தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.4

6.4 வேதியியல் (Chemistry)

பொருள்களின் மூலக் கூறுகளையும், அந்த மூலக் கூறுகள் எந்தச்
சூழ்நிலையில் ஒன்றோடு ஒன்று வினைபுரிகின்றன என்பதையும்
விவரிக்கும் அறிவியல் துறை வேதியியல் என அழைக்கப்படும்.இந்த
வேதியியல் பிரிவில் ஒன்று மண் வேதியியல் (Soil-Chemistry)
என்பதாகும்.


6.4.1 மண் வேதியியல்

ஒரு செடி தள தளவென மிகவும் நன்றாகச் செழித்து வளருவதைப்
பார்க்கும் பொழுது, அது சார்ந்திருக்கும் நிலம், நல்ல வளம்
பொருந்திய செழிப்பானது என்று குறிப்பிடுகின்றனர்.

• நிலமும் பயிரும்
சில நிலத்தின் தன்மையைப் பொறுத்து, அந்த நிலத்தில்
பயிரிடுகின்றனர். எடுத்துக் காட்டாக, தமிழ் நாட்டிலேயே தஞ்சாவூர்
மாவட்டப் பகுதியில் மூன்று முறை அறுவடை செய்வர். மதுரை
மாவட்ட பகுதியில் இரண்டு முறையே அறுவடை செய்வர். இதை
மூன்று போகம் விளையும் நிலம் தஞ்சாவூர்ப் பகுதி என்றும்,
இரண்டு போகம் விளையும் நிலம் மதுரைப் பகுதி என்றும்
விவசாயிகள் குறிப்பிடுவர். இத்தகைய பயிரிடுதல் மேற்குறிப்பிட்ட
பகுதிகளிலுள்ள     நிலங்களின்     தன்மையைப் பொறுத்தே
அமைந்துள்ளது.

கரிசல் (Arid) நிலப்பகுதியில் பருத்தி (Cotton) மட்டுமே விளையும்.
அதை மட்டுமே பயிரிடுவர்.

• வேதியியல் தத்துவம்
மேற்குறிப்பிட்ட செய்திகளிலிருந்து என்ன தெரிகிறது? ஒரு
நிலத்தின்மையை அதில் வளரும் செடிகளின் வாயிலாக
அறிந்து கொள்ளலாம். இந்த உண்மையைப் பற்றி ஆயும்
அறிவியல் துறையே மண் வேதியியல் என்பதாகும்.

மண் வேதியியல் கூறும், இந்தத் தத்துவத்தை வள்ளுவர்,
உவமையாகக் கையாளுகிறார்.

குடிச்சிறப்பு உடைய ஒருவனது இயல்பைக் குறிப்பிடும்பொழுது,


நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்


(குறள்: 959)


(கால் = முளை, காட்டும் = வெளிப்படுத்தும்)

என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

நிலத்தினுள் அமைந்து கிடக்கும் மண்ணினது இயல்பை அதில்
முளைத்த பயிர்கள் எவ்வாறு புறத்தே காட்டுமோ, அவ்வாறே,
ஒரு நல்ல குலத்தில் தோன்றியவரது இயல்புகளை அவர் பேசும்
சொற்களே காட்டிவிடும் என்கிறார் வள்ளுவர்.

• தமிழ்ப் பழமொழி
‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பது தமிழில் வழங்கி
வரும் ஒரு பழமொழி. நிலத்தின் இயல்பை முளைத்த விதையின்
முளை தெரிவிக்கும். முளையின் நலமே விளையக்கூடிய பயிரின்
தன்மையைக் காட்டும். என்பது இப்பழமொழியின் பொருள்.
இத்தகைய உண்மைகளை எல்லாம் தன் பட்டறிவினால்
(Experience) அறிந்திருந்த வள்ளுவர், நல்ல குலத்தில்
பிறந்தாரின் வாய்ச்சொல் அவர்களது இயல்பை வெளிப்படுத்தும்
என்பதற்கு உவமையாக, மண் வேதியியல் தத்துவத்தைக்
குறிப்பிடுகிறார்.


என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம்.


(குறள்: 77)


(என்பு = எலும்பு, இலதனை = இல்லாததை, காயும் = துன்புறுத்தும்)

பிறரிடம் அன்பு செலுத்துவதின் தேவையை, அதன் பெருமையைக்
குறிப்பிடவந்த வள்ளுவர். விலங்குகள்     பற்றிய     ஓர்
அறிவியல் உண்மையையும் வெளிப்படுத்துகிறார்; புழு பூச்சி
என்றோ, பிற உயிரனங்கள் என்றோ வள்ளுவர் குறிப்பிட்டிருக்கலாம்.
சொல்ல வந்த பொருளை விளக்குவதற்கு உரிய உவமையாக
அது அமைந்திருக்கும். ஆனால், எலும்பு இல்லாத விலங்குகள் என
இனம்பிரித்து     ‘என்புஇல்’ என்று ஏன் கூறவேண்டும்?
விலங்கினங்களில் எலும்பு உடையவை, எலும்பு இல்லாதவை என்று
இரு பிரிவுகள் உண்டு. எலும்பு உடைய குதிரை, யானை, மாடு
போன்றவை     வெயிலின்     வெம்மையை     ஓரளவுக்குத்
தாங்கிக்கொள்ளும். வெயிலின் வெம்மை அதிகரித்தால் அந்த
இடத்தைவிட்டு நகர்ந்து, வெயில் இல்லாத பாதுகாப்பான
இடத்திற்குச் சென்று விடும். ஆனால் வெயிலின் வெம்மையைக்
கொஞ்சம் கூடத் தாங்கிக் கொள்ள இயலாத பூச்சிகள் புழுக்கள்,
அந்த இடத்தை விட்டு நகரமுடியாமல் துடி துடித்துக் கொண்டு
துன்புறும். எனவேதான், எலும்பு இல்லாத இனத்தைச் சார்ந்தவை
என இனம் பிரித்து உயிரினங்களைச் சுட்டுகிறார். தான்
அறிந்திருந்த விலங்கியல் உண்மையினைத் தான் சொல்லவிரும்பிய
கருத்துக்கு உவமையாகக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)