தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.5

6.5 இயற்பியல் (Physics)

பொருள்களின் தன்மை, இயற்கைச் சக்திகளின் இயக்கம், மாற்றம்
முதலியவற்றை விவரிக்கும் ஓர் அறிவியல் துறை இயற்பியல்
என அழைக்கப்படுகிறது. இத்துறையில் பல்வேறு நிலையில் பல
கண்டுபிடிப்புகள் (inventions) நிகழ்ந்துள்ளன. அவற்றுள் ஒன்று
எதிர் ஒளிப்பு என்னும் கோட்பாடாகும்.


6.5.1 எதிர் ஒளிப்பு (Reflection)

தன் பக்கத்திலிருக்கும் ஒரு பொருளின் பிம்பத்தைப் பிரதிபலித்துக்
காட்டும் இயல்பு கண்ணாடிக்கு உண்டு. இதனை இயற்பியலில் ‘எதிர்
ஒளிப்பு‘ என்று குறிப்பிடுவர். ஒருவரின் முகத்தைப் பார்த்த
உடனேயே அவன் எத்தகையவன், அவன் உள்ளத்தில் என்ன
நினைத்துக் கொண்டிருக்கிறான், இதை அவனது முகமே காட்டி
விடும். இதை விளக்க வந்த வள்ளுவர், மேற்குறிப்பிட்ட
இயற்பியல் தத்துவத்தை ஓர் உவமையாகக் கையாளுகிறார்.

தன்னை அடுத்திருக்கும் பொருளினது வண்ணத்தை அல்லது
பிம்பத்தை, இருந்தவாறே தன்னுள் பெற்றுக் காட்டுவது கண்ணாடி.
அதுபோல் ஒருவனது நெஞ்சத்தில் உணர்ச்சி மிகுந்து எழுந்த
கருத்தை அவனது முகம் தானே வெளிப்படுத்திக் காட்டி விடும்
என்று விளக்குகிறார் வள்ளுவர்.


அடுத்தது காட்டும் பளிங்குபோல், நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்


(குறள்: 706)


(அடுத்தது = அருகில் இருப்பது, பளிங்கு = கண்ணாடி,
கடுத்தது
= குறித்தது)

குழந்தையின் முகத்தைப் பார்த்து     உடனேயே தாய்,
குழந்தையின் உள் உணர்வுகளைப் புரிந்து கொள்வாள். அதற்கு
இணங்க, குழந்தைக்குத் தேவையானவற்றைக் கொடுப்பாள்.
ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு வாழும் போதும்,
அவர்களது முகக்குறிப்பை அறிந்து பழகுவோம், அல்லது
செயல்படுவோம். இந்த நடைமுறை உண்மையை விளக்க வந்த
வள்ளுவர், அடுத்ததைக் காட்டும் பளிங்கை உவமையாகச்
சொல்லுகிறார். பளிங்கின் இயல்பை அறிந்தவர் வள்ளுவர்.
அறிவியல் சார்ந்த அந்த இயல்பைத் தான் சொல்ல விரும்பிய
கருத்தைப் புரிய வைப்பதற்குப் பயன்படுத்துகிறார். தனக்கு இருந்த
அறிவியல் அறிவை வெளிப்படுத்தித் தன் கருத்தைப் புரிய
வைக்கிறார் வள்ளுவர். மேலும் வள்ளுவர் காலத்திலேயே
கண்ணாடி பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்ற உண்மையையும்
இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)