படிப்படியாகப் பற்பல இடர்களையும்
தடைகளையும் தாண்டி, பலமுறை கீழே விழுந்து மீண்டும் எழுந்து,
தடுமாறி, பின் மனம் தேறி இப்படியாகப் புனிதப் பயணம்
செல்லும் ஒருவனாக அவன் படைக்கப்பட்டுள்ளான். இறுதியில்
அவன் தன் இலட்சியத்தை அடைவதாகக் காப்பியம் முடிவதால்,
அவன் தனக்கு நிகர் இல்லாத தலைவனாகக் காப்பிய முடிவில்
உயர்ந்தும் விளங்குகிறான். மனித வாழ்வின் போராட்டங்களின்
இடையே, இலட்சியப் பயணம் செல்ல விரும்பும்
ஒவ்வொருவரும் இத்தலைவனின் பாத்திரத்தில் தங்களையே
கண்டு கொள்ள இயலும். இந்த வகையான தனிச் சிறப்புக்
கொண்டதாக விளங்குவது இந்தத் தலைமைப் பாத்திரம்.
1.3.2 பிற கதை மாந்தர்கள்
யாத்திரிகத்தின் பிற கதை மாந்தர்கள் பெரும்பாலும் உருவகமாந்தர்களே ஆவர். அதாவது, மனித வாழ்வில் காணப்படும்
பண்புகளே - குணங்களே கதைமாந்தர்களாக உருவகம் செய்யப்
பட்டுள்ளன. சான்றாக, உறுதியான நெஞ்சின்றி, ஆபத்தைக் கண்டு
அஞ்சி நடுங்கி, கொண்ட கொள்கையில் இருந்து தவறும் - எடுத்த
இலட்சியத்தைக் கைவிட்டுவிடும் மனப்போக்கு மென்னெஞ்சன்
என்ற பாத்திரமாக உருவகிக்கப்படுகிறது. அவ்வாறாக அமையும்
காப்பிய மாந்தரை அதாவது கதாபாத்திரங்களை நன்மைப்
பாத்திரங்கள், தீமைப் பாத்திரங்கள், இவை இரண்டு நிலைகளிலும்
சேராத நிலைதடுமாறும் பாத்திரங்கள் என ஆய்வாளர்கள்
பகுத்துக் கூறுகின்றனர். சில சான்றுகளைக் காண்போம்.
● நன்மைப் பாத்திரங்கள்
உயர்ந்த நல்ல இலட்சியங்களுக்காக உயரிய பண்புகளோடு
செயல்படும் கதை மாந்தர் இவ்வகையினர். மலோன
கொள்கைகளைப் பதற்றம் இல்லாமல், ஆரவாரம் இல்லாமல்,
தாமும் பின்பற்றி, பிறரையும பின்பற்றச் செய்யும் சிறந்த
மனப்பாங்கு நிதானன் என்னும் கதை மாந்தர் ஆகிறது.
வாழ்க்கைப் பயணத்தில் நாம் தடுமாறி விழும்போது, நமக்கு நல்ல
புத்தி சொல்லி, நம்மை நல்வழியில் நடத்துகின்ற நற்பண்பு
நற்செய்தியாளன் என்னும் பாத்திரமாக இங்கு உருவகம் ஆகிறது.
நம்பிக்கையை இழந்து மனம் சோர்ந்து கலங்கும் நேரத்தில் நமக்கு
ஊக்கமூட்டும் உயரிய பண்பு நம்பிக்கை என்னும் கதை
மாந்தராகப் படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே குரு, சகாயன்,
யூகி, பக்தி, சிநேகிதி முதலிய கதைமாந்தரை விவரிக்கலாம்,
சான்றாக, ஆரணிய பருவத்தின் விடாத கண்ட படலத்தில்
வரும் நம்பிக்கை என்னும் கதை மாந்தரைக் குறிப்பிடலாம்.
நம்பிக்கையும் கிறிஸ்தவனும் முக்தி வழியில் சென்று
கொண்டிருக்கும் பயணத்தில், ஒரு கொடிய பாலை வழியில் வழி
தப்பிச் செல்கின்றனர். தங்கள் தவறை உணர்ந்து, சரியான
வழிக்குத் திரும்ப முயலும் நேரத்தில் மழையும், புயலும், இடியும்
தாக்கவே, அருகிலிருந்த ஒரு குகையில் ஒதுங்குகின்றனர்.
அப்போது அக்குகைக்கு அருகே வாழ்ந்து வந்த விடாத கண்டன்
என்னும் இராக்கதன் இவர்களைக் கண்டு, இவர்களைப் பிடித்து,
ஒரு சிறையில் அடைத்துத் துன்புறுத்துகிறான். இதனால் மனம்
சோர்ந்து போகும் கிறிஸ்தவன், தற்கொலை செய்து கொண்டு
இறந்துவிடக் கருதுகிறான். அப்போது, நம்பிக்கை அவனுக்கு
ஆறுதல் கூறி, ஊக்கம் ஊட்டித் துன்பங்கள் வருவது இயல்பே,
நாம் மனம் தளரக் கூடாது; இறையருள் நம்மைக் காக்கும்
எனப் பேசி, கிறிஸ்தவனின் தற்கொலை முயற்சியைத் தடுத்து
விடுகிறான். இவ்வாறு செயல்படும் நன்மைப் பாத்திரங்கள் பல
உள்ளன.
● தீமைப் பாத்திரங்கள்
தீய பண்புகளைத் தாமும் வெளிப்படுத்தி, பிறரையும் தீய
வழிக்கு இழுக்கும் செயல்களையும் பண்புகளையும், தீமைப்
பாத்திரங்களாகக் காப்பியம் வடிவமைக்கிறது. எல்லாத் தீமைக்கும்
ஒட்டு மொத்த வடிவமாய் நம்மால் விவரிக்கப்படும் சாத்தானே -
இருட்சக்தியே, இக்காப்பியத்தின் அழிம்பன் ஆகிறான். அவன்
நல்லோரையும் நல்லவைகளையும் அழிக்க முனைபவன் என்பதால்
அப்பெயர் பெறுகிறான். அவ்வாறே மற்றவர்களை நல்வழியில்
செல்லவிடாமல் தடுக்கும் - ஊக்கத்தைத் குலைக்கும் பண்புகள்
இங்கு அவநம்பிக்கை, விடாதகண்டன் முதலியவை
தீமைப்பாத்திரங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
சான்றாக, இதே பகுதியில் இடம் பெறும் விடாத கண்டன்
என்னும் இராக்கதனைத் தீமைப் பாத்திரங்களுக்குச் சான்றாகச்
சுட்டலாம். முக்தி வழியில் செல்லுகின்ற பயணிகளுள் வழி தப்பி,
தான் வாழும் சந்தேகத் துருக்கம் என்னும் மலைப் பகுதிக்கு
வந்துவிடக் கூடியவர்களைப் பிடித்து, அவர்களைச் சிறைப்படுத்தி,
அவர்களைத் தன் மனைவியாகிய நீலிக்கு உணவாகக் கொடுக்கும்
வழக்கம் உடையவன் அக்கொடியவன். அவ்வாறே, கிறித்துவனும்
நம்பிக்கையும் வழி தப்பி அங்கு வந்த போது, அவர்களை
விடாதகண்டன் பிடித்து, சிறையில் அடைத்து வேதனைப்
படுத்துகிறான். அவர்களைத் தற்கொலை செய்து கொள்ளுமாறு
தூண்டுகிறான். இத்தகைய தீமைப் பாத்திரங்கள் பல
இக்காப்பியத்தில் இடம் பெறுகின்றன.
● நிலைதடுமாறும் பாத்திரங்கள்
மேலே பார்த்த இரு வகையிலும் சேராமல் அதாவது
நல்லவர்களாகவும் இல்லாமல் தீயவர்களாகவும் இல்லாமல்
உறுதியின்றி வாழ்கின்ற மக்களையும் காப்பியத்தில் காண்கிறோம்.
இவர்களைத் தற்கால வழக்கில் ‘இரண்டும் கெட்ட நிலையினர்’
எனலாம். இணங்கு நெஞ்சன். யார் எதைச் சொன்னாலும் நல்லது
கெட்டது என்று பாராமல் இணங்கிவிடும் பாத்திரம். மாயசாலகன்
இப்படியும் அப்படியும் எப்படியும் மாற்றி மாற்றிப் பேசுபவன்.
மாயவேடன் நல்லவனாகவும் தீயவனாகவும் மாறிமாறி வேடம்
போட்டு, பிறரையும் ஏமாற்றித் தன்னையும் ஏமாற்றிக்கொள்பவன்.
அறிவீனன் எனும் பாத்திரம் எப்பொருள் யார் யார் வாய்க்
கேட்டாலும், அப்பொருளின் மெய்ப்பொருளைக் காணக்கூடிய
அறிவு இல்லாதவன். இவ்வாறு யாத்திரிகக் கதை மாந்தர் பல
திறத்தினராக அமைந்து காப்பிய வாசகர்களுக்குச் சுவை
கூட்டுகின்றனர்.
சான்றாக, ஆரணிய பருவத்தில் அறிவீனவர்ச்சிதப் படலத்தில்
வரும் அறிவீனனைக் குறிப்பிடலாம். இவனுக்கும் முத்திநகர்
சென்று சேர வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. அதனால்
முத்தி வழி செல்லும் பயணிகளுடன் சென்று சேர்ந்து
கொள்கிறான். ஆனால், முத்திநகர்ப் பயணிகளுக்கு இருக்க
வேண்டிய தகுதிகள் எதுவும் அவனிடத்தில் இல்லை. முத்திநகர்
வாயிலில் காட்டுவதற்கு உரிய சான்றிதழும் இல்லை. அவற்றைப்
பெற்றுக் கொள்ளும் வழிகளையும் அதற்குரிய அறிவுரைகளையும்
கிறிஸ்தவனும் நம்பிக்கையும் அவனுக்கு எடுத்துக் கூறியும் அவன்
கேட்கவில்லை. தன் சொந்தப் பெருமைகளைப் பேசி, பிறரையும்
குற்றம் கூறுகிறான். இதனால் அப்பயணத்தில் அவன் பின்தங்கி
விடுகிறான். இத்தகைய இருமனம் கொண்ட தடுமாறும்
பாத்திரங்கள் சிலரும் காப்பியத்தில் இடம் பெறுகின்றனர்.
சமயத்துக்கு மாறினார்?
ஒன்றன் பெயரைக் குறிப்பிடுக.
மூல நூல்கள் எது அல்லது எவை?
தலைமை மாந்தர் யார்?
பாத்திரம்’ ஒன்றன் பெயரைத் தருக.