தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.4 தொல்காப்பியம்

1.4 தொல்காப்பியம்

    இன்று கிட்டும் தமிழ் நூல்களுள் மிகத்தொன்மையானது
தொல்காப்பியம்
என்னும் பேரிலக்கணம். தமிழ்மொழியின்
பெருமையையும், தமிழ் மக்களின் அறிவு மேம்பாட்டையும்
உலகறியச் செய்யும் நூல் இது.


1.4.1 நூல் ஆசிரியர்

    தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர் எனப்படுகிறார்.
பல பெரும்புலவர்களின் வரலாறு சரிவர அறியப்படாதவாறு இவர்
வரலாறும் அறியப்படவில்லை. தொன்மையான காப்பியக்குடி
என்னும் ஊரினர் என்பதால் இப்பெயர் பெற்றார் என்பர் ஒரு
சாரார். தஞ்சை மாவட்டத்தில் சீகாழிப்பகுதியில் உள்ள காப்பியக்
குடியை மேற்கோள் காட்டுவர் ஒரு சாரார். காவிய
கோத்திரத்தைச் சார்ந்த பிராமணராக இவரைக் கருதுவாரும்
உண்டு. தொன்மையான தமிழ் மரபுகளைக் காக்கும் நூலை
இயற்றியமையால் இவ்வாறு பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

    இவர் திரணதூமாக்கினியார் என்ற இயற் பெயருடையார்
என்றும் சமதக்கினி     மாமுனிவரின்     மகன் என்றும்
நச்சினார்க்கினியர் கூறினார். இதற்கு எச்சான்றும் இல்லை. இவரை
அகத்தியரின் மாணாக்கருள் ஒருவர் என்பர். இக்கருத்திற்கு,
இவர் நூலில் எந்தச் சான்றும் இல்லை.

  • சிறப்புப்பாயிரம்

  •     சூத்திர யாப்பில் அமைந்த தொல்காப்பியம் 1610
    சூத்திரங்கள் அடங்கியது. இதற்குப் பனம்பாரனார் என்பார்
    எழுதிய சிறப்புப்பாயிரம் உள்ளது. தொல்காப்பியம் நிலந்தரு
    திருவிற் பாண்டியன் அவையில், அதங்கோட்டு ஆசான்
    முன்னிலையில் அரங்கேறியதாக இவர் கூறியுள்ளார். மேலும்,
    தொல்காப்பியர் தமக்கு முன் தோன்றிய நூல்கள் பலவற்றையும்
    ஆய்ந்து வழக்கு, செய்யுள் ஆகிய இரண்டையும் தழுவி நூல்
    செய்தார் என்கின்றார். மேலும் ஆசிரியர் ஐந்திரத்தில் பெரும்
    பயிற்சியுள்ளவர் என்றும் கூறுகிறார். (ஐந்திரம் = ஒரு வடமொழி
    இலக்கண நூல்)

  • தொல்லாசிரியர் பலர்

  •     தொல்காப்பியர் காலத்தும், அவர் காலத்திற்கு முன்னும்
    இலக்கண     ஆசிரியர்     பலர்     வாழ்ந்தனர் என்று
    தொல்காப்பிய
    த்தால் அறிகிறோம். ‘என்ப’, ‘என்மனார் புலவர்’,
    ‘யாப்பறி புலவர்’, ‘தொன்மொழிப் புலவர்’, ‘குறியறிந்தோர்’ என
    அத்தொல்லாசிரியர்களை     இவ்வாசிரியர்     சுட்டியுள்ளார்.
    அவர்களின் நூல்கள் அழிவுற்றன. இடைச்சங்கத்தார்க்கும்
    கடைச்சங்கத்தார்க்கும் தொல்காப்பியம் இலக்கணமாக இருந்தது
    என்கிறார் இறையனார் களவியல் உரையாசிரியர்.

  • தொல்காப்பியரின் காலம்

  •     தொல்காப்பியரின் காலம் பற்றி அறிஞர்களிடையே பல
    கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. மிகப்பலர் இவர் கி.மு. 5
    அல்லது 3-ஆம் நூற்றாண்டுக்குரியவர் என ஒப்புகின்றனர்.
    பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை போன்ற சிலர், இவர் கி.பி.5-ம்
    நூற்றாண்டினர் என்பர். பொருளதிகாரத்தின் சில பகுதிகள்
    தொல்காப்பியராலன்றிப் பிற்காலத்தாரால் இயற்றப்பட்டன என்ற
    கருத்தும் உண்டு. சங்க இலக்கியங்களில் தொல்காப்பியக்
    கருத்திற்கு மாறான வழக்காறுகள் உள்ளன. எனவே,
    தொல்காப்பியம்
    சங்க இலக்கியங்கட்குப் பல நூற்றாண்டுகள்
    முற்பட்ட நூலே என்பது மிகப்பலர்க்கு உடன்பாடான கருத்து.

    1.4.2 நூலின் அமைப்பு

        இந்நூல் சூத்திர யாப்பில் அமைந்துள்ளது. இதில்
    எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று
    பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒன்பது இயல்கள்
    அமைந்துள்ளன. அவ்வியல்களின் பெயர்களைக் கீழ்க் காணும்
    பட்டியலில் காணுங்கள்.


    1.4.3 எழுத்ததிகாரச் செய்திகள்

        இதில் தமிழ் எழுத்துகளாகிய உயிர் பன்னிரண்டும் மெய்
    பதினெட்டுமாகிய முப்பதும், குறில் நெடில், என்றும், வல்லினம்,
    மெல்லினம், இடையினம் என்றும், பாகுபடுத்தப்படும் செய்திகள்
    இடம்பெறுகின்றன. இவற்றுள் சொல்லின் முதலிலும் இறுதியிலும்
    வருபவை இன்னவை என்பதும் விளக்கப்பட்டுள்ளன.

        தமிழ் ஒலிகள், பிறக்கும் பொது இயல்பும், தனித்தனி
    எழுத்துகளின் பிறப்பு முறையும், இன்றைய ஒலியியலாரும்
    வியக்கும் வண்ணம் விளக்கியுள்ளார் ஆசிரியர்; ஒலிவடிவத்தை
    மட்டுமல்லாது, வரிவடித்தையும் குறித்துள்ளார்; எகரமும், ஒகரமும்,
    குற்றியலுகரமும் புள்ளி பெறும் என்கின்றார்.

        இவ்வதிகாரத்தின் பெரும்பகுதி, சொற்கள் நிலைமொழியாகவும்
    வருமொழியாகவும் நின்று புணரும் நிலைகளையே விளக்கிச்
    செல்கிறது. புணர்ச்சியை வேற்றுமைப் புணர்ச்சி என்றும்,
    வேற்றுமை அல்லாத     புணர்ச்சி என்றும், இயல்புப்
    புணர்ச்சியென்றும், விகாரப்புணர்ச்சி என்றும் இவர் பாகுபாடு
    செய்து விளக்குகின்றார்.

        இவ்வதிகாரத்தில் தொல்காப்பியர் பண்டு தமிழ்நாட்டில்
    வழங்கிய இசை இலக்கணத்தைக் குறிக்கிறார். அதனை, நரம்பின்
    மறை
    என்கின்றார்.

        மாதங்களின் பெயர்களை இகர ஈற்றிலும், ஐகார ஈற்றிலும்
    மட்டுமே பேசுகின்றார். எனவே, இன்றைய மாதப் பெயர்கள்
    பழைமையானவை என்று கருத வேண்டியுள்ளது.

    1.4.4 சொல்லதிகாரச் செய்திகள்

        தமிழ் இலக்கணத்தில் சிறப்பாக அமைந்த கூறுகளுள்
    திணைப்பாகுபாடும் ஒன்று. உயர்திணை அஃறிணை என்ற
    அடிப்படையிலே பெயர்கள்     தோன்றுவதனை விளக்கி,
    இருதிணைக்கும் உரிய ஐந்து பால்களையும், அவற்றுக்கு உரிய
    பெயர், வினை ஆகியவற்றின் ஈறுகளையும் விளக்குகின்றார்.

        தமிழ்த் தொடர்களின் இலக்கணம் இவ்வதிகாரத்தில் சிறப்பாக
    விளக்கப்படுகிறது. தொடர்களின் ஆக்கம், தொடரில் சொற்கள்
    நிற்கும் நிலை முதலியன விளக்கம் பெறுகின்றன.

        வேற்றுமை உருபுகள், அவை ஏற்கும் பொருள்கள், ஒரு
    வேற்றுமைப் பொருளை இன்னொரு வேற்றுமையின் உருபு
    கொண்டு விளங்கும் வேற்றுமை மயக்கம், இருதிணைப்
    பெயர்களும் விளியேற்கும் மரபு, விளியை ஏற்காத பெயர்கள்
    முதலானவை தெளிவுறுத்தப்படுகின்றன.

        பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல் ஆகியவற்றின்
    பொது இலக்கணம், அவற்றின் பாகுபாடுகள், வினைமுற்று,
    வினைஎச்சம், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று,
    பெயரெச்சம், வியங்கோள், எதிர்மறை முற்றுகள் ஆகியனவும்,
    வேற்றுமைத் தொகை, உவமத் தொகை, வினைத்தொகை முதலான
    தொகைச் சொற்களின் இலக்கணமும், சொற்கள் பொருள்
    உணர்த்தும் முறையும், செய்யுளில் பயன்படும் இயற்சொல்,
    திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நால்வகைச்
    சொற்களின் தன்மைகளும் கூறப்பட்டுள்ளன.

        வடசொல் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் (66) என்பதன் மூலம், ஆசிரியர்
    பிறமொழிக்குரிய ஒலிகளைக் கடன் வாங்குவது தகாது என்ற மிகச்
    சிறந்த கருத்தை வலியுறுத்தக் காணலாம். வரம்பின்றி, வடமொழி
    ஒலிகளைக் கடன் பெற்ற ஏனைத் திராவிட மொழிகள்
    தமிழிலிருந்து பெரிதும்      வேறுபட்டுவிட்டன என்பது
    குறிப்பிடத்தக்கது.

    1.4.5 பொருளதிகாரச் செய்திகள்

        பொருள் இலக்கணம் தமிழுக்கே சிறப்பாக அமைந்தது. இது
    அகம், புறம் என்ற இரு பிரிவுகளுள் அடங்கும் இலக்கியங்களை
    உருவாக்கும் படைப்பாளன் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை
    வகுத்துக் கூறுகின்றது. இது தமிழரின் கவிதை இயலாகும்.
    அரிஸ்டாட்டிலின் கவிதை இயலோடு இதனை ஒப்பிடலாம்.

        பொருளதிகாரம் கூறும் செய்திகளில் குறிப்பிடத்தக்கனவற்றை
    மட்டும் இங்கு விளக்குவோம். ஏழு அகத்திணைகளும், அவற்றின்
    கூறுகளும் அகத்திணை     இயலுள் சொல்லப்படுகின்றன.
    அகத்திணை இலக்கியத்திற்கு ஏற்ற யாப்பாக, பரிபாடலும் கலியும்
    ஆசிரியரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

        அகத்திணை ஒவ்வொன்றுக்கும் புறமாக, ஒவ்வொரு
    புறத்திணை வகுத்துரைக்கப்பட்டுள்ளது. இம்மரபு பின்னர்
    மாறிவிட்டது. அகத்திணை ஏழு என்றும், புறத்திணை பன்னிரண்டு
    என்றும் பின்னாளில் கொள்ளப்பட்டன. புறத்திணை இயல்
    தமிழரின் போர் முறையை விவரிக்கிறது. இறந்துபட்ட
    மறவர்களுக்குக் கல்நட்டு வழிபாடு செய்யும் மரபினைத்
    தொல்காப்பிய ஆசிரியர் வெட்சித்திணையில் கூறியுள்ளார்.

        அகவிலக்கியம் களவு, கற்பு என்ற இரு நிலைகளில்
    இயற்றப்படுகிறது. இவ்விரு ஒழுக்கங்களிலும் இடம் பெறும்
    மாந்தர், அவர்கள் பேசும் சூழல்கள் முதலியனவே களவியலிலும்
    கற்பியலிலும் விவரிக்கப்பட்டுள்ளன. கற்பு என்பது திருமணச்
    சடங்குடன் தொடங்குகின்றது. ஒரு காலத்தில் சடங்கு ஏதும்
    இன்றி ஆணும் பெண்ணும் இணைந்த வாழ்க்கை நிலை
    இருந்தமையை ஆசிரியர் குறிப்பாகக் கூறுவார். பெற்றோர் ஒத்துக்
    கொள்ளாதபோது காதலர் உடன்போய், சடங்குடன் திருமண
    வாழ்வில் புகுவது உண்டு என்றும் ஆசிரியர் கூறுகின்றார்.

        கவிதைக்கலைக்கு அழகு     தருவது அணிகளாகும்.
    அணியிலக்கண நூல்கள் பல பிற்காலத்தில் தோன்றின.
    தொல்காப்பியர் அணிகளுக்கெல்லாம் தாயாகிய உவமையை
    மட்டும் ஓர் இயலில் விளக்குகின்றார். வினை, பயன், மெய், உரு
    என்னும் நான்கும் உவமையின் தோற்றத்திற்கு நிலைக்களங்கள்
    என்கிறார் ஆசிரியர்.

        உள்ளத்தில் தோன்றும் இன்பம், துன்பம் முதலிய உணர்வுகள்
    உடம்பின்     வாயிலாக     வெளிப்படுகின்றன. அங்ஙனம்
    வெளிப்படுதலை மெய்ப்பாடு என்பர். நகை, அழுகை, இளிவரல்,
    மருட்கை, அச்சம், பெருமிதம் வெகுளி, உவகை, என அவை
    எட்டாகும். இவற்றையும் இவற்றுக்குரிய நிலைக்களன்களையும் ஓர்
    இயலில் விளக்குகின்றார். இது இயற்றமிழுக்கும், நாடகத்
    தமிழுக்கும் பொதுவானதாகும்.

        பொருளதிகாரத்தில் அமைந்த செய்யுள் இயலும், மரபியலும்
    பழந்தமிழரின் அறிவு மேம்பாட்டிற்குச் சான்றாக அமைந்துள்ளன.
    வெண்பா, அகவல், வஞ்சி, கலி என்று நான்கு வகையான
    யாப்புகளை விளக்கும் ஆசிரியர், முதற்கண் மாத்திரை முதலாக
    26 அகவுறுப்புகளைச் சொல்லி அம்மை, அழகு, தொன்மை, தோல்
    முதலான எட்டுவகைப் புற உறுப்புகளையும் சொல்லியுள்ளார்.

        ஆசிரியர் பல்வேறு இலக்கிய வகைகளைக் குறிப்பிடுகிறார்.
    அவற்றுள் அடி வரையில்லாதனவாக ஆறு உள்ளன. பிசி,
    அங்கதம், மந்திரம், முதுமொழி, வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ
    முதலிய செய்யுள் வகைகள் அன்று வளர்ச்சியுற்றிருந்தமை
    அறியப்படுகின்றது.

        மரத்தையும், புல்லையும் ஆசிரியர் வேறுபடுத்திக் காட்டுவதும்,
    உயிர்களை ஆறு வகையாக வகுத்துக் காட்டுவதும், ஆசிரியரின்
    நுண்ணிய அறிவியற் பார்வைக்குச் சான்றாகும்.

        இவர் விலங்குகள்,     பறவைகள், செடி கொடிகள்
    முதலியவற்றோடு தொடர்புடைய மரபுகளையும், அரசர் அந்தணர்
    முதலான பிரிவினர்க்குரிய மரபுகளையும் மரபியலில்
    கூறியுள்ளார். இறுதியில், இலக்கியப் படைப்பாளி கையாள
    வேண்டிய 32 வகையான உத்திகளைத் தொகுத்துக் கூறியுள்ளார்.

        இங்ஙனம், வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும்
    பகுத்து, அவற்றைப் பற்றிய இலக்கியப் படைப்பிற்கு வேண்டிய
    கூறுகளையெல்லாம்     நிரல்படத்     தொகுத்துக்     கூறும்
    பேரிலக்கணத்தைப் படைத்த தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி
    எனப் போற்றப்படுவதில் வியப்பில்லை.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 03:43:18(இந்திய நேரம்)