தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விசயநகரப் பேரரசு

5.1 விசயநகரப் பேரரசு


    துங்கபத்திரை ஆற்றுக்கு வடக்கிலிருந்து தொடங்கிய
விசயநகரப் பேரரசின் எல்லை தெற்கே குமரிமுனை வரை
இருந்தது. ஏறத்தாழ தென்னகம் முழுவதும் விசயநகரப்
பேரரசின் கட்டுப்பாட்டிற்குள் திகழ்ந்தது. விசயநகரப் பேரரசு

     (1) துளுநாடு
     (2) மலைநாடு
     (3) உதயகிரி நாடு
     (4) பெனுகொண்டா நாடு
     (5) இராச கம்பீரநாடு
     (6) மழவராயநாடு

ஆகிய பிரிவுகளைத் தொடக்க காலத்தில் தன்னகத்தேகொண்டு
விளங்கியது.

5.1.1 சங்கம குலப் பேரரசர்கள்

    கி.பி. 1336 - 1357 வரை அரிகரரும், 1357 முதல் 1377 வரை
அவரது தம்பி புக்கரும், 1377 - 1404 வரை அவரது மகன்
இரண்டாம் அரிகரரும், 1405 முதல் 1406 வரை அவரது மகன்
இரண்டாம் புக்கரும் அரசாண்டனர். இதன் பின்னர் இரண்டாம்
புக்கரின் தம்பியான முதலாம் விருபாட்சர், முதலாம் தேவராயர்
ஆகியோர் ஆண்டனர். கி.பி. 1422 - 26 வரை விசயரும்,
1424 - 1447 வரை இரண்டாம் தேவராயரும் ஆண்டனர்.
இதன்பின்னர் கி.பி. 1447 - 1465 வரை) இரண்டாம் தேவராயரின்
மகன் மல்லிகார்ச்சுனனும், கி.பி. 1465 - 85 வரை அவன் தம்பி
விருபாட்சனும் ஆட்சி செய்தனர். இவர்களுடன் சங்கம குலப்
பேரரசர்களின் ஆட்சி நிறைவுற்றது.

5.1.2 சாளுவ குலப் பேரரசர்கள்


    சங்கம குலப் பேரரசர்களின் ஆட்சி நிகழ்ந்த போது
சந்திரகிரியில் சிற்றரசனாகத் திகழ்ந்த சாளுவ நரசிம்மன் கி.பி.1485-
இல் விசயநகரத்தைக் கைப்பற்றி, சாளுவ குலத்தினர் ஆட்சியைத்,
தோற்றுவித்தான். சாளுவ நரசிம்மனின் ஆட்சி கி.பி. 1493 வரை
தொடர்ந்தது. இவனது மறைவிற்குப் பிறகு அவரது இரண்டு
மகன்களுக்கும்     காப்பாளராகத் திகழ்ந்த     அமைச்சரான
நரசநாயக்கன், பெயரளவில் சாளுவ நரசிம்மனின் மகன்களை
அரசர்களாகக் கொண்டு தானே முழு அதிகாரத்தையும்
செலுத்தலானார். பின்னர் நரச நாயக்கனின் மகனான வீரநரசிம்மன்
சாளுவ மரபின் அரச மைந்தர்களைக் கொன்று விட்டு, தானே
அரசு கட்டிலேறி கி.பி. 1506 இலிருந்து 1509 வரை ஆட்சி
புரிந்தான்.

5.1.3 துளுவ குலப் பேரரசர்கள்

    வீர நரசிம்மனுக்குப் பிறகு அவனது ஒன்று விட்ட தம்பியான
கிருஷ்ணதேவராயர் கி.பி. 1509 - இல் விசயநகரப் பேரரசராக
முடிசூடிக் கொண்டார். இவர் காலத்திலிருந்து துளுவ குலத்தினர்
ஆட்சி தொடக்கம் பெற்றது. இவருக்குப்பின் அவரது தம்பி
அச்சுததேவராயர் கி.பி. 1530 இலிருந்து 1542 வரையும்,
சதாசிவராயர் 1542 - 1576 வரையும் விசயநகரப் பேரரசர்களாக
விளங்கினர். சதாசிவராயர் காலத்தில் (கி.பி 1565- இல்) பாமனி
சுல்தானால் தொடரப்பெற்ற தலைக்கோட்டைப்போர் நிகழ்ந்தது.
இப்போரின் காரணமாக விசயநகரப் பேரரசு வலிமை குன்றியது.
தலைக் கோட்டைப் போருக்குப் பின்பு பல்வேறு ஆட்சி
மாற்றங்கள் நிகழ்ந்தன.

5.1.4 ஆரவீடு குலப் பேரரசர்கள்

    தலைக்கோட்டைப் போருக்குப் பின்பு திருமலைராயன்
என்பான் பெனுகொண்டாவிற்கு வந்து தனது ஆட்சியை நிறுவி,
விசயநகரை மீண்டும் பொலிவடையச் செய்ய முயன்று
தோல்வியுற்றான். சதாசிவராயனை நீக்கிவிட்டுத் தானே கி.பி. 1570-
இல் ஆளத் தொடங்கினான். இவனால் ஆரவீடு குலத்தினர்
ஆட்சி தொடங்கியது. பேரரசை மூன்றாகப் பிரித்து, தன்
மூத்தமகன் ஸ்ரீரங்கனைத் தெலுங்கு நாட்டிற்கும், இரண்டாம் மகன்
இராமனைக்     கன்னட     நாட்டிற்கும்,     இளையமகன்
வேங்கடாத்திரியைத்     தமிழகத்திற்கும்     ஆட்சியாளர்களாக
நியமித்தான். கி.பி. 1572-இல் திருமலைராயன் மறைந்ததும்
ஸ்ரீரங்கன் விசயநகரப் பேரரசனாக முடிசூடிக் கொண்டான்.
இவனது ஆட்சி கி.பி. 1572 முதல் 1585 வரை நீடித்தது. சிறையில்
அடைக்கப்பெற்றிருந்த சதாசிவராயர் கி.பி. 1576-இல் மரண
முற்றார். ஸ்ரீரங்கன் 1585-இல் மக்கட் பேறின்றி மாண்டான். பின்பு
அவன் தம்பி வேங்கடாத்திரி விசயநகரப் பேரரசனானான். இவனது
ஆட்சி 1585 இலிருந்து 1614 வரை நீடித்தது. இவனது மறைவிற்குப்
பிறகு ஸ்ரீரங்கனின் இரண்டாம் மகன் இராமதேவன் கி.பி. 1614-இல்
கும்பகோணத்தில் முடிசூடப்பெற்று விசயநகரப் பேரரசனானான்.
கி.பி 1614 -30 வரை இவனது ஆட்சி நீடித்தது. அவனுக்குப் பின்
வேங்கடன் (கி.பி 1630 - 1642) அரசனானான். இவன்
பெனுகொண்டாவை விட்டு வேலூருக்குத் தலை நகரை மாற்றிக்
கொண்டான். இவனுக்குப் பிறகு இவனது தம்பி மகன் மூன்றாம்
சீரங்கன் கி.பி.1642-இல் அரசு கட்டில் ஏறினான். இவன் காலத்தில்
ஒரு புறம் நாயக்க மன்னர்களும் மறுபுறம் சுல்தான்களும்
விசயநகர அரசை நெருக்கினார்கள். கோல்கொண்டா சுல்தான்
வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். பீசப்பூர் சுல்தான்
வேலூரைக்     கைப்பற்ற முயன்றான். கி.பி. 1640- இல்
விரிஞ்சிபுரத்தில் பீசப்பூர் படைகளுக்கும் சீரங்கன் படைகளுக்கும்
கடும் போர் நடந்தது. சீரங்கன் தோல்வியுற்றான். வேலூர் பீசப்பூர்
சுல்தான் வசமாயிற்று. நாடிழந்து அலைந்த மூன்றாம் சீரங்கன்
கி.பி. 1672-இல் மாண்டான். இவனோடு ஆரவீடு மரபினரின்
ஆட்சி முடிவுற்றது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)