Primary tabs
முதலாழ்வார் மூவருள் மூன்றாமவராக விளங்குபவர் இவர்.
இவர் தொண்டைநாட்டில் உள்ள சென்னை நகரின் ஒரு பகுதியான
திருவல்லிக்கேணிக்குத் தென்திசையிலுள்ள திருமயிலையில்
(மயிலாப்பூர்) ஒரு கிணற்றில் மலர்ந்த செவ்வல்லி மலரில்
உதித்தவர் என்பர். இவர் உதித்த புனித நாள் ஐப்பசி மாதம் சதய
விண்மீன் கூடிய நாள். இவர் திருமால் ஏந்திய வாள் படையின்
அமிசமாகப் பிறந்தார் என நம்புகின்றனர்.
இவர் திருமாலிடம் ஆழ்ந்த அன்புடையவர். இவருடைய பக்தி
வைராக்கியத்தால் இவர் செய்த செயல்கள் சராசரி மனிதரினும்
வேறுபட்டவராக இவரைக் காட்டின. தம்மை மறந்த நிலையில்,
பேய் பிடித்தவர் போல, கண்கள் சுழலும்படி விழுந்தார்; சிரித்தார்;
தொழுதார்; குதித்து ஆடினார்; பாடினார்; அலறினார். இதனால்
இவரைப் பேயாழ்வார் என்று யாவரும் கொண்டாடினர்.
பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார்களை அடுத்துப் பிறந்த
பெருமை திருமழிசைப் பிரானுக்கு உண்டு. இவர் காஞ்சிக்கு
அருகே உள்ள திருமழிசையில் பிறந்தவர். பார்க்கவர் என்னும்
முனிவரின் புதல்வர் இவர். இவரைப் பத்திசாரர் என்று புகழ்வர்.
இவர் சமயப் பொறையுடையவரல்லர்.
இவரைப் பேயாழ்வார் திருத்திப் பணி கொண்டார் என்கிறது
வைணவ சமய வரலாறு.
பேயாழ்வார் அருளியது மூன்றாம் திருவந்தாதி. இது
இயற்பாவில் இடம் பெற்றது. 100 வெண்பாக்கள் இதில் உள்ளன.
இத்திருநூல் திருக்கண்டேன் எனத் தொடங்கி, சார்வு நமக்கு
என்றும் எனத் தொடங்கும் வெண்பாவில் முடிகின்றது. இது
திருக்கோவலூரில் அருளிச் செய்யப்பட்டது.
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று
(அருக்கன் = கதிரவன்; செருக்கிளரும் = போர்க்களத்தில்
கிளர்ச்சியுடன் விளங்கும்; பொன்ஆழி = பொன்மயமான
சக்கரப்படை; சங்கம் = சங்கு; ஆழிவண்ணன் = கடல் நிறம்
கொண்ட பெருமான்.)
முதல் இருவர்போலவே இந்த ஆழ்வாரும் திருமாலின்
பல்வேறு அவதாரச் செய்திகளையும் பல செய்யுட்களிலும்
பாடியுள்ளார். திருமால் எழுந்தருளியுள்ள தலங்கள் பலவற்றைப்
பாராட்டியுள்ளார். அவற்றுள் வெஃகா, திருவேங்கடம்,
தென்குடந்தை, திருவரங்கம், திருக்கோட்டியூர் ஆகியவை
ஒருபாட்டிலேயே (62) குறிக்கப்பட்டுள்ளன.
இவரும் பொய்கையாழ்வார் போலவே சிவனையும்,
திருமாலையும் ஒருவராகவே காண்கின்றார். அஃதாவது சங்கர
நாராயணனாகக் காண்கின்றார்.
சூழ்அரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும்ஒன்றாய் இசைந்து (63)
திருமால் தானே தனக்கு உவமையானவன்; எல்லாத் தெய்வ
உருவங்களிலும் வெளிப்படுபவனும், தவ உருவும், விண்ணில்
மின்னும் விண்மீன்களும், தீயும், பெரிய மலைகளும்,
எட்டுத்திசைகளும், சூரியனும் சந்திரனும் ஆகிய இருசுடர்களும்
அவனே எனப் பாடுகிறார். (38)
இவ்வாழ்வார் சிறந்த கற்பனை வளம் மிக்கவர். இவர்
கற்பனைத் திறத்துக்கு எடுத்துக்காட்டாக,
திருமாலின் உந்தியில் உள்ள தாமரை அவர் கையில்
ஏந்தியுள்ள சக்கரத்தைக் காலைக் கதிரவன் என்று கருதி
மலர்கிறதாம். அவர் மற்றொரு கையில் ஏந்திய வெண் சங்கினைச்
சந்திரன் எனக் கருதிக் குவிகிறதாம் என்று பாடியதைக் கூறலாம்.
ஓங்கு கமலத்தின் ஒண்போது - ஆங்கைத்
திகிரிசுடர் என்றும்; வெண் சங்கம் வானில்
பகரும் மதி என்றும் பார்த்து (67)
(போது = மலர்)
பெருமாளின் திருமேனியில் ஈடுபட்ட ஆழ்வார்க்கு அவர்
உறுப்பு ஒவ்வொன்றும் தாமரை மலராகவே காட்சி தருகின்றது.
மண்ணளந்த பாதமும் மற்றவையே - எண்ணில்
கருமா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்
திருமா மணிவண்ணன் தேசு (9)
என்பது அவரது பாடல்.
திருமாலின் திருப்பெயரை ஓதிடுவார் யாவரும் ஒளியும்,
ஆற்றலும், செல்வமும், உருவச் சிறப்பும், உயர்குடிப் பிறப்பும், பிற
எல்லா நன்மைகளும் அடைந்து மகிழ்ச்சியாய் வாழ்வர் என உறுதி
படக்கூறுகின்றார். (10)
மலையில் நின்றும், நீரில் மூழ்கியும், ஐந்து நெருப்பிலே
(நாற்புறமும் தீ; மேலே கதிரவன்) நின்றும் தவம் செய்தவர் பெறும்
பேரின்பத்தை மலர் தூவிக் கைதொழுதவர்க்கு உடன் அளிப்பவர்
திருமால் என்கின்றார். (76)