தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வளர்ச்சியும்

6.1 கி.பி. 17 - 18 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கில
ஆட்சி கால்கொள்ளுதலும் ஆதிக்க வளர்ச்சியும்

    இங்கிலாந்து அரசி எலிசபத்திடம் இசைவு பெற்ற ஆங்கில
வணிகக் குழு ஒன்று கி.பி. 1600-இல் நிறுவப் பெற்றது. முதலில்
இந்தியாவில் சூரத், மசூலிப்பட்டணம் ஆகிய இடங்களில்
பண்டகசாலைகளை நிறுவிய அவ்வணிகக்     கழகத்தார்
சென்னையிலும் ஒரு பண்டகசாலையை நிறுவினர். அவ்வணிகக்
குழுவின் தலைவரான ஃபிரான்ஸிஸ் டே என்பவர் கி.பி. 1639-இல்
சென்னைக் கடற்கரையில் ஒரு     பகுதியினை, சென்னப்ப
நாயக்கனிடமிருந்து விலை கொடுத்து வாங்கினார். அங்குக்
கட்டப்பட்ட பாதுகாப்பு மிக்க வணிக மையமே செயிண்ட்
ஜார்ஜ் கோட்டையாகும். ஆங்கில வணிகக் குழுவின் தலைவராக
இருந்த ஜார்ஜ் பாக்ஸ்கிராப்ட் என்பவரை, அக்குழுவினர்
தங்கள் சார்பில் முதல் ஆளுநராக நியமித்தனர். சென்னைக்
கோட்டை ஆங்கில வணிகத்தின் தலைமை இருக்கையாக மாறியதும்
அதனைச் சுற்றிலும் குடியிருப்புகள்     தோன்றின. பின்பு
படிப்படியாகக் கடலூர், பறங்கிப்பேட்டை ஆகிய இடங்களிலும்
கோட்டைகளுடன் கூடிய பண்டக சாலைகளை நிறுவினர்.
நாளடைவில் வலுவடைந்த ஆங்கில வணிகக் குழுவினருக்கு
முகலாய அரசு பல சலுகைகளையும் உரிமைகளையும்
வழங்கியது. கி.பி. 1708-9-ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து நாட்டு
வணிகக் குழுக்கள் யாவும் ஒன்றிணைந்து ஒருங்கிணைக்கப்பட்ட
ஒரே குழுவாக மாறியது. இக்குழு மொகலாயப் பேரரசரிடம்
உரிமைகளைப் பெற்று, சென்னை, மும்பாய், கொல்கத்தா முதலிய
இடங்களிலுள்ள பண்டக சாலைகளுக்குப் பாதுகாப்புத் தேடிக்
கொண்டதுடன், நாணயங்கள் அச்சிடும் உரிமையும் பெற்றது.
வலிமையுடைய படைகளை இங்கிலாந்து நாட்டிலிருந்து தருவித்துக்
கொண்டது. வணிகத்தில் தொடங்கிய கம்பெனியார், இந்திய
நாட்டில் வலிமையுடன் காலூன்றிக் கொண்டு, உள்நாட்டு
விவகாரங்களில் தலையிட்டு நாடு பிடிக்கத் தொடங்கினர்.

6.1.1 ஆங்கிலேயர்களும் பிரஞ்சுக்காரர்களும்
    கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வணிகம் செய்து வந்த
போர்த்துகீசியர், டச்சுக்காரர், டேனியர் ஆகியோர் ஆங்கிலேயர்,
பிரஞ்சுக்காரர்களின் வருகையால் வலுவிழந்து வணிகத்திலிருந்து
ஒதுங்கினர். கி.பி.1664-இல் தோற்றுவிக்கப் பெற்ற பிரஞ்சுக்
கிழக்கிந்திய வணிகக்குழு கி.பி.1668-இல் சூரத்திலும், 1669-இல்
மசூலிப்பட்டணத்திலும் பண்டகசாலைகளை நிறுவியது. அக்கால
கட்டத்தில் பீசப்பூர் சுல்தானின் கீழ், சிற்றரசனாக இருந்த
செர்க்கான்லோடி என்பான் திருச்சிக்கு அருகிலுள்ள
வாலிகண்டபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி
புரிந்தான். அவனிடமிருந்து, பிரஞ்சு வணிகக் குழுவின் முகவரான
பிரான்சுவா மார்டின் புதுச்சேரியை (பாண்டிச்சேரியை) பெற்று
வணிக மையத்தை அமைத்தார். அங்கே பாதுகாப்புமிக்க
அரண்களைப் பிரஞ்சுக்காரர்கள் ஏற்படுத்திக் கொண்டதோடு,
தங்கள் பாதுகாப்புக்காகப் படை பலத்தையும் பெருக்கிக்
கொண்டனர். சென்னையைப் போன்று புதுச்சேரியும் ஒரு நகரமாக
வளர்ச்சி பெற்றது. புதுச்சேரிக்குத் தெற்கே இருந்த டேவிட்
கோட்டையிலும் (கடலூர்), தரங்கம்பாடிக் கோட்டையிலும்
ஆங்கிலேயர்கள் தங்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொண்டனர்.
தமிழகத்தில் உள்நாட்டு மன்னர்களுக்கு இடையே இருந்த
குழப்பங்களை, இருதிறத்தாரும் நன்கு பயன்படுத்திக்கொண்டு
தங்களுடைய ஆதிக்கத்தை மேம்படுத்திக் கொண்டனர்.
  • முதல் கருநாடகப் போர் (கி.பி. 1746 - 1748)

    தமிழகம் உள்ளிட்ட கருநாடகம், ஆந்திர மாநிலப்பகுதிகளை,
கருநாடகம் என்றே ஆங்கிலேயர் குறிப்பிட்டனர். ஹைதராபாத்
நிஜாமின் கீழ், ஆர்க்காட்டை நவாப் என்ற பெயரில் இசுலாமியர்
ஆட்சி செய்தனர். கிபி. 1741-இல் மராட்டியர் ஆர்க்காட்டைத்
தாக்கி அதனை ஆட்சி செய்த நவாப் தோஸ்து அலியைக் கொன்று,
அவனுடைய மருமகன் சந்தாசாயபுவைச் சிறைபிடித்துச் சென்றனர்.
தோஸ்த் அலியின் மகன் சப்தர் அலி ஒரு கோடி ரூபாயை
மராட்டியருக்குக் கொடுத்து ஆர்க்காட்டை மீட்டான். ஆனால்
அவனும் தன் உறவினரால் கொல்லப்பட்டான். சப்தர் அலியின்
இளைய மகன் 1742-இல் நவாப் ஆனான். இந்நிலையில் ஐதராபாத்
நிஜாம் ஆர்க்காட்டுக்கு வந்து, அவ்விளைஞனை நீக்கிவிட்டுத்
தனக்குக் கீழ்ப்படியும் அன்வாருதீன் என்பவனை, கி.பி. 1473-இல்
ஆர்க்காட்டு நவாப்பாக நியமனம் செய்தான். தோஸ்த்து அலியின்
உறவினர்கள் இதனை எதிர்த்துக் கலகம் செய்தனர். ஐரோப்பாவில்
ஆங்கிலேயருக்கும், பிரஞ்சுக்காரர்களுக்கும் போர்மூளவே, அதன்
எதிரொலியாகத் தமிழ்நாட்டிலும் ஆங்கிலேயர் பிரஞ்சுக்காரர்கள்
மோதல்கள் நிகழ்ந்தன. கி.பி. 1746-இல் பிரஞ்சு ஆளுநராக இருந்த
தூப்ளே சென்னையைக்     கைப்பற்றிச்     சூறையாடினான்.
ஆங்கிலேயருக்கு உதவ ஆர்க்காட்டிலிருந்து அன்வாருதீன்
அனுப்பிய     படை     தூப்ளேவால் தோற்கடிக்கப்பெற்றது.
ஆங்கிலேயருடைய செயிண்ட் டேவி்ட் கோட்டையையும் பிரஞ்சுப்
படை முற்றுகையிட்டது.     இறுதியில்     பிரஞ்சுக்காரர்களும்
ஆங்கிலேயரும்     சமாதானமடைந்தனர்.     இப்போர்களினால்
தூப்ளேவுக்கு நாடுபிடிக்கும் ஆசை ஏற்பட்டது.

  • இரண்டாம் கருநாடகப் போர் (கி.பி. 1749 - 54)

    மராட்டியர்களால் விடுவிக்கப் பெற்ற சந்தாசாகிப் ஆர்க்காட்டு
நவாப்பாக முடிசூட வேண்டும் என்ற முடிவோடு, பிரஞ்சு கவர்னர்
தூப்ளேயின் உதவியை நாடினான். கி.பி. 1749-இல் ஆம்பூரில்
நிகழ்ந்த போரில் ஆர்க்காட்டு நவாப் அன்வாருதீனை, சந்தாசாகிப்,
தூப்ளே, முசாபர்சங் (ஹைதராபாத் நிஜாம் பதவிக்கு முயன்றவன்)
என்ற     மூவரின்     படைகளும்     இணைந்து கொன்றன
அன்வாருதீனுடைய மகன் முகமதலி தப்பியோடி, திருச்சிக்
கோட்டைக்குள் புகுந்து கொண்டான். அவனுக்கு ஆங்கிலேயர்கள்
படை உதவி செய்தனர். பிரஞ்சுப் படையினரின் உதவியால்
சந்தாசாகிப் ஆர்க்காட்டுக்கு     நவாப்பாகவும், முசாபர்சங்
ஹைதராபாத் நிஜாமாகவும் பதவி ஏற்றனர். திருச்சியிலிருந்த
முகமதலிக்கு உதவ முற்பட்ட ஆங்கிலேயர்கள் மைசூர், தஞ்சாவூர்
மராட்டியர் படையினரின் உதவிபெற்று, ஆர்க்காட்டு நவாப்பைத்
தாக்க முற்பட்டனர். கொல்கொத்தாவிலிருந்து ராபர்ட் கிளைவ்
தலைமையில் மற்றொரு ஆங்கிலப் படை கப்பலில் சென்னை வந்து
இறங்கியது. பல இடங்களில் போர் நிகழ்ந்தன. ஆர்க்காடு
ஆங்கிலேயர் வசமாயிற்று. போரில் சந்தாசாகிப் கொல்லப்பட்டான்.
கி்.பி. 1754-இல் தூப்ளே தாய் நாட்டிற்குத் திருப்பி
அழைக்கப்பட்டான். பின்வந்த பிரஞ்சு ஆளுநர் கோதேயு
ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வணிகச் செயல்களை
மட்டும் கவனித்தான். ஆங்கிலேயர்கள் முழுமூச்சுடன் உள்நாட்டுப்
பிரச்சனைகளில் தலையிட்டு இலாபம் அடைந்தனர்.

6.1.2 ஆங்கிலேயருடன் இணைந்து ஆர்க்காட்டு ஆட்சி

    இரண்டாம் கருநாடகப் போருக்குப் பின்பு ஆர்க்காட்டு
நவாபின் ஆட்சியின் மீது ஆங்கிலேயர்களுக்கு மோகம் ஏற்பட்டது.
நவாபு வாலாசா முகமது அலி (கி.பி. 1749 - 1795)
ஆங்கிலேயர்களின் கைப்பாவையாக அரசு கட்டிலில் திகழ்ந்தான்.
பல ஆங்கிலேய கவர்னர்கள் நவாப்புக்கு அதிக அளவில் கடன்
கொடுத்து, ஆட்சியைக் கவனிக்காமல் இன்ப வெள்ளத்தில்
திளைக்கச் செய்தனர். கி.பி. 1731-இல் சென்னை அரசு (ஆங்கிலேய
அரசு) ஆர்க்காட்டு நவாப்புடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு,
நவாப் வாங்கிய கடனுக்காக ஆட்சிப் பொறுப்பை நிருவகிக்கத்
தொடங்கியது. கி.பி. 1792-இல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, நவாப்பும்
ஆங்கிலேயரும் இணைந்த இரட்டையாட்சி முறை ஏற்பட்டது.
ஒருகால கட்டத்தில் நவாப்புகளுக்கு உதவித்தொகை அளித்து
விட்டு, நாட்டு நிருவாகம் முழுவதையும் ஆங்கில அரசே
மேற்கொள்ளலாயிற்று.

ஆர்க்காட்டை ஆண்ட நவாபுகள் (முக்கியமானவர்கள்)
(1) தோஸ்த் அலிகான்
கி.பி. 1732 - 1740
(2) சப்தர்அலிகான்
கி.பி. 1740 - 1742
(3) அன்வாருதீன் முகமது
கி.பி. 1744 - 1749
(4) வாலாசா முகமது அலி
கி.பி. 1749 - 1795

6.1.3 பிரஞ்சுக்காரர்களின் வீழ்ச்சி

    பிரஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் கி.பி. 1758 முதல்
1763 வரை நிகழ்ந்த மோதல்களை மூன்றாம் கருநாடகப் போர்
எனக் குறிப்பர். கி.பி. 1758-இல் ஆங்கிலேயருக்குச் சொந்தமான
புனித டேவிட் கோட்டையை (கடலூர்) லாலி என்ற பிரஞ்சு
கவர்னர் பிடித்துக் கொள்ளவே, மீண்டும் ஆங்கிலேயர்களுக்கும்
பிரஞ்சுக்காரர்களுக்குமிடையே போர்கள் மூண்டன. ஆங்கிலப்
படைகள் பிரஞ்சுப்படைகளை மசூலிப்பட்டணம், இராமேசுவரம்
போன்ற இடங்களில் தோற்கடித்தன. லாலி வந்தவாசிப் போரில்
தோற்றனன். கி.பி. 1760-இல் தமிழகத்தில் இருந்த செஞ்சி,
காரைக்கால், புதுச்சேரி     ஆகிய இடங்களைத்     தவிர,
பிரஞ்சுக்காரர்கள் தாம் கைப்பற்றிய பிற இடங்கள் அனைத்தையும்
இழந்தனர்.


6.1.4 ஐதர்அலியும், திப்புசுல்தானும்

    கி.பி. 1712-இல் பிறந்த ஐதர் அலி மைசூர் மன்னனிடம்
சிப்பாயாகச் சேர்ந்து, பின்னர் மைசூருக்கே தலைவரானார்.
ஆங்கிலேயரை இம்மண்ணிலிருந்து விரட்ட வேண்டும் என்ற
கோட்பாட்டுடன், பலமுறை     அவர்களுடன்     போரிட்டு,
ஆங்கிலேயர்களுக்குக் கடும் துன்பத்தைத் தந்தவர் இவர். 1783
வரை வாழ்ந்து மாண்டார். பின்பு அவரது மகன் திப்பு சுல்தான்,
தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டார். கி.பி. 1799- இல்
சீரங்கப்பட்டினம் போரில் வீர மரணம் அடைந்தார். இவ்விருவர்
காலத்திலும் தமிழகம் பலமுறை போர்க்களங்களைக் கண்டது.

ஐதர்அலி
திப்புசுல்தான்

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)