Primary tabs
கடைச் சங்க காலத்தின் மேல் எல்லையைக் கி.மு.500 என்றும்
கி.மு.300 என்றும் கூறுவார் உளர். கி.மு.800 என்ற கருத்தும்
உண்டு. கி.பி.100-250, கி.பி.500, கி.பி.800 என்று கூறுவோரும்
உளர். ஆனாலும் மிகப்பெரும்பான்மையோர் இக்காலத்தைக்
கிறித்துநாதருக்குப் பின் வரும் முதல் மூன்று நூற்றாண்டுகட்கு
உரியதாகக் கூறுகின்றனர். கி.பி.300 முதல் கி.பி.900 வரை
தமிழகத்தில் ஆண்ட பல்லவர் பற்றிய ஒரு குறிப்பும் சங்க
நூல்களில் இல்லை. எனவே, கி.பி.3 ஆம் நூற்றாண்டுக்கு
முற்பட்டதே சங்க காலம் என்பர். இதற்கு வலிமை சேர்க்க
அகழ்வாராய்ச்சி முடிவுகளும், சங்க நூலில் இடம்பெறும் யவனர்
பற்றிய குறிப்புகளும், தாலமி, பிளைனி முதலானோர் எழுத்துகளும்
அகழ்வாய்வில் கிடைத்த சங்ககாலப்பொருட்கள்
உதவுகின்றன. பாண்டிச்சேரிக்குப் பக்கத்தில், அரிக்கமேட்டிலும்,
பிற இடங்களிலும் செய்த அகழ்வாராய்ச்சிகளும், கண்டெடுத்த
பானை ஓடுகளும், கிரேக்க உரோமர்களின் காசுகளும் பிறவும்
சங்க இலக்கியக் குறிப்புகளோடு ஒத்துச் செல்கின்றன. எனவே
கடைச்சங்க காலம் என்பது கி.பி. முதல் மூன்று
நூற்றாண்டுகட்குட்பட்டது என்பதே சரியான முடிவாகத் தெரிகிறது.
பழமையும் இலக்கிய வளமும் கொண்ட மொழிகளை உயர்தனிச்
செம்மொழிகள் என்பர். கிரேக்கம், இலத்தீன், வடமொழி,
எபிரேயம், சீனம் ஆகியவற்றோடு ஒத்த பழைமையுடைய தமிழும்
இவ்வரிசையில் இடம் பெறுகிறது. மேற்சொன்ன பலமொழிகளிலும்
செய்யுட்கள் தொகுக்கப்பட்டுத் தொகை நூல்கள்
உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழில் அவை தோன்றியதில்
வியப்பில்லை.
சங்க காலத்தில் எண்ணற்ற தனிச் செய்யுட்கள்
இயற்றப்பட்டிருக்க வேண்டும். அவை கால வெள்ளத்தில்
அழிந்தன. எஞ்சியவற்றையாவது காப்பாற்ற வேண்டுமென்ற
உணர்ச்சி ஏற்பட்டமையால் கிடைத்தனவே இன்றுள்ள தொகைகள்.
இம்முயற்சியில் மன்னர்களும் அறிஞர்களும் ஈடுபட்டனர்.
அவர்களின் பெயர்கள் சில அறியப்படுகின்றன.
கிடைத்தவற்றுள் பெரும்பான்மையானவை அகவற்பாக்கள். கலி,
பரிபாடல் என்னும் பாவகைகளில் இயற்றப்பட்ட செய்யுட்கள்
குறைவாகவே இருந்தன. இவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை
அகப்பாடல்கள். புறப்பாடல்கள் குறைவாகவே இருந்தன.
இவற்றைத் தொகைப்படுத்தும் பொழுது அகத்தொகை,
புறத்தொகை, இரண்டும் கலந்த தொகை என்ற அடிப்படை
யிடப்பட்டதாகத் தெரிகிறது. அகவலால் செய்த அகப்பாடல்கள்
மிகுதியானமையால் செய்யுட்களின் அடிவரையினை
அடிப்படையாகக் கொண்டு தொகுதிகள் உருவாக்கப்பட்டன. 4-8,
9-12, 13-31 என்று அடியளவு அமைந்தவை மூன்று
தொகுதிகளாயின. ஐவர் பாடிய தனித்தனி நூறு செய்யுட்கள்
கொண்ட 500 அகவடிகள் ஒரு தொகையாயிற்று. கலிப்பாவால்
ஆன பாடல்கள் ஒரு தொகுதியாக உருவாக்கப்பட்டது.
பரிபாட்டால் ஆனது ஒரு தொகுதியாயிற்று.
புறப்பாடல்களுள் பல குடியினரையும் பல பொதுவான கருத்துக்
களையும் பற்றி அகவற்பாக்கள் ஒரு தொகுதியாக்கப்பட்டது. சேரர்
பற்றி மட்டுமே கூறும் 100 பாடல்களை இன்னொரு
தொகுதியாக்கினர்.
103 அடி முதல் 782 அடிவரை அமைந்த பத்து நீண்ட
பாடல்கள் பத்துப்பாட்டு என்று ஒரே தொகுதியாக அமைந்தது.
இவ்வாறு தொகுக்கப்பட்டவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
என்று வழங்கலாயின.
எட்டுத்தொகையுள் அடங்குவன எவை என்று கூறும்
வெண்பா வருமாறு:
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம்என்று
இத்திறத்த எட்டுத்தொகை.
இவ்வாறே பத்துப்பாட்டுள் அடங்குவன பற்றியும் ஒரு வெண்பா
கூறுகிறது. அது
பின்வருமாறு:
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடுல் வாடைகோல் குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.