தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 5.7-தொகுப்புரை

5.7 தொகுப்புரை

குடும்ப வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி என்னும்
அடிப்படையைக் கொண்டவர் பாரதிதாசன். எனவே, தனது
குடும்பவிளக்கு நூலில் நடுத்தரக் குடும்பம் ஒன்றைப் படைத்துக்
காட்டியுள்ளார். குடும்ப அமைப்பில் பலர் இடம் பெற்றிருப்பதை
உணர்த்தியுள்ள அவர் ஒவ்வொருவருக்கும் இடையில புரிதல்
வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சிறந்த புரிதல் கொண்ட குடும்பத்தை அவர் நல்ல
குடும்பம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நல்ல குடும்பத்தைப்
பல்கலைக் கழகத்துடன் ஒப்புமைப்படுத்தி ஒவ்வொரு குடும்பமும்
அறிவின் விளக்கமாக அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

குடும்பத்தில் பலர் இருந்தாலும் பெண்ணே முதன்மை இடத்தைப்
பெறுகிறாள் என்ற கருத்தில் குடும்ப விளக்கில் தலைவியைப்
படைத்துக் காட்டியுள்ளார் பாரதிதாசன். அதிகாலையில் கதிரவன்
தோன்றுவதற்கு முன்பே துயில் எழும் தலைவி ஒருநாள் முழுவதும்
குடும்பத்தில் ஆற்றும் கடமைகளை ‘ஒருநாள் நிகழ்ச்சி’ என்ற
தலைப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

காலை முதல் மாலை வரை வீட்டு வேலை, குழந்தைகள் வளர்ப்பு
என்று சுழன்று வேலை செய்த பெண், தன் கணவனுக்காகக்
கடைக்குச் சென்று உதவியதையும் படைத்துக் காட்டியுள்ளார்.

குடும்பம் என்றால் மாமனார், மாமியார், மருமகள் என்ற மூவருக்குள்
கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் ஏற்படும் என்பதை நாம்
அறிவோம். அதற்கு மாறாக, கணவனின் பெற்றோரைத் தனது
பெற்றோரைப் போல் கருதும் தலைவியையும், மருமகளைத் தனது
மகளைப் போல் கருதும் மாமனார் மாமியாரையும் படைத்து,
குடும்பச் சிக்கலுக்கு விடை கண்டுள்ளார் பாரதிதாசன்.

குடும்ப நலத்துடன் சமுதாய நலமும் இணைந்துள்ளது என்பதை
நன்கு அறிந்தவர் பாரதிதாசன். எனவே, தமது குடும்ப விளக்கில்
தலைவியைப் பொதுநல எண்ணம் கொண்டவளாகவும் தமிழ்ப் பற்று
மிகுந்தவளாகவும் காட்டியுள்ளார்.


பயில்முறைப் பயிற்சி - III

நண்பர்களே, கவியரசர் கண்ணதாசனின் “பார்த்தேன்,
சிரித்தேன், பக்கம் வரத் துடித்தேன்” என்ற பாடலைக்
கேட்டிருக்கிறீர்களா? அவ்வினிய திரைப்பாடலின் (வீர
அபிமன்யு) சில வரிகளை இதோ கேட்டுப்பாருங்கள்!

‘தேன்’ என்ற தொடர் தனிச் சொல்லாகவும் (உனைத்தேன்
என; ஒரு படித்தேன்; மலைத்தேன்), சொல்லின்
பகுதியாகவும் (துடித்தேன்; நினைத்தேன்; குடித்தேன்;
சுவைத்தேன்) மீண்டும் மீண்டும் பாடலில் வருவதைக்
கவனித்தீர்களா? இதே உத்தியில் கண்ணதாசனுக்கு
முன்பே புரட்சிக்கவிஞர் ‘படி’ என்ற தொடரை மடக்கி,
மடக்கித் தன் கவிதையில் கையாண்டுள்ளார். அவ்வாறு
அமைந்த செய்யுள் வரிகள் சில இப்பாடத்தில்
மேற்கோளாகக்     கையாளப்     பெற்றிருக்கின்றன.....
கண்டுபிடித்து விட்டீர்களா? ‘படி’ என்ற தொடரை எந்தப்
பொருளில், என்னென்ன வகையில் கையாண்டிருக்கிறார்
என்று பாருங்கள்! கவிதைக்கு இது ஒரு வகை அலங்காரம்.
கவிஞரின் சொல்லாட்சித் திறனுக்கு இது ஒரு சான்று.



(140kb)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)