தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மை ஒருமை வினைமுற்று

2.2 தன்மை ஒருமை வினைமுற்று

    தன்மை வினைமுற்றுச் சொற்களை இருவகையாகப்
பாகுபடுத்தலாம்.

    இவற்றையே காலம் உணர்த்துவதன் அடிப்படையில்,
தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என மேலும்
இருவகையாகப் பிரிக்கலாம். தெரிநிலை வினைமுற்று -
காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது. குறிப்பு வினைமுற்று
காலத்தைக் குறிப்பாகக் காட்டுவது.

இவற்றின் இயல்புகளை அடுத்தடுத்த பிரிவுகளில் முறையே
காண்போம்.

2.2.1 தெரிநிலை வினைமுற்று

நான் வந்தேன்
நான் வருகிறேன்
நான் வருவேன்

    இம்மூன்றும் தன்மை வினைமுற்றுகளே. இவை தமக்குள்
எவ்வாறு வேறுபடுகின்றன? இவை உணர்த்தும் காலத்தால்
வேறுபடுகின்றன. ‘வந்தேன்’ என்பது இறந்த காலம்: வருகிறேன்
என்பது நிகழ்காலம்; வருவேன் என்பது எதிர்காலம்.
இவ்வினைமுற்றுகளில் காலத்தை உணர்த்தும் உறுப்புகள் எவை
எனக் காண்போம்.

வா+
த்+
த்
+ஏன்
வா+
கிறு
+ஏன்
வா+
வ்
+ஏன்

    இவற்றில் ‘த்’ இறந்த காலத்தையும், ‘கிறு’ நிகழ்
காலத்தையும், ‘வ்’ எதிர்காலத்தையும் உணர்த்துகின்றன. இவை
இடைநிலைகள் எனப்படும். இவ்வாறு இடைநிலைகள் அமைந்த
வினைமுற்றுகளையே தெரிநிலை வினைமுற்றுகள் என்கிறோம்.

    பழந்தமிழில், இப்போது வழக்கில் இல்லாத ஒருவகைத்
தன்மை     வினைமுற்று     இருந்தது.     அவ்வினைமுற்று
இடைநிலையால் அல்லாமல், விகுதியைக் கொண்டே காலம்
உணர்த்தும். இதுபற்றி இப்பாடத்தின் இறுதியில் (2.4.1 & 2.4.2)
காண உள்ேளாம்.

    தன்மை ஒருமை வினைமுற்றுகள் கீழ்வரும் மூன்று
பால்களுக்கும் பொதுவாக உரியன.

(1) உயர்திணை ஆண்பால்
(2) உயர்திணைப் பெண்பால்
(3) அஃறிணை ஒன்றன்பால்

    இவை பால் உணர்த்தாதனவாய், எண் (ஒருமை,
பன்மை) மட்டுமே உணர்த்துவனவாய் வரும் என முன்னர்க்
கூறியது நினைவில் இருக்க வேண்டும். இங்கு ஓர் ஐயம்
தோன்றக்கூடும். வந்தேன் என்பது உயர்திணை ஆண்பாலையோ
பெண்பாலையோ குறிக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள
முடிகிறது. அஃறிணை ஒன்றன்பாலை, அது எப்படிக் குறிக்கும்?
விலங்கு, பறவை, மரம் போன்ற அஃறிணைப் பொருட்கள் ‘நான்
வந்தேன்’ ‘நாங்கள் வந்தோம்’ என்று பேசுமா என்று நீங்கள்
கேட்கலாம். அவை பேசுவதில்லை தான். ஆனால் கதைகளில்
இலக்கியங்களில் அஃறிணைப் பொருள்கள் பேசுவது போலவும்
பிறர்பேச்சைக் கேட்பது போலவும் வரும் நிகழ்ச்சிகளை நீங்கள்
கண்டிருப்பீர்கள். அவ்வாறு வரும்போது அஃறிணைப்
பொருள்களையும் தன்மை வினைமுற்று உள்ளடக்கும்
என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

வந்தேன்
இச்சொற்கள்
ஆண்
-
ஒருமை
கண்டேன்
பெண்
-
ஒருமை
சென்றேன்
அஃறிணை
-
ஒருமை

எனும் மூன்று பொருளுக்கும் பொருந்தி வரும்.

    இன்றைய வழக்கில் தன்மை ஒருமை வினைமுற்றில்
இடம்பெறும் விகுதி ஏன் என்பது தான்.

பேச்சு வழக்கில் என் விகுதி ஏன் விகுதியைப்போல் இடம்
பெறுவதில்லை. பழைய இலக்கிய வழக்கில்தான் இது கையாளப்
படுகிறது.

(எ.கா)

என் விகுதி
வந்தனென்
வருகின்றனென்
வருவென்

அன் என்னும் விகுதியும் தன்மை, ஒருமைக்கு வரும் என்பர்
இலக்கண நூலார். அன் படர்க்கையிலும் வரும் ஆதலால்,
அவ்விடங்களில் வினைமுற்றுடன் உள்ள பெயரை வைத்தே
படர்க்கையா, தன்மையா என முடிவு செய்ய வேண்டும்.

(எ.கா)

வந்தனன் யான்
-
அன் விகுதி
-
தன்மை இடம்
வந்தனன் அவன்
-
அன் விகுதி
-
படர்க்கை இடம்

2.2.2 குறிப்பு வினைமுற்று

    குறிப்பு வினை என்பது தெரிநிலை வினையைப் போல்
வெளிப்படையாகக் காலம் காட்டாது. பேசுவோர் கேட்போர்
குறிப்புக்கு ஏற்ப அது காலங்காட்டுவதாகும். காலம் காட்டும்
இடைநிலைகள் குறிப்பு வினைமுற்றுச் சொற்களில் இடம்
பெறுவதில்லை. விகுதிகளைப் பொறுத்தவரை தெரிநிலை
வினையில் வரும் என், ஏன், விகுதிகளே குறிப்பு வினையிலும்
வரும். தெரிநிலை வினையிற் போலவே இவை ஆண்பால்,
பெண்பால், ஒன்றன் பால்களுக்குப் பொதுவாக வரும்.

(எ.கா)

நான் கரியென் - என்
நான் கரியேன் - ஏன்

    இத் தொடர்களில் கரியென், கரியேன் என்னும்
சொற்கள் குறிப்பு வினைமுற்றுகள்.

    இவை எவ்வாறு குறிப்புவினைமுற்றுகள் ஆகின்றன? நான்
கரியென்
(நான் கரியவன்) எனும் தொடரில் வரும் ‘கரியென்’
என்பதன் பொருள் ‘கரியவனாக இருக்கிறேன்’ என்றோ,
கரியவனாக இருந்தேன்’ என்றோ ‘கரியவனாக இருப்பேன்’
என்றோ வரும். சூழ்நிலையை ஒட்டித்தான் காலம் கண்டு
பிடிக்க முடியும்.

நான் நேற்றுக் கரியென்
நான் இன்று கரியென்
நான் நாளை கரியென்

    எனவரும் தொடர்களில் ‘கரியென்’ எனும் வினைமுற்றின்
காலத்தை அருகில் உள்ள நேற்று, இன்று, நாளை எனும்
சொற்களைக் கொண்டு காணமுடிகிறதல்லவா! இவ்வாறு
வருவதுதான் குறிப்பு வினைமுற்று.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.

தன்மை வினைமுற்று என்பதில் ‘தன்மை’ என்பதன் பொருள் யாது?

2.

தன்மை வினைமுற்று விகுதிகளால் அறியப்படுவன யாவை?

3.

தன்மை ஒருமை வினைமுற்றுக்கு இரண்டு
எடுத்துக்காட்டுகள் தருக.

4.

இன்றைய பேச்சு வழக்கில் மிகுதியாக வழங்கப்பெறும் தன்மை ஒருமை விகுதி யாது? சான்றுடன் தருக.

5.

தன்மை ஒருமை-குறிப்பு வினைமுற்றுச் சொற்கள் இரண்டு எழுதுக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:31:21(இந்திய நேரம்)