Primary tabs
6.2 மரபுக்கவிதையும் புதுக்கவிதையும்
இருபதாம் நூற்றாண்டில் விடுதலைக்குப் பின்னும் மரபுக்
கவிதையானது பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்தது. மொழி,
சமுதாயச் சிந்தனை, பொதுவுடமைக் கொள்கை, தலைவர்களைப்
போற்றுதல், கவியரங்கக் கவிதைகள், பகுத்தறிவுக் கவிதைகள்
எனப் பல்வேறு தலைப்புகளில் மரபுக் கவிதைகள்
இயற்றப்பட்டன. மரபுக் கவிதையில் ஒரு பிரிவான குழந்தை
இலக்கியமும் நன்கு உருப் பெற்றது.
புதுக்கவிதையைப் பொறுத்த வரை 1945 வரை உள்ள
காலம் மணிக்கொடிக் காலம் என்பர் என முன்பே
கண்டோம். புதுக்கவிதை வளர்ச்சியில் 1970 வரையுள்ள
காலத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் அணியினர் என்றும்
1970க்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள் மூன்றாம்
அணியினர் என்றும் பிரிக்கலாம். புதுக்கவிதை நன்கு பரவிய
பின் புதுக்கவிதைக்கு என்றே 70க்கும் மேற்பட்ட இதழ்கள்
தோன்றின. எனினும் தமிழ் உலகில் மரபுக் கவிதையும்
புதுக்கவிதையும் அழியாமல் நிலைத்து வாழுகின்றனர்.
6.2.1 மரபுக் கவிதை
இக்காலத்தில் மரபுக் கவிதை இயற்றுவதில் சிறப்புடைய
புகழ் பெற்ற கவிஞர்கள் பலர் உள்ளனர்.
• மீ.ப. சோமசுந்தரம்
சோமு என்று அழைக்கப்படும் இவர் கவிதை
கவிதைக்காகவே எனும் தூய கவிதைக்காரர். இளவேனில்,
தாரகை, பொருநைக் கரையிலே, வெண்ணிலா என்ற
நூல்களைத் தந்தவர்.
வாணிதாசன், முடியரசன், கண்ணதாசன் முதலியவர்களும்
இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள்.
• சுரதா
உவமைக் கவிஞர், தன்மானக் கவிஞர் என்று பாராட்டப்
பெற்ற சுரதாவின் இயற்பெயர் ராஜகோபால், பாவேந்தரிடம்
பற்றுக் கொண்டு தன் பெயரை மாற்றியவர். 55ல் முதன்முதலில்
ஒரு கவிதை வார ஏட்டினை நடத்தினார். சாவின்முத்தம்,
தேன்மழை, உதட்டில் உதடு, பட்டத்தரசி, சுவரும்
சுண்ணாம்பும், துறைமுகம், வார்த்தை வாசல் போன்ற பல
கவிதை நூல்களைத் தந்தவர்.
• புத்தனேரி சுப்ரமணியம்
இவரும் பாவேந்தர் பரம்பரையினர். பொங்கல் விருந்து,
அம்புலிப்பாட்டுப் பாடாதே, பெரியார் அண்ணா பெருமை,
என்றும் இளமை, அரைமணிக்குள் இராமாயணம் என்பன
படைத்தவர்.
• குலோத்துங்கன் (வா.செ.குழந்தைசாமி)
தமிழ், தமிழினம், காதல், இயற்கை பற்றி அறிவியல், ஆக்க
நோக்கில் பாடுபவர். குலோத்துங்கன் கவிதைகள், வளர்க
தமிழ், வாயில் திறக்கட்டும் என்பன இவர் படைத்தவை.
• சாலை இளந்திரையன்
தமிழ் எழுத்துச் சீர்திருத்த மாநாடு, அறிவு இயக்க மாநாடு
நடத்தியவர். புரட்சிகரமான, சமுதாய, இலக்கியச் சிந்தனை
செழிக்கச் செய்தவர். இளந்திரையன் கவிதைகள், சிலம்பின்
சிறுநகை, பூத்தது மானுடம், வீறுகள் ஆயிரம், அன்னை நீ
ஆட வேண்டும், காலநதி தீரத்திலே, கொட்டியும்
ஆம்பலும் நெய்தலும் போலவே, காக்கை விடு தூது
என்பன இவரது படைப்புகள்.
• மரபுக் கவிதை வடிவங்கள்
இனி மரபுக் கவிதையின் வடிவங்களான காப்பியம்,
சிற்றிலக்கியம், புராணம் என்பன இக்காலத்திலும் வழங்கி
வருவதைக் காணலாம்.
காப்பியங்களில் இராவண காவியத்தை அடுத்து, எஸ்.கே.
ராமராசனின் மேகநாதம், சொ. அரியநாயகம் எழுதிய
வினோபாவின் வரலாற்றுக் காவியம், புரசை முருகேச
முதலியாரின் பார்த்தனை வளர்த்த பாட்டன், சாரண
பாஸ்கரனின் யூசுப் சுலைகா, கலைவாணனின் உதயம்,
டி.கே. ராமானுஜ கவிராயரின் மகாத்மா காந்தி மகாகாவியம்,
வே.சந்திரசேகரனின் காந்தீயம், மனசை கீரனின் காமராஜ்
காவியம், ஜெகவீர பாண்டியனாரின் கண்ணகி காவியம்,
பாஞ்சாலங்குறிச்சி வீரகாவியம், சுத்தானந்த பாரதியின்
பாரதசக்தி மகாகாவியம், முடியரசனின்
வீரகாவியம்,கருணாநந்தம் எழுதிய அண்ணா காவியம், பாரி
எழுதிய பெரியார் பெருங்காவியம் என்பன தோன்றிக்
காப்பிய இலக்கியத்தைத் தொடர்ந்துள்ளன.
அசலாம்பிகை அம்மையார் காந்தி புராணமும், திலகர்
புராணமும் எழுதியுள்ளார்.
சிற்றிலக்கியங்களில் சில வகைகளும் தற்காலத்தில்
அழியாமல் படைக்கப்பட்டுள்ளன. காமாட்சி நாதனின்
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ், புலமைப்பித்தனின்
பெரியார் பிள்ளைத்தமிழ், முத்துலிங்கத்தின் எம்.ஜி.ஆர்.
பிள்ளைத்தமிழ், அமிர்தலிங்கரின் ம.பொ.சி. பிள்ளைத்தமிழ்,
இரா. செந்தாமரையின் பெரியார் உலா, அ.கு. ஆதித்தரின்
தமிழ்ச் செல்வி உலா, காமராசர் உலா, புலவர் இரா.
மணியனின் அண்ணா கோவை, அ.கு. ஆதித்தரின்
அண்ணாத்துரைக் கோவை, கி. அரங்கசாமி எழுதிய
திராவிடப் பரணி, அரங்கசீனிவாசன் எழுதிய
வங்கத்துப் பரணி, இளந்தேவனின் இந்தியப் பரணி,
சி. இலக்குவனாரின் மாணாக்கர் ஆற்றுப்படை, வெள்ளை
வாரணனாரின் காக்கைவிடு தூது, துரை. சீனிவாசனின்
கூட்டுறவுக் குறவஞ்சி என்பன சிற்றிலக்கியத்தை மறைந்து
போகாமல் செய்து வருகின்றன.
6.2.2 புதுக்கவிதை
சி.சு.செல்லப்பா தொடங்கிய எழுத்து இதழில் புதுக்கவிதை
எழுதியவர்கள் ஒரு பெரிய அணியாகத் திரண்டனர். கே.
இராசகோபால், நீல. பத்மநாபன், நகுலன், பாலகுமாரன்,
கலாப்பிரியா, ஞானக்கூத்தன் போன்றோர் தொடர்ந்து
புதுக்கவிதையின் வளர்ச்சிக்குப் பணியாற்றினர். ந.பிச்சமூர்த்தி,
சி.மணி, பசுவய்யா, வைத்தீஸ்வரன், தி.சொ. வேணுகோபாலன்,
பிரமிள், ஆத்மாநாம், தேவதேவன், ஆனந்த், தேவதச்சன்
முதலியோரின் பங்கும் தொண்டும் குறிப்பிடத்தக்கவை.
மரபுக்கவிதையில் மேம்பட்டிருந்த, முறையாகத் தமிழ் கற்ற
பேராசிரியர்களான அப்துல் ரகுமான், இன்குலாப், சிற்பி,
தமிழன்பன், மீரா, மேத்தா போன்றோர் வருகையால்
புதுக்கவிதை புத்தொளி பெற்றது. 70-இல் கோவையில் கூடிய
கட்சிச் சார்பற்ற முற்போக்குச் சிந்தனையுடைய சமூக நோக்கில்
இலக்கியப் பணியாற்றும் கவிதை இயக்கம் தன்னை
வானம்பாடிகள் என்று அறிவித்துக் கொண்டது.
ஞானி, சுந்தரம், புவியரசு, இளமுருகு, அக்னி புத்திரன்,
முல்லை ஆதவன், மீரா, இன்குலாப், சிற்பி, தமிழன்பன், கங்கை
கொண்டான், மேத்தா போன்றோர் வானம்பாடி இயக்கத்தைச்
சேர்ந்தவர்கள். இவர்கள் புதுக்கவிதை வளர்ச்சியின் இரண்டாம்
அணியினர்.
வானம்பாடி, ழ, தடம், காற்று, கொல்லிப்பாவை,
கூத்து, சோதனை, புகழ், தெறிகள், தேனலைகள்,
நடைபாதை, கவனம், விழிகள், யாத்ரா என 70-க்கும்
மேலாகப் புதுக்கவிதை ஏடுகள் இயங்கின. தற்போது அவை
குறைந்து விட்டன. புதுக்கவிதைகளை வெளியிடுவதில் தாமரை
இதழ் தனியிடம் பெறுகிறது. நடை, குருச்சேத்திரம்,
கணையாழி, கசடதபற போன்ற இதழ்கள் வாயிலாகப்
புதுக்கவிதை இயக்கம் தொய்வுறாமலும் தொடர்ச்சி பெற்றும்
வந்தது.
2-ஆம் அணியின் வளர்ச்சியினால் 1970க்குப் பின்
மானுடம் பாடும் வானம்பாடி இயக்கம் தோன்றியது. தெளிவான
உள்ளடக்கம், புதுவகை உத்திகள், உருவகச்சிறப்பு, அளவும்
அழகுமுடைய படிமம், குறியீடு, ஓசைநயம் போன்றவற்றால்
இவ்வணியினர் புதுக்கவிதையை வளம்பெறச் செய்தனர். மரபுக்
கவிதைத் துறையில் சாதனைகள் புரிந்துவிட்டுப் புதுக்கவிதைத்
துறைக்கும் வந்து சாதனை புரிந்தவர்கள் நா. காமராசன், மீரா,
அப்துல் ரகுமான், தமிழ்நாடன், மு. மேத்தா ஆகியோர். சிற்பி.
புதுக்கவிதைத் துறைக்கு இன்குலாப், அபி, புவியரசு, கங்கை
கொண்டான், ஞானி, பாலா, சக்திக்கனல் ஆகியோர் நேரடியாக
வந்தவர்கள்.
• சி. மணி
புதுக்கவிதையில் நெடுங்கவிதை புனைகின்ற முயற்சியில்
இறங்கி நரகம் என்ற சிறப்பான படைப்பை உருவாக்கியவர்
விமர்சனக் கவிஞர் எனப் போற்றப்படுகிறார்.
தவளைக்குப் பாம்பின் வாய் விரிப்பாய்
அவள் வியப்பின் விழி விரிப்பை - காண்கிறார்.
நிலவே!
உன்னிடமிருந்து வெளிநாட்டவர்கள்
கல்லெடுத்து வருகிறார்கள்
நாங்கேளா இன்னமும்
அரிசியில் கல்லெடுத்துக் கொண்டிருக்கிறோம்
எனக் கேலி பேசுகிறார்.
• சிற்பி

பொறுப்பாசிரியர். நிலவுப்பூ, ஒளிப்பறவை,
சிரித்த முத்துகள், சர்ப்பயாகம்,
புன்னகை பூக்கும் பூனைகள்,
போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.
மணியடிச்சாப் பணிதுவங்கும் வாத்தியாரு வேலை
மலிவுப்பதிப்பா ஆகிப்போச்சு வாத்தியாரு வேலை
..... .................... ............... ........... ......... ................. ..........
........... ............... ......... ............. ........... .......... .........
சாகுமட்டும் ஆசிரியன் வாழ்க்கை பெருந்தொல்லை!
திருமணமார்க் கட்டில் இவரைப் பெண்களும் மதிக்காது
மார்க்போடும் சீசனிலே ஏதோ கொஞ்சம் கிராக்கி
மற்ற நாளில் இவரு வெத்து வேட்டு எழும் துப்பாக்கி
என்கிற கவிதை யதார்த்தத்துடன் நகைச்சுவை கலந்தது.
• அப்துல்ரகுமான்
கவிக்கோ என்று பாராட்டப் பெற்றுள்ளார். இவர்,
பால்வீதி, நேயர் விருப்பம் போன்ற பல நூல்களைப்
படைத்துள்ளார்.
தீப மரத்தின்
தீக்கனி உண்ண
விட்டில் வந்தது
கனியோ
விட்டிலை உண்டது
(பால்வீதி)
• இன்குலாப்
இன்குலாப் கவிதைகள், வெள்ளை
இருட்டு போன்றவை படைத்த இவர்
இடதுசாரிக் கவி. நீங்கள் என்னைக்
கம்யூனிஸ்டு ஆக்கினீர்கள், தொங்கு
தோட்டம் என்பன சிந்தனைக்கு விருந்து
அளிப்பவை.

• நா. காமராசன்
பகுத்தறிவையும் சோசலிசத்தையும் இரு கண்களாகக்
கொண்டு பாடுபவர். படிமக் கவிஞர். கறுப்பு மலர்கள்,
பூமிச்சருகு, ராஜதிரவம் என எழுதுபவர். கிறுக்கல்கள்,
நாவல்பழம், மகாகாவியம், சூரியகாந்தி, சகாராவைத்
தாண்டாத ஒட்டகங்கள், ஆப்பிள் கனவு போன்ற பல
நூல்களைப் படைத்துள்ளார்.
• மு. மேத்தா

செருப்புடன் ஒரு பேட்டி, தேசப்பிதாவுக்குத்
தெருப்பாடகனின் அஞ்சலி என்ற இவரது
கவிதைகள் புகழ் பெற்றவை. இவர் படிமக்
கவிஞரும் ஆவார்.
• ஹைக்கூ கவிதைகள்
ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைக்கூ மூன்றடி
கொண்டது. தமிழில் எண்பதுகளில் தான் ஹைக்கூ தோன்றியது.
84 முதல் அச்சில் வந்தது. அமுதபாரதியின் புள்ளிப் பூக்கள்,
காற்றின் கைகள், ஐக்கூ அந்தாதி என்பனவும் அறிவுமதியின்
புல்லின் நுனியில் பனித்துளி, கம்ப்யூட்டர் மனிதர்கள்,
தமிழன்பனின் சூரியப் பிறைகள், கழனியூரனின் நிரந்தர
மின்னல்கள், நட்சத்திர விழிகள் என்பன குறிப்பிடத்தக்கன.
ஹைக்கூ கவிதைகளில் ஆய்வு செய்த நிர்மலா சுரேஷ், மித்ரா
என்போர் பெண் கவிஞர்கள்.
நிலவென்ன மேற்பார்வையோ
வானம் விழாதிருக்க
எத்தனை நட்சத்திர ஆணிகள்
என்ற ஹைக்கூ கவிதை அமுதபாரதி எழுதியது.